search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver killed"

    • லாரி மோதி விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.
    • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டிய பட்டியை சேர்ந்தவர் சீனிவாச ராகவன் (வயது52). அரசு பஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று விருதுநகரில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின் சீனிவாச ராகவ ன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    விருதுநகர்-சத்திர ரெட்டிய பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீனிவாச ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் அங்கு வந்து அரசு பஸ் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மயிலம் அருகே சாலை ஓர தடுப்புக்கட்டையில் லாரி மோதி டிரைவர் பலியானார்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த குமரேசன்(26), என்பவர் ஓட்டி சென்றார். மயிலம் அருகே விளங்கம்பாடி அய்யனா ரப்பன் கோயில் எதிரே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே சுற்றுலா வந்த பயணிகளின் கார் டயர் வெடித்து டிரைவர் பலியானார்.
    • அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மற்ற நபர்களுக்கு எந்தெந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    விழுப்புரம்:

    கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து நண்பர்கள் எட்டு பேர் ஒரு காரில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அந்த காரை கோலார் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 21) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை திண்டிவனம் வழியாக புதுவை நோக்கி சென்றனர். அப்போது தென்கோரிப்பாக்கம் பகுதி–யில் கார் வந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் காரை ஓட்டி வந்த விஜயகுமார் காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு கட்டையில் மோதினார். இந்த விபத்தில் கார் டிரைவர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மற்ற நபர்களுக்கு எந்தெந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி லாரி டிரைவர் பலியானார்.
    • சொந்த ஊர் நோக்கி இருசக்கரவாகனத்தில் வந்துள்ளார்

    அரியலூர்;

    திருச்சி மாவட்டம், விரகாலூரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆபேல்ராஜ்(வயது 29). இவர் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சிதம்பரம்- திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் துணை மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஆபேல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (38) கரும்பு லோடு ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று மதியம் 2.30 மணி அளவில் கிளாம்பாடி இரும்பு பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.

    இதில் ஓட்டுநர் பாலசுப்பிரமணினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    • வேன் மோதி லாரி டிரைவர் பலியானார்.
    • இவர் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் மந்தசாமி(வயது40). லாரி டிரைவரான இவர் விருதுநகரில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்தார்.

    இன்று அதிகாலை 2 மணி யளவில் திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வந்த போது அவரது லாரியின் டயர் பஞ்சரானது.

    இதையடுத்து லாரியை நிறுத்தி ஜாக்கி உதவியுடன் டயரை மாற்றி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து திருப்பூருக்கு பஞ்சு லோடுகளை ஏற்றி கொண்டு லோடு வேன் வந்தது. அந்த வேன் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டயரை மாற்ற வைத்திருந்த ஜாக்கி நகன்றதால் மந்தசாமி லாரியில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    தருமபுரி மாவட்டம் கெத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) டிரைவர். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் குளிப்பதற்கு இவரது நண்பர் துரைசாமி என்பவரும் வந்துள்ளனர். பண்ணந்தூர் செல்லும் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ஆற்றில் இருவரும் குளித்து விட்டு கரைமீது வந்துள்ளனர். தண்ணீர் தாகம் அதிகமாக உள்ளது என்று சிவக்குமாரை அங்கேயை இருக்க சொல்லவிட்டு துரைசாமி மட்டும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்து போது சிவக்குமார் அந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் இரவு முழுவதும் சிவக்குமாரை தேடி இல்லாததால் இது குறித்து பாரூர் போலிஸில் புகார் கொடுத்தார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தென் ஆற்றில் முழுவதும் தேடியதில் இன்று காலை ஆற்றின் ஓரத்தில் சிவக்குமார் தண்ணீரில் பிணமாக மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் போலிசார் அனுப்பி வைத்தார்.
    கோடம்பாக்கத்தில் மின்சார ரெயில் மோதி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை மார்க்கமாக வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில் ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    விரைந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார், பிரபாகரனின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அஞ்சுகிராமம் அருகே டிரைவர் கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
    அஞ்சுகிராமம்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 35). திருமணம் ஆகாதவர். இவர் மினி டெம்போவில் தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தார். நேற்று மாலை சுயம்புலிங்கம் அஞ்சுகிராமம் பஸ் நிலையம் அருகே உள்ள சிதம்பரநகர் பகுதியில் டெம்போவை நிறுத்தி அந்த பகுதியில் தண்ணீர் கேன்களை இறக்கிக் கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு மினி டெம்போவை ரோட்டில் நிறுத்தி வைத்திருந்ததாகச் சொல்லி சுயம்புலிங்கத்திடம் ஆனந்த் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றி 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

    இதுதொடர்பாக சுயம்புலிங்கம், அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் ஆனந்த்தை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து அவர் தலைமறைவாகி இருந்தார். 

    பின்னர் சுயம்புலிங்கம், அந்த பகுதியில் நிறுத்தியிருந்த தனது டெம்போவை எடுப்பதற்காக பஸ் நிலையம் வழியாக நடந்து சென்றார். அப்போது ஆனந்த் தனது நண்பர்கள் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், சிவராமபுரத்தைச் சேர்ந்த சரத்குமார் (22) ஆகியோருடன் அங்கு வந்தார். அவர்கள் சுயம்புலிங்கத்துடன் மீண்டும் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுயம்புலிங்கத்தை சரமாரியாக குத்தினார். இதில் சுயம்புலிங்கம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுயம்புலிங்கம் இறந்தார். 

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் ஆனந்த், சிவகுமார், சரத்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சரத்குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். தலைமறைவான ஆனந்த் மீது அஞ்சுகிராமம், பழவூர், கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. 

    இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஆனந்த்தை கைது செய்யக் கோரி சுயம்புலிங்கத்தின் ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆட்டோ டிரைவர்களும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் இன்று திரண்டனர்.  போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆனந்த்தை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    கந்தர்வக்கோட்டை அருகே காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டர் இறங்கியதால் திடீரென தலை குப்பற கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலியானார்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் ராகவேந்திரா (வயது 35), டிராக்டர் ஓட்டி வருகிறார்.

    நேற்று கணபதிபுரத்தில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு டிராக்டரில் வந்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பெருச்சிவன்னியம்பட்டி அருகே சென்ற போது எதிரே கார் வந்துள்ளது.

    காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டரை இறக்கியுள்ளார். திடீரென டிராக்டர் தலை குப்பற கவிழ்ந்தது. இதில் சிக்கிய ராகவேந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை அருகே லாரியின் மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
    ஈரோடு:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கத்தில் இருந்து 23 பேர் டிராவல்ஸ் வேனில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

    வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அந்த வேனும் அவருக்கு சொந்தமானதாகும்.

    கேரளாவுக்கு போகும் வழியில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் வந்த வேன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை நெருங்கியது. பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பினர்.

    பின்னர் அங்கிருந்து வேன் கிளம்பியது. அருகில் உள்ள மேம்பாலத்தில் வேன் ஏறியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் வேன் பயங்கரமாக மோதியது.

    இதில் டிரைவர் இருக்கும் பக்கம் வேன் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் இருக்கை மற்றும் அதற்கு பின்னால் உள்ள 2 இருக்கைகள் நொறுங்கியது.

    இதில் டிரைவர் சுதாகர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பின்பக்கத்தில் 2 இருக்கையில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். வேனில் இருந்த மற்றவர்களும் காயம் அடைந்தனர்.

    மொத்தம் 20 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களில் திருமூர்த்தி, லட்சுமி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    4 பேர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் காயம் அடைந்த மகேந்திரன் (13), கீர்த்தனா (17), பவ்யா (13), போகேஸ் (13), மவுனிகா (20) ஆகிய 5 பேர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காயம் அடைந்த மற்றவர்கள் லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×