search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kottar"

    கோட்டார் போலீஸ் நிலையம் அருகே வக்கீல் குமாஸ்தா வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ளது வடிவீஸ்வரம் மேற்கு தெரு.

    இந்த பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் குமாஸ்தா ஆறுமுகம் பிள்ளை என்ற ரமேஷ் (வயது 49). இவரது மனைவி தங்கம் (38). இவர், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு முத்துகுமார் (17), மீனா (14) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    ஆறுமுகம் பிள்ளையுடன் அவரது தந்தை ராமசாமி, தாய் மீனாட்சி ஆகியோரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் ராமசாமி எழுந்து குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மீனாட்சி பால் வாங்குவதற்காக வெளியில் சென்று இருந்தார்.

    ஆறுமுகம் பிள்ளை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை 6 மணியளவில் எழுந்த தங்கம் குளியல் அறைக்கு சென்றார். அப்போது அருகில் உள்ள அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அவர், அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்மநபர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணையின்போது அவர்களிடம் தங்கம் கூறியதாவது:-

    நான், இன்று அதிகாலை 5 மணிக்கு முதலில் எழுந்தபோது, பீரோ பூட்டி இருந்தது. மீண்டும் காலை 6 மணிக்கு எழுந்து குளியல் அறைக்கு சென்றபோது தான் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றி எனது மாமனாரிடம் கேட்டபோது, அவர், குளியல் அறைக்கு சென்றிருந்ததும், மாமியார் பால் வாங்க வெளியில் சென்றிருந்ததும் தெரிய வந்தது. இதை நோட்டமிட்டவர்கள் நகை, பணத்தை திருடி உள்ளனர்.

    நான், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல் செய்து பீரோவில் வைத்திருந்தேன். அந்த பணமும் கொள்ளை போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட பீரோ இருந்த அறையில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. போலீசார் மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தினால் கொள்ளை பற்றி துப்பு துலங்க கூடாது என்பதற்காக மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளை நடந்த வீடு உள்ள இடம் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியாகும். எனவே தெரிந்த நபர்கள் யாரோ இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    போலீஸ் நிலையம் அருகே உள்ள வீட்டில் நடந்துள்ள துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Tamilnews
    ×