search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்- மனித உரிமை ஆணையம் உத்தரவு
    X

    சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம்- மனித உரிமை ஆணையம் உத்தரவு

    ஆட்டோ டிரைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை மூலக்கொத்தலம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். ஆட்டோ டிரைவர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது வீட்டின் அருகே கிடந்த குப்பையை அகற்றுவது சம்பந்தமாக எனது மனைவிக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. எனது மனைவியை அவதூறாக திட்டியது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சகோதரர் கொடுத்த புகார் அடிப்படையில் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கடுமையாக தாக்கினார். இதில், எனது காது கேட்கும் திறன் முழுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×