search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

    டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வறுத்தெடுத்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு வந்தன. மாலை 4.30 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. 5 மணி அளவில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இடி-மின்னல் எதுவும் இல்லாமல் பெய்த இந்த மழை 6.30 மணி வரை நீடித்தது. 1½ மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் சிலர் மட்டும் தேங்கி நின்ற தண்ணீரையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே கீழ்பாலம் வழியாகவே சென்றனர். அவர்களால் முழுமையாக தண்ணீரை கடந்து வர முடியாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்று விட்டது.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

    மழையின் காரணமாக தஞ்சை மேலவீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் அகழியில் சென்று சேரும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் மேலவீதி மூலை அனுமார் கோவில் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கியதுடன், கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. உற்சவர் சாமி இருக்கும் இடம் வரை தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை தேங்கி நின்றது.

    சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பசீர் அகமது (வயது 50). நேற்று பெய்த மழை காரணமாக இவரது வீட்டில் இருந்த டியூப் லைட் திடீரென உயர்மின் அழுத்தம் காரணமாக வெடித்தது. இதனால் தீ பிடித்து எரிந்ததால் வீட்டில் இருந்த சோபா, மற்றும் கட்டிலில் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. நல்லவேளையாக வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து தப்பி விட்டனர்.

    மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவில்லை. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாகுபடி செய்த விவசாயிகள் நேற்று பெய்த இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடும் வறட்சியின் காரணமாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை நிரம்பியுள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் டெல்டா மாவட்டங்களில் மழையும் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×