search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Rights Commission"

    பசுமை வழி சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏவை தாக்கியதாக போலீஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Greenwayroad
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மானூஸ், மாணவி வளர்மதி, அரசியல் கட்சி பிரமுகர்கள் முத்துக்குமார், மாரிமுத்து உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே 8 வழி சாலைக்கு எதிராக பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழி சாலைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை எதிர்த்து போராடிய போது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர் காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.

    அப்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொது மக்களை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் விரைவில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தன்னை தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் செங்கம் கரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி எனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது செங்கம் டி.எஸ்.பி.யாக இருந்த சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    மேலும் 8 வழி சாலைக்கு எதிராக போராடியதாக கூறி என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். என் மீது பொய் வழக்கும் போட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி ஆகிய 3 பேரும் டிசம்பர் மாதம் 12-ந் தேதி மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #Greenwayroad
    நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். #Sophia
    நெல்லை:

    தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த 3-ந் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது விமானத்தில் வைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக சோபியா கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சோபியாவின் தந்தை டாக்டர் சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பா.ஜ.க. கட்சியினர் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும்’ கூறியிருந்தார்.

    இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆணையம் நெல்லையில் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும் படி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன் பேரில் மாணவி சோபியா, அவரது தந்தை டாக்டர் சாமி ஆகியோர் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை மனுக்களாகவும் தாக்கல் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் திருமால் இன்று காலை ஆஜராகவில்லை. மாணவி சோபியா தனது தந்தையுடன் ஆஜராக வந்ததால் அரசு சுற்றுலா மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வள்ளியூர் பகுதியில் ஏராளமான கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்பட்டது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் விசாரணை நடந்து பல்வேறு வழக்குகளில் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யாததால் இது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், போலீஸ் கமி‌ஷனருக்கு பதிலாக துணை கமி‌ஷனர் சுகுணா சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் பழைய வழக்குகளின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக கூறினர்.

    மேலும் வள்ளியூர் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினர். #Sophia
    பா.ஜனதா கட்சியினர் மற்றும் போலீசார் மீது புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சோபியாவின் தந்தை சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #sophiaantipolis #BJP

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் டாக்டர் சாமி. இவருடைய மகள் சோபியா கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 3-ந் தேதி தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

    அப்போது விமானத்தில் வைத்து பா.ஜனதாவுக்கு எதிராக சோபியா கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் தனது மகள் மீது வழக்கு பதிந்த போலீசார், தான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை சாமி குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

     


    அதில் சோபியாவை பா.ஜனதா கட்சியினர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பல மணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகார் மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்பேரில் சாமி, அவருடைய மகள் சோபியா ஆகிய இருவரும் மாநில மனித உரிமை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக, அவர்களின் வக்கீல் ஒருவர் தெரிவித்தார். #sophiaantipolis

    கர்ப்பிணி எனக் கூறி தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான புகார் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
    சென்னை:

    மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி யாஸ்மின். இவர் கருவுற்றிருப்பதாக கூறி 8 மாதங்களாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர்  குழந்தை இல்லை என்று கூறியதாகவும் அவரது கணவர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இணை இயக்குனர்கள் பதில் அளிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #HumanRightsCommission
    இன்ஸ்பெக்டரால் அடித்து துன்புறுத்தப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டி.லட்சுமணன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ந்தேதி இரவு சுமார் 10.15 மணிக்கு குடும்பத்துடன் காரில் கொடுங்கையூர் அருகே சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் குடிபோதையில் காருக்கு முன்பு வந்து விழுந்தார். நான் சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தி, சாலையில் பாதுகாப்பாக, ஓரமாக செல்லும்படி அவருக்கு அறிவுரை கூறினேன்.

    அவர் என் காரை கையால் அடித்து வெளியில் வரும்படி கூறினார். நான் காரைவிட்டு இறங்கியதும் என்னை கண் மூடித்தனமாக தாக்கினார். பின்னர், போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து போலீசாரை வரவழைத்தார்.

    அவர்கள் என்னை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்தும் என்னை அடித்து உதைத்தபோது தான், குடிபோதையில் காருக்கு முன்னால் விழுந்தவர் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் என்று தெரியவந்தது. குடிபோதையில் இருந்த அவர், போலீஸ் சீருடை அணியவில்லை.

    இதன்பின்னர் என்னுடைய மகன் போலீஸ் நிலையத்துக்கு வந்து, வெற்று காகிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, என்னை அழைத்து சென்றான். என்னை அடித்து உதைத்த இன்ஸ்பெக்டர் சம்பத்தின் செயல் மனித உரிமைகளை மீறியதாகும். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவுக்கு இன்ஸ்பெக்டர் சம்பத் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அன்று இரவு சுமார் 10.15 மணிக்கு தான் ஓட்டப்பயிற்சியில் (ஜாக்கிங்) ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வேகமாக மனுதாரர் காரில் வந்து தன்மீது மோதினார் என்றும் இதில் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

    மேலும், எழும்பூர் கோர்ட்டில் என்மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர், மனித உரிமைகள் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும் இன்ஸ்பெக்டர் கூறியிருந்தார்.

    இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் லட்சுமணன் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் போலீசாரால் அடித்து உதைத்து, அவமானப்படுத்தி இருப்பது நிரூபிக் கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலீசாரின் செயலை ஏற்கமுடியாது. எனவே, புகார்தாரருக்கு ரூ.25 ஆயிரத்தை தமிழக அரசு இழப்பீடாக 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் இருந்து அரசு வசூலித்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ஆட்டோ டிரைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை மூலக்கொத்தலம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். ஆட்டோ டிரைவர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது வீட்டின் அருகே கிடந்த குப்பையை அகற்றுவது சம்பந்தமாக எனது மனைவிக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. எனது மனைவியை அவதூறாக திட்டியது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சகோதரர் கொடுத்த புகார் அடிப்படையில் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கடுமையாக தாக்கினார். இதில், எனது காது கேட்கும் திறன் முழுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை வற்புறுத்தி லஞ்சம் வாங்குவதாக பணியாளர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    நெல்லையைச் சேர்ந்தவர் வக்கீல் ஜாபர்அலி. தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை பொதுச்செயலாளரான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஒவ்வொரு பணிக்கும் நோயாளிகளை வற்புறுத்தி பணம் வாங்குவதாக எங்கள் அமைப்புக்கு புகார்கள் வந்தன. ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த பரிசோதனை போன்றவற்றுக்கு பணம் கொடுத்தால் தான் உடனடியாக வேலை நடக்கிறது என்றும் புகார் கூறப்பட்டது. எங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் புற்றுநோய்க்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதை கண்கூடாக பார்த்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும், மருந்து, மாத்திரையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்ய அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்புக்குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், குழுக்கள் அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மருத்துவ சேவையை பெற முடியும் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவது, தாமதப்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
    ஜவுளி வியாபாரியை தாக்கியது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அலி அக்பர். ஜவுளி வியாபாரி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2013-ம் ஆண்டு என் மீது மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நான், கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், என்னிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இல்லாதபட்சத்தில் என் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க மறுத்த என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டி தாக்கினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சரவணன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×