search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delta district"

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
    திருச்சி:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட மச்சுவாடி, மாப்பிள்ளையார் குளம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பின்னர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றனர். பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதி அருகே உள்ள மைதானத்தில் முதல்வர் வந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.


    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்ற முதல்வர், சூரப்பள்ளம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்ல இருந்தார்.

    இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புயல் சேத ஆய்வு பணி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்வர் மற்றும் அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அதிகாரிகளுடன் புயல் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதையடுத்து இன்று பிற்பகலிலோ அல்லது மாலையோ எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வார் என தெரிவித்துள்ளார்.  #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
    புதுவை அருகே காற்றழுத்தம் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

    சென்னை:

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்கு வங்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிவரை பரவியுள்ளது.

    இது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்தமாக மாறி தமிழகத்தையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதியில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை காற்றழுத்தம் புதுவையை நெருங்கும். அதன்பிறகு நாகை-வேதாரண்யம் நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 60 கி.மீ. வரையும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தெற்கு மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காற்றழுத்தம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலையில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.

    மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் மழை தூரியது. #Rain

    திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #Mutharasan #Gajastorm #Storm

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை, எனவே பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சுகாதாரம், குடிநீருக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கபட்ட மக்கள் குடிநீர் விநியோகம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், மற்றும் பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #Gajastorm #Storm

    கஜா புயல் கோர தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் 2-வது நாளாக முடங்கி உள்ளது. #Gajastorm #Storm

    சென்னை:

    ‘கஜா’ புயல் நேற்று அதிகாலை 12.20 மணி முதல் 2.30 மணி வரை நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடந்தது.

    கஜா புயல் பரப்பளவு விட்டம் 26 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இருந்தது. இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில் மிக கடுமையாக கோர தாண்டவம் ஆடி விட்டது.

    கஜா புயல் கரையை கடந்தபோது 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் டெல்டா மாவட்டங்களை புயல் புரட்டி போட்டு விட்டது. சில பகுதிகளை கஜா புயல் வெறித்தனமாக சூறையாடியது.

    டெல்டா மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 40,820 பெரிய மரங்கள் வேரோடு விழுந்து விட்டன. 11,512 குடிசை வீடுகள் நாசமாகிவிட்டன.

    நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 102 துணை மின் நிறுவனங்கள், 495 மின் கடத்திகள், 205 மின் மாற்றிகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டன. டெல்டா மாவட்டங்களில் நேற்று நடந்த கணக்கெடுப்பில் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்சார வயர்கள் அறுந்து விழுந்துள்ளன.

    இதன் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மின்சாரம் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் தகவல் தொடர்பும் முடங்கி உள்ளது. சமீப ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களுக்கும் செல்போன் சேவைதான் மிக முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. மின்சாரம் இல்லாததால் செல்போன் சேவைகள் 90 சதவீதம் நடைபெறவில்லை.

     


     

    இதனால் டெல்டா மாவட்ட மக்கள் வெளியூரில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் முற்றிலும் முடங்கியுள்ளனர்.

    குறிப்பாக வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொலை தொடர்பு 100 சதவீதம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு மொபைல் செல்போன் கோபுரங்கள் மூலம் தொலை தொடர்பு வசதிகளை தற்காலிகமாக அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளார்கள்.

    டெல்டா மாவட்டங்களில் மின்சார இணைப்பை உடனே வழங்குவதற்கு முன்னுரிமை கொடுத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 11 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் புதிய மின் கம்பங்கள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது தவிர துணை மின் நிலையங்களை சீரமைத்து மின் கடத்திகள், மின் மாற்றிகளை பொருத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏற்கனவே மின் வாரியம் உள்கட்டமைப்பு பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்ததால் மின் உபகரணங்களை கொண்டு செல்லும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    என்றாலும் டெல்டா மாவட்டங்களில் மின் இணைப்பை முழுமையாக திரும்ப பெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பகுதி வாரியாக மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை கொடுத்து வருகிறார்கள்.

    கஜா புயல் கரையை கடந்தபோதும் அதன் பிறகு தரை வழியாக கேரளாவுக்கு நுழைந்த போதும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களை கஜா புயல் வேட்டையாடி விட்டது.

    இந்த 3 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் நாசமாகி விட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே 417 மையங்களில் சுமார் 82 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கஜா புயலின் ஆக்ரோ‌ஷ தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது. 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 36 பேர் உயிரிழந்ததாகவும், 49 பேர் உயிர் இழந்து விட்டதாகவும் சில அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறை, மேலாண்மை, கால்நடை, மீன்வளம், மின்சாரம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள். சில இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சீரமைப்பு பணிகள் நடந்தன.

    இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் உயிர் இழப்பு தவிர அரசு சொத்துக்களுக்கும், தனி நபர் சொத்துக்களுக்கும் எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற சேத விவரங்கள் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிய ஓரிரு நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

    டெல்டா மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வருவாய்த் துறையினர் நிவாரண பணியையும், சேதம் கணக்கெடுப்பு பணியையும் செய்து வருகிறார்கள். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகுதான் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் கோர தாண்டவம் எந்த அளவுக்கு நடந்து இருக்கிறது என்ற முழு விவரமும் தெரிய வரும். #Gajastorm #Storm

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடிக்கான உழவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டங்களில் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரப்பப் படாமலும், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் போர்வெல் பாசனத்தின் மூலம் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் கக்கரை, கூவத்தூர், திருமங்கல கோட்டை, திருநல்லூர், தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி விட்டு விட்டு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் வாடிய நிலையில் காணப்படுகிறது.

    தண்ணீர் இல்லாமல் தவித்த விவசாயிகள் இப்போது மின்சாரத்துக்கும் ஏங்கும் நிலை உள்ளது.

    தஞ்சை நகர் பகுதிகளில் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.

    அதேநரத்தில் கிராமப்புறங்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இரவு நேரங்களிலும் திடீர் திடீரென மின்வெட்டு இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்த 4 நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பேரளம், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய கிராமங்களில் தினமும் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

    குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் பகல் நேரத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தக சங்கத்தினர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபுவை நேரில் சந்தித்து ‘ தடையின்றி மின்சாரம் வழங்க கோரி’ மனு கொடுத்தனர்.

    நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், பொறையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் அதிகபட்சமாக தினமும் 6 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாமல், கடைமடை விவசாயிகளும் விழிபிதுங்கி தவித்து வருகிறார்கள். 

    டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வறுத்தெடுத்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு வந்தன. மாலை 4.30 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. 5 மணி அளவில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இடி-மின்னல் எதுவும் இல்லாமல் பெய்த இந்த மழை 6.30 மணி வரை நீடித்தது. 1½ மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் சிலர் மட்டும் தேங்கி நின்ற தண்ணீரையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே கீழ்பாலம் வழியாகவே சென்றனர். அவர்களால் முழுமையாக தண்ணீரை கடந்து வர முடியாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்று விட்டது.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

    மழையின் காரணமாக தஞ்சை மேலவீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் அகழியில் சென்று சேரும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் மேலவீதி மூலை அனுமார் கோவில் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கியதுடன், கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. உற்சவர் சாமி இருக்கும் இடம் வரை தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை தேங்கி நின்றது.

    சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பசீர் அகமது (வயது 50). நேற்று பெய்த மழை காரணமாக இவரது வீட்டில் இருந்த டியூப் லைட் திடீரென உயர்மின் அழுத்தம் காரணமாக வெடித்தது. இதனால் தீ பிடித்து எரிந்ததால் வீட்டில் இருந்த சோபா, மற்றும் கட்டிலில் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. நல்லவேளையாக வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து தப்பி விட்டனர்.

    மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாகுபடி செய்த விவசாயிகள் நேற்று பெய்த இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடும் வறட்சியின் காரணமாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை நிரம்பியுள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் டெல்டா மாவட்டங்களில் மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு விவசாயி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருவாரூர்:

    அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி பட்டு வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கொரடாச்சேரியை அடுத்த காவலக்குடியை சேர்ந்த கூத்தான் (60) என்பவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். திடீரென மழை பெய்ததால் அவர் அருகில் உள்ள மரத்தின் அடியில் நின்றார். அப்போது இடியுடன் கண்களை கூச செய்யும் மின்னலும் வெட்டியது. அவரை மின்னல் தாக்கியதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கூத்தன் உடல் கருகி இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கூத்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான கூத்தனுக்கு சமுத்திரம் என்ற மனைவியும், மஞ்சுளா என்ற மகளும், செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோட்டைச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 47). இவர் சாலபோகம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனை கண்ட குருசாமி செங்கல்கள் மழையில் கரைந்து விடாமல் இருக்க அவைகளை கொட்டகையில் எடுத்து அடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வலங்கைமான் தாசில்தார் பரஞ்ஜோதி, வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, கிராம நிர்வாக அலுவலர் கமலநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குருசாமி உடலை பார்வையிட்டனர். வலங்கைமான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் குருசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இடி தாக்கி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலியான குருசாமிக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    பாபநாசம் நெடுந்தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 47). விவசாய கூலிதொழிலாளி. இவர் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உமையாள்புரம் மெயின்ரோட்டில் வந்தபோது இடியுடன் மழை பெய்தது. இதில் சாலையோரம் இருந்து ஒரு மரத்தின் கிளை முறித்து சண்முகம் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பொதுமக்கள் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கும்பகோணத்தில் நேற்று மாலை திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது கொரநாட்டுக் கருப்பூர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி (வயது 65) என்பவரது வீட்டின் பின்புறம் இடிவிழுந்து தென்னை மரம் எரிந்தது.

    உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதே போன்று தாராசுரம் பகுதியில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது தாராசுரம் கடைத் தெருவில் சாக்கோட்டை துணை மின் நிலையத்திலிந்து வரும் உயரழுத்த கம்பிகள் சில அறுந்து விழுந்தன. 10 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    மேலும் பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் தென்னைமரங்கள், தாராசுரம் திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை ஆகியன சாய்ந்து விழுந்து சேதமானது. மின்கம்பங்கள் சேதமானதால் மின்வாரிய உதவி பொறியாளர் தலைமையில் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையிலும் அரசியல் கட்சிகள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யகோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை ரெயில் நிலையம் அருகே தமிழ்தேசிய பேரியக்கம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழர் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சாலை மறியல் போராட்டத்தால் பழைய பஸ்நிலையத்தில் திடீரென போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே மறியல் கைவிடப்பட்டது. அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    தஞ்சை அருகே உள்ள சானூராப்பட்டி கடைவீதியில் அனைத்து கட்சிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    அனைத்து கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் நகர செயலாளர் தமிழழகன், தி.மு.க. நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, திராவிட கழகம் நகர செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், நீலப்புலிகள் கட்சி நிறுவனர் பாக்கியராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதே போல் மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ., தி.க.வினர் உள்பட பல்வேறு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிட முக்கூட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்தது சீர்காழி போலீசார் மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.

    ×