search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "onam festival"

    • விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.
    • சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஓணம் பண்டிகை வரும் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பெருமளவு விமானங்களில், கேரளாவுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதையடுத்து விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.

    சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரை.

    சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ. 6,500 முதல் ரூ.10,243 வரை.

    சென்னை-கோழிக் கோடு, வழக்கமான கட்டணம்-ரூ.3,148.

    ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம்.
    • அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    மூணாறு:

    கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது.

    ஆண்டுதோறும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் இந்த 2 அணைகளையும் சுற்றுலா பயணிகள் பாா்வையிட அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட்டு செல்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதில் வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அணையை பார்வையிட நுழைவுக் கட்டணமாக முதியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. அணையின் உள்ளே சுற்றுலா பயணிகள் செல்போன், கேமரா ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். வாரத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட முடியாது. வயது முதிர்ந்தோர் அணையை சுற்றி பார்க்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 23ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிப்பு.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

    29.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.09.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது.
    • திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணாவணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது. 40 டன் பூக்கள் வந்தநிலையில் வாடாமல்லி மட்டும் 30 டன் வந்துள்ளது. கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கேரள மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு விருந்தினர்களை வரவேற்பார்கள். இதற்காக 9 நாட்கள் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதில் வாடாமல்லி பூ முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்று திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது. இருந்தபோதும் அதிகளவு பூக்கள் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மல்லிகை ஒரு கிலோ ரூ.600, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.200, செண்டுமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.150, ரோஸ் ரூ.150 என்ற விலையில் விற்பனையானது.

    அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

    அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.

    நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலம் பாதித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி புதுப்பள்ளி வேட்பாளரை அறிவித்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மற்ற கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இடைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோட்டயம், மணற்காடு தேவாலயங்களில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

    புதுப்பள்ளிக்கு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, அய்யன்காளி-ஸ்ரீநாாயணகுரு ஜெயந்தி, மணற்காடு பெருநாள் போன்ற கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இடதுசாரி ஜனநாயக முன்னனியின் தொகுதி பொறுப்பாளரும், கேரள மந்திரியுமான வி.என். வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலுயுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு இருந்தன.
    • லாட்டரி டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை.

    திருவனந்தபுரம், செப்.15-

    கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது.

    முக்கிய பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஓணப்பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகம் செய்தது.

    இதன் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை ரூ.500 என்றும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு இதே குலுக்கலுக்கான சீட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு இருந்தன. இதன் குலுக்கல் வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது.

    இந்நிலையில் ஓணம் பம்பருக்காக அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் 89 சதவீதம் விற்பனை ஆகி உள்ளது. அதாவது அச்சிடப்பட்ட 60 லட்சம் சீட்டுகளில் 53 லட்சத்து 76 ஆயிரம் சீட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ.215 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அனைத்து சீட்டுகளும் விற்பனை ஆனால் ரூ.240 கோடி வருவாய் கிடைக்கும்.

    இது பற்றி லாட்டரி துறை அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் கடந்த ஓணப்பண்டிகையின்போது லாட்டரி மூலம் ரூ.124.5 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை மட்டும் ரூ.91 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இம்முறை ஒரு டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை என்றனர்.

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகர் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அருட் தந்தை ஜோபி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. முடிவில் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு கேம் ஷோ நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் மற்றும் இயக்குனர் உதயசங்கர், முதல்வர் அனில் பூர்த்தி ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி, டாக்டர் கவிதா உதயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.
    • 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் மதியம் 1:45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த ெரயில், காசர்கோடு, பையனூர், கண்ணுர், கோழிக்கோடு, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நின்று 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கேரளாவில் ஓணப்பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். இதில் முதல் 3 நாட்களிலேயே மாநிலம் முழுவதும் மது விற்பனை ரூ.300 கோடியை தாண்டியது.
    • ஒருவாரம் முடிந்த நிலையில் இந்த விற்பனை ரூ.624 கோடியாக உயர்ந்ததாக மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பிற மாநிலங்களை விட மதுகுடிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

    பண்டிகை காலங்களில் இங்கு வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும். அதுவும் ஓணப்பண்டிகை காலத்தில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக ஓணப்பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதனால் மது விற்பனையும் குறைவாகவே இருந்தது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் ஓணப்பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதோடு மது விற்பனையும் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.

    கேரளாவில் ஓணப்பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். இதில் முதல் 3 நாட்களிலேயே மாநிலம் முழுவதும் மது விற்பனை ரூ.300 கோடியை தாண்டியது. ஒருவாரம் முடிந்த நிலையில் இந்த விற்பனை ரூ.624 கோடியாக உயர்ந்ததாக மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கு கேரளாவில் குடிமகன்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும் ஒரு காரணமாகும். இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தினசரி மது குடிப்போர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

    அதனை உறுதிப்படுத்துவது போல இப்போது மது விற்பனை புதிய உச்சம் தொட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி கேரள மதுபான விற்பனை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கேரளாவில் கடந்த ஆண்டு ரூ. 529 கோடிக்கு மது விற்பனை ஆனது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.95 கோடி விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம் மொத்த விற்பனை ரூ.624 கோடியாக உயர்ந்துள்ளது.

    கேரளாவில் கூடுதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டது மற்றும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதே இதற்கு காரணமாகும்.

    மாநிலம் முழுவதும் நடந்த மது விற்பனையில் கொல்லம் ஆசிரம விற்பனை கடை முதலிடம் பிடித்துள்ளது. இங்கு மட்டும் ரூ.ஒரு கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    இதுபோல திருவனந்தபுரம், இரிஞ்சாலகுடா, எர்ணாகுளம், கண்ணூர், பரகண்டி பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களிலும் ரூ. 1 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் மகிழ்ந்தனர்.
    • கடந்த 30-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது.

    திருவனந்தபுரம் :

    உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் கொண்டாடும் திருவிழா ஓணம்.

    முன் காலத்தில் கேரளாவை மகாபலி மன்னர் ஆட்சி செய்த போது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் 3 அடி நிலம் கேட்ட திருமாலுக்கு தனது தலையை 3-வது அடியாக வழங்கிய மகாபலி, பாதாள உலகம் சென்றார். அப்போது அவர் தான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதை பார்க்க வேண்டும் என இறைவன் திருமாலிடம் வேண்டினார். இதற்கு திருமாலும் அனுமதித்தார்.

    அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி மன்னர் நகர்வலம் வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மன்னருக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள், வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு, அறுசுவை விருந்து படைத்து வருகிறார்கள்.

    கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பெயரளவிற்கே கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. அது முதல் கேரள மாநிலம் விழாக் கோலம் பூண்டது. திருவோண திருநாளான இன்று கேரளா முழுவதும் திரு ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் மகிழ்ந்தனர். வீடுகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றிலும் அத்தப்பூ கோலம் அழகாக போடப்பட்டு இருந்தது.

    கேரளா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மலையாள மக்களும் அத்தப்பூ கோலம் போட்டு புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.

    ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமான ஓண சத்யா (அறுசுவை விருந்து) அனைத்து வீடுகளிலும் படைக்கப்பட்டது. வாழைக்காய் துவரன், அவியல், சேனை எரிசேரி ஓலன், புளி இஞ்சி, பீட்ரூட், பச்சடி, மாங்காய் பச்சடி, நார்த்தங்காய் பச்சடி, பருப்பு சாம்பார், புளிசேரி ரசம், மோர், அடை பிரதன், பாயாசம் என 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து மக்கள் மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக புலிக்களி (புலி நடனம்), படகுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் கேரளாவில் இன்று நடத்தப்பட்டன. இதில் சிறுவர்-சிறுமிகள், முதல் பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்றனர்.

    மேலும் வீடுகளில் ஊஞ்சல் கட்டி அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று திருவோண சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கேரளாவில் மட்டுமல்லாது குமரி மாவட்டத்திலும் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இங்கும் அத்தப்பூ கோலம், ஓண ஊஞ்சல், கயிறு இழுத்தல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன. ஓண பண்டிகைக்காக குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இது போல தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    ×