search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழமணக்குடி ஆலயம் முன்பு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்.
    X
    கீழமணக்குடி ஆலயம் முன்பு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்.

    தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள் கையில் உள்ளது- கமல்ஹாசன்

    தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது என்று குமரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    கிராமம், கிராமமாக செல்லும் அவர் மணக்குடி, தென்தாமரைகுளம் பகுதிகளில் பேசியதாவது:-

    என் மக்களை, குடும்பங்களை சந்தித்து பேச வந்துள்ளேன். உங்கள் நிறைகுறைகளை கேட்டறியவும், மக்களை புரிந்து கொள்ளவும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பெரிய மனம் இருக்கிறது.

    இளைஞர்கள் அன்பையும், ஆதரவையும் கொட்டி தருகிறார்கள். தமிழகம் உங்களை எதிர்பார்க்கிறது. உங்கள் எண்ணத்தை நிகழ்த்தி காட்ட நான் இங்கு வந்துள்ளேன்.

    மக்களை அறிந்து கொள்வதை தவிர இந்த பயணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை. வேறு பேச்சு பேசவும் விரும்பவில்லை.

    அரசியலில் என்ன நடக்கிறது? என்பது உங்களுக்கு தெரியும். அது பற்றிய விமர்சனங்களை இங்கு வைக்க வரவில்லை. நாளை நமதாக இருக்க வேண்டும். உங்கள் அன்புதான் எனது நம்பிக்கை. எனது நம்பிக்கை உங்கள் நம்பிக்கையாக மாற வேண்டும்.

    தென்தாமரைகுளத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 94 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்துவது தமிழனாகிய எனது கடமை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    தமிழக மாணவர்களுக்கு எத்தனை தடைகளை வைத்தாலும் அவர்கள் அதை தாண்டி வருவார்கள். கேள்வி தாளை மாற்றி கொடுத்தாலும் கூட அவர்கள் சரியான விடையை கண்டு பிடித்து எழுதுவார்கள். தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது.

    கல்வி, சுகாதாரம், நேர்மை ஆகியவை தமிழகத்தை நல்ல நிலைக்கு எடுத்துச்செல்லும். இந்த நற்குணங்கள் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்.

    நீங்கள் நேர்மையாக, வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள். உங்களை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று கேட்பது பின்னர் நடக்கும். இப்போது உங்களுக்கு எது பெரிய தாக்கமாக, தேக்கமாக உள்ளது என்பதை அறிய வந்திருக்கிறேன்.

    பாட்டுப்பாடி, ஆட்டமாடி உங்களை ஈர்த்தது நான் முன்பு செய்த வேலை. இப்போது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பும், நாம் ஒருவருக்கொருவர் பேசுவதும், இனி அடிக்கடி நடக்கும். அதற்கு இந்த கூட்டங்கள் இன்னும் பெருக வேண்டும்.

    என்னை காணவும், என் பேச்சை கேட்கவும் வெயிலில் காத்திருக்கும் உங்களுக்கு என் அன்பை தவிர வேறு எதை தர முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மீனவ கிராமங்கள் வழியாக சென்ற அவர் விவசாய நிலங்கள் வழியாகவும் பயணத்தை தொடர்ந்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    Next Story
    ×