search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ootty"

    • கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

    ஊட்டி

    கேரள வன பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூா் வன கோட்டத்தில் உள்ள சேரம்பாடி வனசரகம் வென்ட்வொா்த் எஸ்டேட், கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.

    இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

    உடனடியாக வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். கால்நடை டாக்டர் தொடர்ந்து யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதில் குணமாகவே அந்த யானை மீண்டும் கேரள வனப் பகுதிக்குள் சென்றது.

    பின்னா் மீண்டும் உடல்நிலை மோசமடைந்த யானை சேரம்பாடி வனச் சரக பகுதிக்கு வந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனா். இதன் முடிவுகள் வந்த பிறகே யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

    • இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.


    இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது. 

    இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது.
    • There is a risk of soil erosion in an area of ​​68 thousand hectares due to rainfall.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் சார்பில், விவசாயிகளுக்கு 'மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள்' குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமில் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், விவசாயிகளுக்கு மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரியில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காய்கறி சாகுபடி செய்ததால், மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் மண் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு நிலவும் சூழல், மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட உதவுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு உள்ளதுடன், அபாயகரமான வகையில் மண் அரிப்பு ஏற்படுகிறது.

    அதிக மழைப்பொழிவு நீலகிரியில் அதிக மழைப்பொழிவால் 68 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வளமான மண் இழப்பு மற்றும் மகசூல் குறைவு ஏற்படுகிறது. வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் படிகிறது. இதனால் நீர்நிலைகளின் கொள்ளளவு குறைவதோடு, வெள்ளம் ஏற்படுகிறது.


    இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, படிமட்டங்கள் முறையில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு விளைச்சலை அதிகரித்து உள்ளது. மேலும் 50 சதவீதம் நீரோட்டம் குறைந்து, 98 சதவீதம் மண் இழப்பும் குறைந்து உள்ளது. எனவே, விவசாயத்தில் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் 375 விவசாயிகளுக்கு 15 சுற்றுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    • பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
    • மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.


    இங்கு தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.


    எனவே, சுற்றுலா வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் மிகவும் கவனமுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டும் என்று குன்னூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    • யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
    • புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்கா–புரம்,சிங்காரா, மாயார், தெப்பக்காடு, கார்குடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

    இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.இதனால், சாலை–யோரங்களிலேயே வனவிலங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. குறிப்பக, மசினகுடி - தெப்பக்காடு சாலை, தெப்பக்காடு -கூடலூர் சாலையில் காட்டு யானைகள் அதிகளவு வலம் வருகின்றன.

    அதேபோல், புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஆச்சிரியத்திற்குள்ளாக்கி வருகிறது.

    கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது மசினகுடி மற்றும் முதுமலை வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலையில் அதிகளவு மான் கூட்டங்கள் காணப்படுகிறது. அதேபோல், யானைகளும் அடிக்கடி வலம் வருகின்றன. இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, வாகனங்களில் இருந்தவாறு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேனாடு கம்பை அறக்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் பணியாற்றி வரும் நிஷாந்த் என்பவரது 4 வயது மகளை புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வனத்து றையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டிக்கு அனுப் பினர்.தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாவட்ட வன அலுவலர் சச்சின் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், சிறுத்தை தாக்கி குழந்தை இறந்த அரக்காடு பகுதியில் 2 இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    • வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா தேவாலா அருகே வாழவயல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் 2 காட்டு யானைகள் புகுந்தது.

    தொடர்ந்து இளையராஜா என்பவரது கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து மணிகண்டன், சுலைக்கா, பெரியசாமி, வளர்மதி, சிவன் கருப்பன், முத்துமாரி ஆகியோரது வீடுகளை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தின. ஒரே நாள் இரவில் காட்டு யானைகள் 6 வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதை கண்டித்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.

    தகவல் அறிந்த கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து வனத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டு வந்தது. மேலும் இவரது வீடு தனியாக உள்ளதால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.

    இதன் காரணமாக அவர் இரவில் உறவினர்கள் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி வந்தார்.நேற்று காலை தனது வீட்டுக்கு வந்தபோது காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தாக்குதலால் நிம்மதியை இழந்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியுடன் கூறினர். ஒரே நாளில் 7 வீடுகளை காட்டு யானைகள் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மண்சரிவும் ஏற்பட்டது.

    ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீடுகள் சேதம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக மழை சற்று ஒய்ந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரும் தேங்கியது.

    இன்று காலை ஊட்டி அடுத்த லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழகத்தில் உள்ள உழவா் சந்தைகள் வேளாண்மை துறையின் மூலம் நிா்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தோட்டக்கலை துறைக்கு தரவேண்டும்.
    • வளா்ந்து வரும் தோட்டக்கலைத் துறைக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் நியமிக்க வேண்டும்

    ஊட்டி:

    தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்க உறுப்பினா்களின் மாநில அளவிலான பொதுக் குழுக் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் வளா்ந்து வரும் தோட்டக்கலைத் துறைக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் நியமிக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள உழவா் சந்தைகள் வேளாண்மை துறையின் மூலம் நிா்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தோட்டக்கலை துறைக்கு தரவேண்டும். நஞ்சில்லா விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தோட்டக்கலைத் துறையில் அங்கக துறை சான்று என்னும் புதிய பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×