search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Highcourt"

    • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.
    • இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தன.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தன.

    இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, அதிர்ஷ்டம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்தது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி
    • நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அப்போது இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அப்போது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில்தான் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • ஆவின் நிர்வாக இயக்குநர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
    • அதில், கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

    விசாரணையின்போது, ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என்று ஆவின் நிறுவனத்துக்கு நீதிபதிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய முன்னதாக உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி, ஆவின் நிர்வாக இயக்குநர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், சென்னை, கோவையில் 7 இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 5 இடங்களில் பாலை பாட்டிலுக்கு பதில் பிளாஸ்டிக் பாக்கெட்டாக வழங்கவேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறப்பட்டு இருந்தது.

    பாட்டில்களில் பால் விற்பனை செய்தால் விலை உயர்ந்துவிடும் என்பதால், பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்கப்படும் பால் தங்களுக்கு போதுமானது என்று தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில், இதனை ஆய்வு செய்து நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

    • ஓ.பி.எஸ். தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நடனமாடி இனிப்புகள் வழங்கினார்.

    நெல்லை:

    கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரியும், கட்சியில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ்பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

    இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் ஓ.பி.எஸ். தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப் பாண்டி, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செய லாளர்கள் மோகன், ஜெனி, சிந்து முருகன், காந்தி வெங்க டாச்சலம், பாளை பகுதி மாண வரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுரணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், நிர்வாகிகள் சம்சுசுல்தான், டால்சரவணன், தாழை மீரான் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தலைமையிலான நிர்வாகிகள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நடனமாடி இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் வள்ளியூர் சுந்தர், பகுதி செயலாளர் மோகன், திருத்து சின்ன துரை, ஒன்றிய செய லாளர் மருதூர் ராம சுப்பிரமணியன், கவுன்சி லர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வழக்கின் மனு தொடர்பான நகல்களை பெற்று விளக்கம் அளிப்பதாக காவல்துறை தகவல்.
    • ஆர்எஸ்எஸ் தரப்பு மனுவிற்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச் சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பின்னர் அதில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட தேதிகளில் அனுமதி வழங்குவதாக காவல்துறை கூறினால் அதை ஏற்க தயார் என்றும் வாதிடப்பட்டது-

    அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் மனு தொடர்பான நகல்கள் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என்பதால், அதை பெற்று விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு நீதிபதிகள், மனுவின் நகலை அரசு தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டனர்.

    மேலும் அந்த மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அப்போது ஜனவரி 22 மற்றும் 29ந் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 5ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தோனி புகார் கூறியிருந்தார்.

    கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2014 ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சம்பத் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறி, சம்பத் குமார் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியை பெற்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தோனி தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்புக்கு அனுமதி இல்லை.
    • உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் நீதிபதி உத்தரவு

    தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 2ந் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 47 இடங்களில் அணி வகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 6ந் தேதி தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • உள்ளரங்கு கூட்டமாக நடத்த சம்மதம் தெரிவித்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார்.
    • 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது.

    தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். மற்ற 47 இடங்களில் அனுமதி வழங்கவில்லை, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது என்று அவர் வாதிட்டார்

    காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ந்தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு சூழல் வேறு மாதிரியாக உள்ளது என்றார். தமிழகத்தில் தற்போது பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.

    • ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை.
    • ஆர்டர்லிகளும் வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், புகார் தெரிவிப்பதில்லை.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. எல்லாருக்கும் ஒரு உதவியாளர் தேவைதான். அதற்காக பொதுமக்கள் பணம் வீணடிக்கக்கூடாது'என்று கூறினார்.

    இதையடுத்து பேசிய கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்ப பெறப்படுவார்கள் என்று கூறினார். அப்போது பேசிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    அதனை டி.ஜி.பி. (சைலேந்திரபாபு) அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, இதுதொடர்பான நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.

    ஒரு அதிகாரி 5 பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தும்போது, மாதம் ரூ.2.50 லட்சம் அரசுக்கு செலவு ஆகுகிறது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம்,
    • தாசில்தார் சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

    சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது மகன் யுவன் மனோஜை, அம்பத்தூரில் உள்ள பள்ளியில் சேர்த்த போது, ​​அங்குள்ள அலுவலர்கள், விண்ணப் படிவத்தில் சாதி, மதம் தொடர்பான பத்தியை நிரப்ப வலியுறுத்தினர். அவர் மறுத்ததால், அந்த சிறுவனை பள்ளியில் சேரத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது

    இதையடுதது தமது மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜெகதீசன் விண்ணப்பித்திருந்தார். அவர் கோரியபடி சாதி மதம் இல்லை என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகதீசன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தாசில்தார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யுவன் மனோஜிற்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது?.
    • வாட்டன் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது?.

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது நீதிபதிகள் கூறும்போது, பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம் என்பது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினர்.

    அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    அதற்கு தமிழக அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

    அப்போது பேசிய நீதிபதிகள் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும், வாட்டன் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ‘அரசன்’ படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக நடிகர் சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #STR #Simbu
    நடிகர் சிம்பு மீது சினிமா பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

    நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ படத்தை தயாரிக்க திட்டமிட்டு இதற்காக அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி முன் பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கப்பட்டது.

    ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தார். அவர் சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.



    இந்த தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக சிம்பு தரப்பில் வாதிடுகையில், “குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். #STR #Simbu #Arasan

    ×