என் மலர்
உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)
ஐபிஎஸ் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தோனி
- ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தோனி புகார் கூறியிருந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2014 ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சம்பத் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறி, சம்பத் குமார் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியை பெற்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தோனி தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






