search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagercoil"

    நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடையில் ஏற முயன்ற வாலிபர்களால் கமல்ஹாசன் பேச்சை பாதியில் நிறுத்தியதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

    கிராமம் கிராமமாக சென்று மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்ட கமல்ஹாசன், நேற்று மாலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதில், கமல்ஹாசன் ரசிகர்கள், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். கமல்ஹாசனை அருகில் சென்று பார்க்க மேடையின் அருகே கூட்டம் முண்டியடித்தது.

    கமல்ஹாசன் மேடைக்கு வந்ததும், பொதுக்கூட்டம் தொடங்கியது. அவர், பேச ஆரம்பித்ததும், மேடையின் முன்பு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து கோ‌ஷமிட்டது. அவர்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அமைதிப்படுத்த முயன்றனர்.

    கமல்ஹாசனை பேச விடுங்கள், அமைதியாக இருங்கள் என்று நிர்வாகிகள் குரல் கொடுத்தப்படி இருந்தனர். ஆனால் மேடையின் முன்பு நின்றிருந்த 2 வாலிபர்கள் கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை கேட்க மறுத்து மேடையில் ஏற முயன்றனர்.

    வாலிபர்களின் செயல் கமல்ஹாசனின் பேச்சுக்கு இடையூறாக இருந்தது. அவரும் வாலிபர்களை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் இருவரும் அதை கேட்க மறுத்து ‘மவுனத்தை கலையுங்கள் தலைவா’ என்று கத்தினர்.

    இதற்கு கமல்ஹாசன், ‘நான்தான் மவுனத்தை கலைத்து விட்டேனே. இப்போது என் கருத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன். என்னை பேச விடுங்கள். நான் பேசிய பின்பு மைக்கை உங்களிடம் தருகிறேன். அப்போது உங்கள் கருத்தை கூறுங்கள். அதை நான் கேட்கிறேன்,’ என்றார். ஆனால் வாலிபர்கள் அதை கேட்க மறுத்து மீண்டும் மேடையில் ஏறினர். இதனால் கமல்ஹாசன் பேச்சை பாதியில் நிறுத்தினார்.

    கமல்ஹாசன் பேச்சை பாதியில் முடித்துக் கொண்டது கூடி நின்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கமல்ஹாசனை நோக்கி பேசுங்கள், பேசுங்கள் என்று கூச்சலிட்டனர்.

    ஆனால் கமல்ஹாசன் அதை கேட்காமல் மேடையில் இருந்து திரும்பிச் சென்றார். இது மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    கமல்ஹாசன் பேச்சை பாதியிலேயே நிறுத்த வைத்த வாலிபர்கள் யார்? எதற்காக கூட்டத்தில் குழப்பம் விளைவித்தனர் என்பது பற்றி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாற்று கட்சியினரின் சதியா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வேலையா? என்றும் அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே அந்த வாலிபர்களை கண்டு பிடிக்க அவர்கள், முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கமல்ஹாசன் பொதுக்கூட்டம் நடைபெற்ற வடசேரி பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும். பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில் பகுதியில் ஏற்கனவே மேம்பால பணிகள் நடந்து வருவதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கடி இருந்து வந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்டத்தால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
    தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது என்று குமரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    கிராமம், கிராமமாக செல்லும் அவர் மணக்குடி, தென்தாமரைகுளம் பகுதிகளில் பேசியதாவது:-

    என் மக்களை, குடும்பங்களை சந்தித்து பேச வந்துள்ளேன். உங்கள் நிறைகுறைகளை கேட்டறியவும், மக்களை புரிந்து கொள்ளவும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பெரிய மனம் இருக்கிறது.

    இளைஞர்கள் அன்பையும், ஆதரவையும் கொட்டி தருகிறார்கள். தமிழகம் உங்களை எதிர்பார்க்கிறது. உங்கள் எண்ணத்தை நிகழ்த்தி காட்ட நான் இங்கு வந்துள்ளேன்.

    மக்களை அறிந்து கொள்வதை தவிர இந்த பயணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை. வேறு பேச்சு பேசவும் விரும்பவில்லை.

    அரசியலில் என்ன நடக்கிறது? என்பது உங்களுக்கு தெரியும். அது பற்றிய விமர்சனங்களை இங்கு வைக்க வரவில்லை. நாளை நமதாக இருக்க வேண்டும். உங்கள் அன்புதான் எனது நம்பிக்கை. எனது நம்பிக்கை உங்கள் நம்பிக்கையாக மாற வேண்டும்.

    தென்தாமரைகுளத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 94 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்துவது தமிழனாகிய எனது கடமை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    தமிழக மாணவர்களுக்கு எத்தனை தடைகளை வைத்தாலும் அவர்கள் அதை தாண்டி வருவார்கள். கேள்வி தாளை மாற்றி கொடுத்தாலும் கூட அவர்கள் சரியான விடையை கண்டு பிடித்து எழுதுவார்கள். தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது.

    கல்வி, சுகாதாரம், நேர்மை ஆகியவை தமிழகத்தை நல்ல நிலைக்கு எடுத்துச்செல்லும். இந்த நற்குணங்கள் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்.

    நீங்கள் நேர்மையாக, வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள். உங்களை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று கேட்பது பின்னர் நடக்கும். இப்போது உங்களுக்கு எது பெரிய தாக்கமாக, தேக்கமாக உள்ளது என்பதை அறிய வந்திருக்கிறேன்.

    பாட்டுப்பாடி, ஆட்டமாடி உங்களை ஈர்த்தது நான் முன்பு செய்த வேலை. இப்போது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பும், நாம் ஒருவருக்கொருவர் பேசுவதும், இனி அடிக்கடி நடக்கும். அதற்கு இந்த கூட்டங்கள் இன்னும் பெருக வேண்டும்.

    என்னை காணவும், என் பேச்சை கேட்கவும் வெயிலில் காத்திருக்கும் உங்களுக்கு என் அன்பை தவிர வேறு எதை தர முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மீனவ கிராமங்கள் வழியாக சென்ற அவர் விவசாய நிலங்கள் வழியாகவும் பயணத்தை தொடர்ந்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    கோட்டார் போலீஸ் நிலையம் அருகே வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ளது வடிவீஸ்வரம் மேற்கு தெரு.

    இந்த பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் குமாஸ்தா ஆறுமுகம் பிள்ளை என்ற ரமேஷ் (வயது 49). இவரது மனைவி தங்கம் (38). இவர், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு முத்துகுமார் (17), மீனா (14) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    ஆறுமுகம் பிள்ளையுடன் அவரது தந்தை ராமசாமி, தாய் மீனாட்சி ஆகியோரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் ராமசாமி எழுந்து குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மீனாட்சி பால் வாங்குவதற்காக வெளியில் சென்று இருந்தார்.

    ஆறுமுகம் பிள்ளை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை 6 மணியளவில் எழுந்த தங்கம் குளியல் அறைக்கு சென்றார். அப்போது அருகில் உள்ள அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அவர், அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்மநபர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணையின்போது அவர்களிடம் தங்கம் கூறியதாவது:-

    நான், இன்று அதிகாலை 5 மணிக்கு முதலில் எழுந்தபோது, பீரோ பூட்டி இருந்தது. மீண்டும் காலை 6 மணிக்கு எழுந்து குளியல் அறைக்கு சென்றபோது தான் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றி எனது மாமனாரிடம் கேட்டபோது, அவர், குளியல் அறைக்கு சென்றிருந்ததும், மாமியார் பால் வாங்க வெளியில் சென்றிருந்ததும் தெரிய வந்தது. இதை நோட்டமிட்டவர்கள் நகை, பணத்தை திருடி உள்ளனர்.

    நான், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல் செய்து பீரோவில் வைத்திருந்தேன். அந்த பணமும் கொள்ளை போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட பீரோ இருந்த அறையில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. போலீசார் மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தினால் கொள்ளை பற்றி துப்பு துலங்க கூடாது என்பதற்காக மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளை நடந்த வீடு உள்ள இடம் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியாகும். எனவே தெரிந்த நபர்கள் யாரோ இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    போலீஸ் நிலையம் அருகே உள்ள வீட்டில் நடந்துள்ள துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Tamilnews
    நாகர்கோவில் அருகே வீட்டை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), ஆட்டு பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகவடிவு.

    இவர்களது மகள் ஜெயராமன். இவரை சாத்தான்குளத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது கோடை விடுமுறையையொட்டி ஜெயராமன் தனது 5 வயது மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். ஜெயராமன் தனது நகைகளை வீட்டில் இருந்த பீரோவில் கழற்றி வைத்திருந்தார்.

    நேற்றிரவு சுப்பிரமணியன் ஆட்டு பண்ணைக்கு தூங்கச் சென்றார். வீட்டில் சண்முகவடிவு, ஜெயராமன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தூங்கினர். அதிகாலையில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் பீரோவில் இருந்த பொருட்களை சிதறியடித்த கொள்ளையர்கள் அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கப்பணத்தை திருடி விட்டு தப்பியோடி விட்டனர். இன்று காலை கண்விழித்து பார்த்த சண்முக வடிவு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்களில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×