search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக கட்சியினர் மீது புகார் - மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக சோபியாவின் தந்தைக்கு சம்மன்
    X

    பாஜக கட்சியினர் மீது புகார் - மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக சோபியாவின் தந்தைக்கு சம்மன்

    பா.ஜனதா கட்சியினர் மற்றும் போலீசார் மீது புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சோபியாவின் தந்தை சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #sophiaantipolis #BJP

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் டாக்டர் சாமி. இவருடைய மகள் சோபியா கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 3-ந் தேதி தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

    அப்போது விமானத்தில் வைத்து பா.ஜனதாவுக்கு எதிராக சோபியா கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் தனது மகள் மீது வழக்கு பதிந்த போலீசார், தான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை சாமி குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

     


    அதில் சோபியாவை பா.ஜனதா கட்சியினர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பல மணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகார் மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்பேரில் சாமி, அவருடைய மகள் சோபியா ஆகிய இருவரும் மாநில மனித உரிமை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக, அவர்களின் வக்கீல் ஒருவர் தெரிவித்தார். #sophiaantipolis

    Next Story
    ×