search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Justice Tarun Agarwal"

    ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு ஸ்டெர்லைட் ஆய்வுக்காக அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். #Sterlite #SterliteCase
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறி அதை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    கடந்த மே மாதம் இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதோடு அந்த ஆலையை மீண்டும் திறக்காமல் இருக்க சட்ட ரீதியிலான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மீண்டும் ஆலையை திறக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் நாடி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அவர் தலைமை பொறுப்பேற்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து மேகாலய மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண்அகர்வாலை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசின் தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுப்பி உள்ளது.

    இந்த நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு அடுத்த வாரம் சென்னை வரும் என தெரிய வந்துள்ளது. அவர்கள் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர். அவர்களுக்கு சென்னை கலஸ் மகாலில் அலுவலகம் வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த குழுவினர் தூத்துக்குடிக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களையும் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை பற்றி விசாரிக்க உள்ளனர். அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நேரில் ஆய்வு செய்த பிறகு தருண்அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தயாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும். 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள விசாரணை குழு நடவடிக்கைகளை ஏற்க இயலாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. தருண்அகர்வால் குழுவுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதிக்குமா? என்பது அப்போது தெரிய வரும். #Sterlite #SterliteCase
    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். #Sterlite #SterliteCase #NGT
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது.  இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    ஆனால், ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான எஸ்.ஜே.வசிப்தார் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

    இதையடுத்து புதிய நீதிபதியின் பெயரை தீர்ப்பாயம் பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவராக நியமிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க ஸ்டெர்லைட் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து புதிய நீதிபதியை நியமித்து உடனே உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்பபாயம் பிறப்பித்துள்ளது. இவர் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #SterliteCase #NGT
    ×