search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi death"

    திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டியளித்த நடிகர் விஜயகுமார், கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar
    மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    3-வது நாளாக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெளியூர்களில் இருந்தும் பலர் அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணமாக உள்ளனர். 

    முன்னதாக நடிகர் கார்த்தி நேற்று கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், இன்று காலை நடிகை ஜெயசித்ரா கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 


    நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இன்று காலை கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் விஜயகுமார் பேசியபோது, கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar #JeyaChitra

    மதத்தின் பெயரால் அரசியல் செய்யாதவர் கருணாநிதி, அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். #KarunanidhiBiopic #Prakashraj
    மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் திமுக தலைவர் கருணாநிதியாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். கருணாநிதியின் முழு வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அதில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறி இருப்பதாவது:-

    ‘இருவர் படத்தில் நடித்த போது நான் கருணாநிதியை சந்திக்கவில்லை. அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டபோது எனக்கு 30 வயது தான். அந்த சமயத்தில் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். இருவரில் நடித்தபோது, மணிரத்னத்தின் வழியாக நான் கருணாநிதியை பார்த்தேன். கருணாநிதியின் பேச்சுகள் அடங்கிய டேப்புகளை என்னிடம் அளித்தார்.

    எனக்கு காப்பியடிக்க வராது மணி என்று நான் கூறியது நினைவிருக்கிறது. அவர் போன்று அப்படியே நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் அவர் உயரம் இல்லை, நிறம் இல்லை, அவர் போன்று எனக்கு பேசவும் வராது. கதைப்படி நான் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்தேன்.



    நான் கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரை பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. அவர் மீதான மரியாதையும் அன்பும் மேலும் அதிகரித்தது. அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பு குறித்து அறிந்து அசந்து போய்விட்டேன்.

    பல ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நான் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். நான் படத்தில் நடித்த கதாபாத்திரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தார். இருவர் பிடித்திருந்ததா? கொஞ்சமாவது உங்களை போன்று நடித்தேனா? என்று நான் கருணாநிதியிடம் கேட்டேன். ஆமாம் கிட்டத்தட்ட என்று அவர் கூறினார். அதன் பிறகு நாங்கள் படம் பற்றி மீண்டும் பேசவே இல்லை.

    கல்கி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது வாங்கிய நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் டென்‌ஷனில் இருந்தார்கள். தன் கதாபாத்திரத்தில் நடித்த நபரை பார்த்துவிட்டு கருணாநிதி என்ன செய்வார் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர்.



    பிரகாஷ்ராஜூக்கு இந்த விருதை கொடுப்பதில் ஆனந்தம். இது அவருக்கு தெரியும், எனக்கு தெரியும். எங்கள் இருவருக்கும் தெரியும் என்றார். இருவர் படத்திற்கு முதலில் ஆனந்தம் என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது.

    அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டோம். மணிக்கணக்கில் அரசியல் பற்றி பேசுவோம். ஒன்றாக காபி குடிப்போம், வாக்கிங் போவோம். அதற்காக எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூறமாட்டேன். அவரை நாம் முழுதாக புரிந்து கொள்ளவில்லை. மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன். அவர் தமிழகத்தில் ஜனநாயக விதையை விதைத்தார். அவர் துவங்கியதை யாராலும் மதத்தை வைத்து மாற்ற முடியாது. இன்னொரு கருணாநிதியை பார்ப்போமா என்பது சந்தேகமே. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்’.

    இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiBiopic #Prakashraj 

    கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் பார்த்த விவசாயி அதிர்ச்சியில் மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் தெரிவித்தனர். #karunanidhideath #dmk
    குளித்தலை:

    குளித்தலை அருகேயுள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 80). விவசாயியான இவர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப்போர் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்ட நகலை எரித்து 36 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். 

    கருணாநிதி குளித்தலை தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டபோது அவருடன் தேர்தல் பணியை மேற்கொண்டு இருக்கிறார். நீண்டகால தி.மு.க. கட்சிக்காரரான இவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். 

    கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் நேற்று முன்தினம் இரவு பார்த்து கொண்டிருந்த இவர் கருணாநிதியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் தெரிவித்தனர்.  #karunanidhideath #dmk 
    கருணாநிதி மரணம் தொடர்பான ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
    கடலூர்:

    கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48), தி.மு.க. பிரமுகர். தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேள்விபட்ட சக்திவேல் அதிர்ச்சியடைந்தார். மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். கருணாநிதி மரணம் தொடர்பான ஒளிபரப்பை டி.வி.யில் பார்த்தபோது துக்கம் தாங்காமல் சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலுக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சக்திவேலை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலமும், கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுகா அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக பஸ்கள் மற்றும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால், ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.

    ஓசூர் பஸ் நிலையம் எதிரே பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் நகர துணை செயலாளரும், பூ வியாபாரிகள் சங்க தலைவருமான கே.திம்மராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்தை சுற்றிலும் ரோஜா, சாமந்தி, அரளி, பன்னீர் இலை, பட்டன் ரோஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வகைகளில் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில், ஓசூர் நகர பொருளாளர் சென்னீரப்பா, நகர துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி சரவணன், மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்தில் கருணாநிதி மறைவையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் கதறி அழுதார்கள்.

    பர்கூர் அண்ணா நகரில், கடந்த 1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தை தொடங்கினார். 24 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மறுவாழ்வு இல்லத்தில் 160 பேருக்கு மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களுக்கு வாழ்வு அளித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பெங்களூரு சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மவுன ஊர்வலமாக சென்றனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் அஸ்லம், தண்டபாணி, திருமலைச்செல்வன், மாதவன், பிர்தோஸ் கான், கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் தலைமையில் தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் சாலை வழியாக ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலை வரை சென்றது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்ட நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சங்கம் சார்பிலும், கிருஷ்ணகிரி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மவுன ஊர்வலம் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் எதிரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில இணை செயலாளர் நந்தகுமார், ஒன்றிய சட்ட திட்ட விதிகள் திருத்தக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கருணாநிதி உருவப்படத்திற்கு ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார்ராவ், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை எதிரில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பன்னீர்செல்வம், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், மாதேப்பள்ளி, நேர்லகிரி தீர்த்தம் போன்ற பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க.வினர் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல மாவட்டம் முழுவதும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரி தொலைபேசிநிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், ராமச்சந்திரன் கிரைசாமேரி, அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரசெயலாளர் ஜோதிபாசு, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகி பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ், ம.தி.மு.க நகரசெயலாளர் வஜ்ரவேல் சமூகநல்லிணக்கமேடை நிர்வாகி ராஜசேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  
    கருணாநிதி மறைவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
    பெரம்பலூர்:

    தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கின. மேலும் அவர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கருணாநிதி மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதோடு மட்டுமின்றி தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டன. தி.மு.க. கட்சி கொடிகளும் கருணாநிதி மறைவையொட்டி அரை கம்பத்தில் பறந்தன. கருணாநிதி உயிரிழந்ததை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அங்கிருந்த தொண்டர்கள், மகளிரணியை சேர்ந்த தொண்டர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

    பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ஒரு சிறுமி கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாசத்துடன் முத்தம் கொடுத்து மரியாதை செலுத்தியதை காண முடிந்தது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கட்சி பாகுபாடின்றி பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தலைமை அனைத்து நடிகர் ரசிகர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரசிகர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்தன. அங்கு நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ரசிகர்கள், தி.மு.க. தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

    இதேபோல் தி.மு.க.வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கட்சியின் மாநில செயலாளர் செங்கோலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய தாலுகாவில் உள்ள கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
    கருணாநிதி மறைவையொட்டி திமுக சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.

    கீரனூர்:

    கீரனூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவில் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிக்குமார், துணை தலைவர் பழனி, இம்தியாஸ், மணிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மாலை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஏதும் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கம், விவசாய சங்கம், அரிமா சங்கம் என அனைத்து தரப்பினரும் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தொம்மாவூரில் மாவட்ட தொண்டர் அணிஅமைப்பாளர் கராத்தே முத்து தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.

    இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர், கீரனூர் அடுத்த குளத்தூரில் தி.மு.க. கிளை கழகம் சார்பில் செயலாளர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடைவீதி பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பெரியசாமி, சரத்துகுமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருணாநிதி மரணமடைந்ததை தொடர்ந்து காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்தில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். #Karunanidhideath #dmk
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் காட்டூரில், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடம் உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்ததையொட்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான இடங்களான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள காட்டூர் மற்றும் குளிக்கரை பகுதி சோகத்தில் மூழ்கியது.

    தாயார் மீது நீங்காத அன்பு கொண்ட கருணாநிதி, திருவாரூருக்கு வரும்போது காட்டூரில் உள்ள தனது தாயார் நினைவிடத்துக்கு தவறாமல் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். கருணாநிதி மறைவையொட்டி காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடம் அருகில் திரண்ட மக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக கருணாநிதி படத்தை திரளான பொதுமக்கள் காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் நினைவிடம் அருகே கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதேபால குளிக்கரையிலும் தி.மு.க.வினர் கருணாநிதி படத்தை ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி மறைவையொட்டி கொரடாச்சேரி ஒன்றியம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  #Karunanidhideath #dmk
    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. கிளை செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையில், பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கருணாநிதி உருவப்படத்தை கையில் ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் செங்குந்தபுரத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வி.கைகாட்டியிலும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிறுகுடல் கிராமத்தில் தி.மு.க. சார்பில் 18 பேர் மொட்டையடித்து, அப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் சென்றனர்.

    வேப்பூர் கிராமத்தில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமையில், கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சமுத்து தலைமையில், தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    மதுரையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியவர் குறித்து போலீசில் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலைக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் மதுரை தத்தனேரி சாலையில் சென்றது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் முருகேசன் பஸ்சை ஓட்டினார். அப்போது 25 வயது வாலிபர் பஸ் மீது கல்வீசினார்.

    இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர் முருகேசன், கல்வீசிய வாலிபரை பிடிக்க முயன்றார்.

    ஆனால் அதற்குள் இருளில் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செல்லூர் போலீசில் டிரைவர் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை நேதாஜி ரோட்டைச் சேர்ந்த முருகன் (43), தாணப்ப முதலி தெருவில் டீ ஸ்டால் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை திறந்து வியாபாரம் பார்த்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் வாக்குவாதம் செய்து கடையை சூறையாடியதாக திலகர்திடல் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நாசரேத் பகுதியில் திமுகவினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாசரேத் பகுதியில் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவி செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி சாமுவேல், அலெக்ஸ், கிளைச் செயலாளர் கலையரசு ஆகியோர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

    சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் சவுந்திரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகாராஜன் ஆகியோர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

    இதையடுத்து மாலையில் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. #karunanidhideath #dmk
    திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேராவூரணியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #karunanidhideath #dmk
    பேராவூரணி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் பேராவூரணி சேது ரோடு பயணியர் மாளிகையில் தொடங்கியது. பின்னர் அண்ணா சாலை, அறந்தாங்கி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று வேதாந்தம் அரங்கில் நிறைவுபெற்றது.

    அதைத் தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி வேலுச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம், தி.க சார்பில் சிதம்பரம், இ.கம்யூனிஸ்ட் சார்பில் பாலசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கருப்பையா, விடுதலை சிறுத்தைகள் அரவிந்தகுமார், தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் கே.பி.குமணன், அல்லிராணி சேகர், முன்னாள் ஒன்றிய பொருப்பாளர் தங்கவேலு, பன்னீர், ஊராட்சி செயலர் குட்டியப்பன், கிளை கழக செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி சவுந்தர ராஜன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், அனைத்து கட்சியினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருணா நிதி படத்துக்கு அஞ்சலி செலுத் தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
    ×