search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi death"

    பிறந்த நாளில் தன்னை நேரில் காண யாரும் வரவேண்டாம் என தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். #K.Anbalagan #DMK #Birthday
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்துக்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும், மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வருகிற 19-ந்தேதி எனது 97-வது பிறந்தநாள் விழாவினைத் தவிர்த்திட விழைகிறேன்.



    மேலும், என் உடல்நிலை கருதி, அந்த நாளில் கட்சித் தொண்டர்கள், உறவினர்கள், என்னை நேரில் காண்பதை முழுமையாகத் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன். மக்கள் நலம் காக்கும் சமுதாயப் பணிகளையும், இயக்கப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கருணாநிதி உடல் அடக்கம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #ministerkadamburraju

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காவலனாக, தமிழினத்தின் தலைவராக, தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, சுயமரியாதைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட மாபெரும் தலைவர் கலைஞர்.

    தனது 95-வது வயதில் மரணமடைந்த தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கி நாங்கள் பிச்சை போட்டோம் என அநாகரீகமாக, அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    தனது 14 வயதில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அன்று முதல் இறுதி மூச்சுவரை தமிழ் சமுதாயத்திற்காக வாழ்ந்தவர் தலைவர் கலைஞர். தனது 45- வது வயதில் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றவர். 13 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர். 5 முறை தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்று நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபாண்மை மக்களின் பாதுகாப்பிற்காக, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காக சமரசமில்லாமல் போராடி வெற்றி கண்டவர். நம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தவர்.

    மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்ற மகத்தான கொள்கையை உருவாக்கியவர். மத்தியில் கூட்டணி ஆட்சியை உருவாக்கிய தளகர்த்தர்களில் முதன்மையானவர். கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதிகளை, பிரதமர்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

    தேசம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாபெரும் தலைவருக்கு மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தது அ.தி.மு.க அரசு. சென்னை உயர் நீதிமன்றம் கலைஞரின் சிறப்பை அங்கீகரித்து மெரினாவில் இடம் ஒதிக்கித்தர உத்தரவை பிறப்பித்தது.

    உண்மை இவ்வாறிருக்க, அரசியலும், வரலாறும் தெரியாமல் அமைச்சர் என்ற அந்தஸ்தை மறந்து அருகதையற்ற முறையில் பேசுவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ministerkadamburraju

    கருணாநிதி மறைவையடுத்து துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralCouncilMeet
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.



    இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. #DMK #DMKGeneralCouncilMeet

    அவதூறு வழக்கை முடித்து வைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Karunanidhideathcertificate #Karunanidhi
    சென்னை:

    முரசொலி பத்திரிகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.

    4 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதா சாதித்தது என்ன? என்ற தலைப்பில் எழுதிய அந்த கட்டுரையில் ஜெயலலிதா குறித்து சில விமர்சனங்களை செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது ஜெயலலிதா சென்னை மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இதுபோல கருணாநிதி மீது ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் 13 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி கருணாநிதி மரணமடைந்தார்.


    இதையடுத்து அவர் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் கருணாநிதியின் வக்கீல் குமரேசன் மனு செய்தார். அதற்கு கருணாநிதியின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தபோது வக்கீல் குமரேசன் ஆஜராகி, கருணாநிதியின் இறப்பு சான்றிழை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருணாநிதி மீது நிலுவையில் உள்ள 13 அவதூறு வழக்குகளையும் வருகிற அக்டோபர் 1-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறினார். அன்று அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #Karunanidhi
    கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்  கந்தர்வகோட்டை தெற்கு  ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி ஒன்றிய அவை தலைவர்  குஞ்சப்பா தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தீர்மானத்தை வாசித்தார். உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்து புகழஞ்சலி வாசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, சவுந்தர்ராஜன்,   இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் அர்சுணன், மதியழகன், நகரச்  செயலாளர் ராஜா, நகர  இளைஞரணி அமைப்பாளர்   கலையரசன், முன்னாள்  மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதையும், தலைவருக்கு புகழஞ்சலியும் செய்தனர்.
    சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் வெற்றி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முருகன் வரவேற்றார். 

    இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, கருணாநிதி உயிரிழந்த செய்தி கேட்டு மரணமடைந்த தி.மு.க. தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, தி.மு.க.வை வழி நடத்த செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராக வேண்டும். 

    வருகிற 26-ந்தேதி நெல்லையில் நடக்கும் தலைவர் நினைவேந்தல் கூட்டத்திற்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சார்பில் 25 வாகனங்களில் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காசிப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், ராமசந்திரன், விவேகானந்தன், சரவணன், அய்யப்பன், சுகுமார் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    திருவாரூர் மற்றும் திருக்குவளையில் கருணாநிதி படத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #karunanidhideath #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த திமுக தலைவர் கலைஞர் திருவுரு படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

    இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, உயதநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, மதிவாணன், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக திருச்சியில் இருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் திருக்குவளை வருகை தந்தார். திருக்குவளையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் பட்த்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் வருகை தந்த கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 

    பின்னர் திருவாரூர் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். திருவாரூர் வீட்டிலும் கருணாநிதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டிலேயே சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை கார் மூலம் திருச்சி புறப்பட்டார். #karunanidhideath #mkstalin

    திருச்சியில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின்- ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர். #mkstalin

    திருச்சி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் தி.மு.க. சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் முக்கிய இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

    முதல் நிகழ்ச்சியாக திருச்சியில் இன்று ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடக்கிறது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்  நடைபெறும் இந் நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் ஊடகத்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். இன்று மாலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ என்ற தலைப்பிலும், ‘மறக்க முடியுமா கலைஞர்’ என்ற தலைப்பில் 25-ந்தேதி கோவை இந்துஸ்தான் கல்லூரியிலும், ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் 26-ந்தேதி நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளி திடலிலும், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் சென்னையில் வருகிற 30-ந்தேதியும் புகழஞ்சலி கூட்டங்கள் நடக்கிறது. #mkstalin

    கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, குமரி மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நாகர்கோவிலில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. #karunanidhideath #dmk
    நாகர்கோவில்:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, குமரி மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர்வலமாக வந்தனர். கருணாநிதி மறைவுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, தி.மு.க. தொண்டர்கள் உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பெரும்பாலானோரும் ஊர்வலத்தில் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும், கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் ஒழுகினசேரி, வடசேரி அண்ணாசிலை, கேப் ரோடு, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக, நகராட்சி பூங்கா அருகே முடிவடைந்தது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதிக்கு புகழுரை வாசித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் மகேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன் மற்றும் நசரேத் பசலியான், வக்கீல் உதயகுமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்ïனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சிவன்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் லீக், த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். #karunanidhideath #dmk
    அமெரிக்காவில் சர்கா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #Vijay
    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய்,  நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு, சூரி, விஷால், நந்தா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #Vijay

    நாகர்கோவிலில் நாளை கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மவுன ஊர்வலம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கிறது. #karunanidhideath #dmk
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் களத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் நின்று வெற்றிகண்ட மாமனிதர் உலக மக்களின் இதயங்களில் வாழும் தலைவர் கருணாநிதி.

    அவருக்கு அஞ்சலி செலுத்த நாளை (12-ந்தேதி) மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையிலும், அனைத்து தோழமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் முன்னிலையிலும் மவுன ஊர்வலம் நடக்கிறது. 

    இந்த ஊர்வலம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, வடசேரி, மணி மேடை வழியாக நாகர்கோவில் பூங்காவுக்கு வந்து சேரும். இந்த ஊர்வலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  #karunanidhideath #dmk
    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.  

    முன்னதாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். 

    இந்த நிலையில்,  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 

    ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்காத தமிழக காவல்துறைக்கு  கண்டனம் தெரிவிப்பதாகவும்,  ராஜாஜி அரங்கத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
    ×