search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு விவசாயி உள்பட 3 பேர் பலி
    X

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு விவசாயி உள்பட 3 பேர் பலி

    டெல்டா மாவட்டங்களில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு விவசாயி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருவாரூர்:

    அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதி பட்டு வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கொரடாச்சேரியை அடுத்த காவலக்குடியை சேர்ந்த கூத்தான் (60) என்பவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். திடீரென மழை பெய்ததால் அவர் அருகில் உள்ள மரத்தின் அடியில் நின்றார். அப்போது இடியுடன் கண்களை கூச செய்யும் மின்னலும் வெட்டியது. அவரை மின்னல் தாக்கியதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கூத்தன் உடல் கருகி இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கூத்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான கூத்தனுக்கு சமுத்திரம் என்ற மனைவியும், மஞ்சுளா என்ற மகளும், செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோட்டைச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 47). இவர் சாலபோகம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனை கண்ட குருசாமி செங்கல்கள் மழையில் கரைந்து விடாமல் இருக்க அவைகளை கொட்டகையில் எடுத்து அடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வலங்கைமான் தாசில்தார் பரஞ்ஜோதி, வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, கிராம நிர்வாக அலுவலர் கமலநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குருசாமி உடலை பார்வையிட்டனர். வலங்கைமான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் குருசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இடி தாக்கி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலியான குருசாமிக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    பாபநாசம் நெடுந்தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 47). விவசாய கூலிதொழிலாளி. இவர் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உமையாள்புரம் மெயின்ரோட்டில் வந்தபோது இடியுடன் மழை பெய்தது. இதில் சாலையோரம் இருந்து ஒரு மரத்தின் கிளை முறித்து சண்முகம் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பொதுமக்கள் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கும்பகோணத்தில் நேற்று மாலை திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது கொரநாட்டுக் கருப்பூர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி (வயது 65) என்பவரது வீட்டின் பின்புறம் இடிவிழுந்து தென்னை மரம் எரிந்தது.

    உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதே போன்று தாராசுரம் பகுதியில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது தாராசுரம் கடைத் தெருவில் சாக்கோட்டை துணை மின் நிலையத்திலிந்து வரும் உயரழுத்த கம்பிகள் சில அறுந்து விழுந்தன. 10 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    மேலும் பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் தென்னைமரங்கள், தாராசுரம் திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை ஆகியன சாய்ந்து விழுந்து சேதமானது. மின்கம்பங்கள் சேதமானதால் மின்வாரிய உதவி பொறியாளர் தலைமையில் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×