search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NGT"

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #NGT #TNgovernment #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

    இந்த அறிக்கையை கடந்த 28-ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது வாசித்துக் காட்டிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும் இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழு நியமிக்கப்பட்டது.

    ஆனால் இந்த குழு இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஆலையை மூடியது தவறா? என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு உள்ளது.

    இந்த குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது. குழுவின் அறிக்கை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதங்களில் உள்ள உண்மை நிலவரங்களை இந்த குழுவின் அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இந்த குழு எந்த இடத்திலும் நிலத்தடி நீர், தாமிரக்கழிவு தொடர்பாக உருவாகும் சுற்றுச்சூழல் மாசு பற்றி சரிவர ஆய்வு நடத்தவில்லை. அது தொடர்பாக எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தேவையான வாய்ப்புகள் ஆலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டன. இதனை தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் ஏதோ உடனடியாக இந்த முடிவை எடுத்தது போல சித்தரித்து உள்ளது முற்றிலும் தவறாகும்.

    மேலும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் மனு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை. இந்த குழுவின் நியமனம் மற்றும் அதன் அறிக்கை ஆகியவற்றுக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை.

    இவ்வாறு தமிழக அரசின் பதில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #NGT #TNgovernment #Sterlite

    டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது.

    இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வீடுகளில் ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.



    இதனால் டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.

    டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt

    ஸ்டெர்லைட் தொடர்பாக வல்லுநர் குழு அளித்த அறிக்கை எதிர்பார்த்ததுதான் என்றும், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள்  நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தனது ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என்றும், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம், இதுபற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலை மூடப்பட்டதாகவும், ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றும் ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.



    இந்நிலையில், பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியதுதான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல்களில் ஒருவரான அரிமா சுந்தரம் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது” என்றார். #SterliteProtest #SterliteClosureOrder #NGT 
    ஸ்டெர்லைட் வழக்கில் தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #NGT #NationalGreenTribunal #SterliteCase
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் கூறியது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #NGT #NationalGreenTribunal #SterliteCase
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளின் பேரில் செயல்பட அனுமதி அளிக்கலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. #SterliteProtest #SterliteClosureOrder #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி நடந்த இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.


    அதன்படி ஆய்வு நடத்திய தருண் அகர்வால் குழு நேற்று முன்தினம் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தது.

    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க உள்ளது. #SterliteProtest #SterliteClosureOrder #NGT
    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. #NGTSterliteCommittee #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த குழு விரைவில் ஆய்வை தொடங்க உள்ள நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.



    இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆய்வுப் பணிகள் நடத்தவும் தடை விதிக்கவில்லை.

    எந்த அடிப்படையில் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கேட்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், குழுவின் ஆய்வறிக்கை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.

    அதேசமயம் ஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். #Sterlite #SterliteCase #NGT
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது.  இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    ஆனால், ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான எஸ்.ஜே.வசிப்தார் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

    இதையடுத்து புதிய நீதிபதியின் பெயரை தீர்ப்பாயம் பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவராக நியமிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க ஸ்டெர்லைட் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து புதிய நீதிபதியை நியமித்து உடனே உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்பபாயம் பிறப்பித்துள்ளது. இவர் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #SterliteCase #NGT
    ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 

    இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.



    இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோரும், ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், பினாகி மிஸ்ரா ஆகியோரும் ஆஜரானார்கள். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனுதாக்கல் செய்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜரானார்.

    அரிமா சுந்தரம் தன்னுடைய வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள 5 உத்தரவுகளையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கூறி, ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து விவரிக்க தொடங்கினார்.

    சி.எஸ்.வைத்தியநாதன் குறுக்கிட்டு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளில் கோர்ட்டுகளோ, தீர்ப்பாயங்களோ தலையிட முடியாது. இதே போன்ற மனுவை வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்துள்ளது என்றார்.

    அரிமா சுந்தரம் வாதிடுகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்பும் நாங்கள் முறையிட்டோம். தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து ஆணைகள் மீதும் மேல்முறையீடு செய்வதற்கு முகாந்திரம் உண்டு என்று கூறினார்.

    உடனே தமிழக அரசு தரப்பில் வாதிடும்போது, ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிட்டதாகும். இதன் மீது இவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றனர்.

    இதற்கு நீதிபதிகள் உங்கள் வாதத்தை ஏற்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் வாதத்தை தொடரலாம் என்றனர்.

    பின்னர் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடுகையில், இந்த பிரச்சினை 1996-ம் ஆண்டில் இருந்து அரசியல்வாதிகளால் உள்நோக்கத்துடன் கிளறப்பட்டு வருகிறது. இவர்கள் கூறும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றனர்.

    வக்கீல் ராகேஷ் திவிவேதி தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி அருகில் உள்ள நதிகளும் மாசுபடுகின்றன. இந்த ஆலை வெளியேற்றும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த ஆலைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. உடனடியாக ஒரு குழு அமைத்து ஆய்வை மேற்கொண்டால் அங்குள்ள மாசுக்கேட்டை நிரூபிக்க முடியும் என்றார்.

    இதற்கு ஸ்டெர்லைட் சார்பில், நாங்களும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தற்போது ஆலையை பராமரிக்க எங்களுக்கு இடைக்கால அனுமதி வேண்டும் என்றனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ஆலை எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதி கிடையாது. நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

    மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. அந்த ஆதாரங்களை 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.  #NGT #SterlitePlant #tamilnews 
    கங்கை ஆற்றில் குவிந்துள்ள மாசுக்கள் பற்றி விசாரித்துவரும் தேசிய பசுமை தீர்ப்பாயம் குளிக்கவும், குடிக்கவும் கங்கை நீர் தகுதியற்றுப்போனதாக எச்சரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. #NGT #saveganga #riverGanga
    புதுடெல்லி:

    நாட்டின் வற்றாத ஜீவநதியாகவும், புனித நதியாகவும் கருதப்படும் கங்கை ஆற்றின் புனிதம் குலைந்து, குப்பை கூளங்களும் மாசுக்களும் நிறைந்திருக்கும் நிலையை போக்குவது தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பசுமை பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த அவலநிலையை மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது ஹரித்வாரில் இருந்து உன்னாவ் வரையிலான இடைவெளியில் ஓடும் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ தகுதியற்ற நிலையில் இருப்பதை அறிந்த பசுமை தீர்ப்பாயம் வேதனை தெரிவித்துள்ளது.

    தங்களது உடல்நிலையில் பின்னாளில் ஏற்படக்கூடிய பல்வேறு பக்கவிளைவுகளை பற்றி அறியாமல் இவ்வளவு அசுத்தமான நீரை பக்தியுடன் அள்ளிப்பருகும் பக்தர்கள் மற்றும் இதில் குளிப்பவர்களின் நிலையைப்பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.


    சிகரெட் புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கையைப்போல், மாசாகிப்போன கங்கை நீருக்கும் இப்படியொரு எச்சரிக்கையை ஏன் வெளியிட கூடாது? எனவும் பசுமை தீர்ப்பாயம் வினவியுள்ளது.

    இப்பகுதி வழியாக பாயும் கங்கை நீர் குடிக்கவும், குளிக்கவும் உகந்தது தானா? தூய்மை கங்கை திட்டத்தை நிறைவேற்றும் தேசிய அமைப்பினர் இதுதொடர்பாக ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓரிடத்தில் அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும்.

    மேலும், எந்த பகுதியில் உள்ள கங்கை நீர் குளிக்கவும், குடிக்கவும் தகுதியானது? என்பதை தூய்மை கங்கை தேசிய அமைப்பும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இன்னும் இரு வாரங்களுக்குள் தங்களது இணையதளங்களில் குறிப்பிட வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #NGT #saveganga #riverGanga #Gangawaterunfitfordrinking 
    சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள ஏ.கே கோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #AKGoel #NGT
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தற்போது, இதன் தற்காலிக தலைவராக நீதிபதி ஜாவத் ரஹிம் உள்ளார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள ஏ.கே கோயல் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள கோயல், சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் திறமையானவர் என கூறப்படுகிறது. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. #Sterlite #ThoothukudiShooting
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 


    ×