search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Jodo Yatra"

    • லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார்.
    • ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பாதயாத்திரை சென்றார்.

    பஞ்சாப்பில் நடந்து வந்த பாத யாத்திரை நேற்று நிறைவு பெற்றது. அங்கிருந்த லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ராகுல்காந்தி இன்று தனது யாத்திரையை காஷ்மீரில் இருந்து தொடங்கியது. கதுவா மாவட்டம் ஹட்லி மோர் என்ற இடத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டது.

    ராகுல்காந்தி வெள்ளை நிற டி.சர்ட்டுக்கு மேல் கருப்பு கோட் அணிந்திருந்தார். யாத்திரை காலை 7 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 1¼ மணி நேரம் தாமதமாக யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைவர் விகார் ரசூல்வானி, காங்கிரஸ் தலைவர்கள், சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் நடந்து சென்றனர்.

    காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ராகுல்காந்தியை சுற்றி போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    யாத்திரை செல்லும் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பதாகைகள், மாலைகளை ஏந்தியவாறு ராகுல்காந்தியை வரவேற்க காத்திருந்தனர். ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது.

    • பல மாநிலங்களைக் கடந்து வந்த இந்த யாத்திரை இன்று காஷ்மீரில் நுழைந்தது.
    • காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர்.

    இந்நிலையில், இந்த யாத்திரை இன்று காஷ்மீரை வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.

    காஷ்மீர் வந்தடைந்த ராகுலின் பாதயாத்திரையில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று அவர் கலந்துரையாடினார்.

    • கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாதயாத்திரை தொடங்கினார்.
    • 30-ந்தேதி காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது.

    சிம்லா :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று அங்கிருந்து புறப்பட்டது. காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல பிரதேசத்துக்குள் நுழைந்தது.

    கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர். வாழ்த்து கோஷங்கள் முழங்கின. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட சிலர் மட்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், ராகுல்காந்தி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர்களுடன் உரையாடினார்.

    மான்சர் சுங்கச்சாவடி அருகே ராகுல்காந்திக்கும், தொண்டர்களுக்கும் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு, துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங் ராஜா வார்ரிங், தேசிய கொடியை இமாசலபிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங்கிடம் ஒப்படைத்தார். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-

    "பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்தில், கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கினோம். இது நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயன்றோம். வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் நாட்டின் முக்கிய பிரச்சினைகள். ஆனால் இவற்றை பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை.

    நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை மூலமும் எழுப்ப முடியவில்லை. ஏனென்றால், அவை மத்திய அரசின் நிர்பந்தத்தில் இயங்குகின்றன. எனவே, மக்களிடமே இப்பிரச்சினைகளை பேசுவதற்காக பாதயாத்திரையை தொடங்கினோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் உள்பட மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் மூன்று, நான்கு பெரும் கோடீசுவரர்களுக்கு நன்மை செய்வதை நோக்கமாக கொண்டவை.

    விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. நாட்டில் வெறுப்பு, வன்முறை, அச்சம் ஆகியவற்றை பரப்பி வருகிறது. முதலில், பாதயாத்திரை பயணத்தில் இமாசலபிரதேசம் இல்லை. பின்னர், பயண வழியை மாற்றி, இமாசலபிரதேசத்தையும் சேர்த்துள்ளோம். இங்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். 30-ந் தேதி, காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது."

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.
    • பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன.

    ஹோஷியார்பூர்:

    இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

    அவர்களின் சித்தாந்தங்கள் எங்களுடன் ஒத்துப்போகாது. வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும். பாஜக அதை ஏற்காமல் போகலாம்.

    என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு போக முடியாது. என் கழுத்தை அறுத்தாலும் அங்கு நான் போக மாட்டேன். எனது குடும்பத்திற்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது, அதற்கு ஒரு சிந்தனை அமைப்பு உள்ளது. நான் அவரை அன்புடன் சந்திக்க முடியும், அவரை கட்டிப்பிடிக்க முடியும். ஆனால் அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு சாத்தியம் இல்லை.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையம், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் அழுத்தம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில், கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு மாநிலங்களை கடந்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் போது நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார் ராகுல்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜியினி திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா தொற்றுநோய் மீண்டும் பரவியதைத் தொடர்ந்து, நெறிமுறைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசிடம் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியது. இதன்மூலம் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை ஆம் ஆத்மி கட்சி மறைமுகமாக தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு-காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் மாநில பிரிவு தலைவர்கள் யாத்திரையில் இணைய உள்ளனர். குப்கார் கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான எம்ஒய் தாரிகாமியும் கலந்து கொள்ள உள்ளார்.

    • பிம்பத்தைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்
    • தனது பணிகளை மட்டுமே தொடர இருப்பதாக கூறினார்.

    புதுடெல்லி :

    இந்திய ஒற்றுமை பயணம் தன்னை மிகப்பெரிய அளவில் மாற்றும் என கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அரியானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இந்த பாதயாத்திரை உங்களின் பிம்பத்தை மாற்றியிருக்கிறதா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தியை அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள்? என தெரியாது. ஆனால் அந்த ராகுல் காந்தியை எப்போதோ கொன்று விட்டேன். இப்போது நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை. என் மனதில் ராகுல் காந்தி இல்லை, பா.ஜனதா தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது' என்று கூறினார்.

    மேலும் அவர், 'இது குறித்து குழப்பம் வேண்டாம், இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு புரியும்' என்றும் தெரிவித்தார்.

    பிம்பத்தைப்பற்றி தான் கவலைப்படமாட்டேன் என்றும், அதில் என்றுமே விருப்பம் இல்லை எனறும் கூறிய ராகுல் காந்தி, அதை அடுத்தவர்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும், அவர் தனது பணிகளை மட்டுமே தொடர இருப்பதாகவும் கூறினார்.

    • பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல்காந்தி நேற்று கபடி போட்டியை கண்டு களித்தார்.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜிந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் ராகுல்காந்தியுடன் சேர்ந்து கபடி போட்டியை கண்டு களித்தனர்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது. கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பாரத் ஜோடோ யாத்திரை அரியாவா வழியாக சென்ற நிலையில் தற்போது மீண்டும் யாத்திரை அரியானாவுக்குள் நுழைந்துள்ளது.

    இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல்காந்தி நேற்று கபடி போட்டியை கண்டு களித்தார். அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் கபடி போட்டியை ராகுல்காந்தி கண்டு களித்தார். அப்போது, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜிந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட பலர் ராகுல்காந்தியுடன் சேர்ந்து கபடி போட்டியை கண்டு களித்தனர்.

    • ஒரே மாதத்தில் உண்மையை நாட்டுக்கு காட்டியிருப்பதாக ராகுல் காந்தி பேச்சு
    • நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    எனது யாத்திரைக்கு தேவையான சக்திய மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ளீர்கள். சிலர் எல்லா இடங்களிலும் மத வெறுப்புணர்ச்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். யாத்திரையை தொடங்கியபோது நாட்டில் நிலவும் வெறுப்புணர்ச்சியை நீக்க நினைத்தேன்.

    கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து வந்துள்ளேன். நாட்டில் எங்கும் வன்முறையையோ வெறுப்பையோ பார்த்ததில்லை. நான் தொலைக்காட்சியை ஆன் செய்தால் நான் வன்முறையை பார்க்கிறேன். ஊடகங்களை கட்டுப்படுத்தும் சக்திகளின் தூண்டுதலின் பேரில் எப்போதும் தொலைக்காட்சியில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடியும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் எனது இமேஜை அழிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. ஆனால், நான் ஒரே மாதத்தில் உண்மையை நாட்டுக்கு காட்டியிருக்கிறேன்.

    உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக 24 மணி நேரமும் இந்து-முஸ்லிம் பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது. 24 மணி நேரமும் இந்து-முஸ்லிம் என பேசிவிட்டு, உங்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் நண்பர்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்கள் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பார்கள். இது நரேந்திர மோடியின் அரசு அல்ல, அம்பானி-அதானியின் அரசாங்கம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • கொரோனா மீண்டும் பரவுவதால் பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியது.
    • இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கொரோனா மீண்டும் பரவுவதால் எனது பாத யாத்திரையை நிறுத்தவேண்டும் என கூறியிருக்கிறார். மற்ற இடங்களில் பா.ஜ.க.வினர் அவர்கள் விரும்பியபடி பொதுக்கூட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவுமாம் என கடுமையாக தாக்கிப் பேசினார்.

    இதேபோல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசை கடுமையாக சாடினார்.

    இந்திய ஒற்றுமை பயணம் குறித்து அவதூறு பரப்பவும், யாத்திரையை தடம் புரளச் செய்வதற்கும் அரசாங்கம் கொரோனா நாடகத்தை திட்டமிட்டு நடத்துகிறது. அறிவியல்பூர்வ ஆலோசனையின் அடிப்படையிலான நெறிமுறைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என தெரிவித்தார்.

    • கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களை காங்கிரஸ் பின்பற்றும்.
    • நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    லக்னோ:

    ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை ஜனவரி 3 ஆம் தேதி பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியா விட்டால், பாத யாத்திரையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாயன்று கடிதம் எழுதியிருந்தார்.

    கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும், ஆனால் பாத யாத்திரை நிறுத்தப்படாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் தங்கள் கருத்தைப் பேச உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது, அதனால்தான் பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரேனாவிற்கு பயப்படாதவர்கள், பாத யாத்திரைக்கு பயப்படுகின்றனர். நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

    இந்த பாத யாத்திரையை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு அது பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி முக கவசம் அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தது குறித்து பதிலளித்த குர்ஷித், பிரதமர் மோடி மிகச் சிறந்த நாடக கலைஞர் என்று கூறியுள்ளார்.

    • இந்தியாவின் மிக முக்கிய நபர்கள் ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் கொடுத்து நடந்து செல்கின்றனர்.
    • யாத்திரையை வழிநடத்திச் செல்லும் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மனவலிமை பாராட்டப்பட வேண்டியது.

    கன்னியாகுமரி:

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், 100-வது நாளை எட்டியதையடுத்து, காங்கிரசார் கொண்டாடிவருகின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

    பாசிச சக்திகளிடம் இருந்து இந்தியாவை விடுவித்து இந்தியர்களை ஒன்றிணைக்கும் நல்நோக்கத்துடன் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று நமது கன்னியாகுமாரியில் இருந்து தொடங்கிய #இந்திய_ஒற்றுமை_பயணம் இன்று நூறாவது நாளை எட்டி இருக்கிறது.

    இந்தப் பயணம் வெற்றி அடையுமா என்று சந்தேகம் எழுப்பியவர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாளுக்கு நாள் மக்கள் பேராதரவுடன் இது ஒரு வெற்றிப் பயணமாக சென்று கொண்டிருக்கிறது.

    தினமும் லட்சக்கணக்கான மக்கள் இணையும் இந்த யாத்திரையில் இந்தியாவின் மிக முக்கிய நபர்களும் கலந்து கொண்டு தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நடந்து செல்கின்றனர்.

    இந்த யாத்திரையை வழிநடத்திச் செல்லும் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மனவலிமை பாராட்டப்பட வேண்டியது. இரண்டு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றபோதும், ஓட்டுகள் வெல்வதை விட இரண்டு மாநிலங்களை வெல்வதை விட இந்தியாவை ஒன்றிணைப்பதே முக்கியம் என்ற குறிக்கோளுடன் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்த யாத்திரையில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பிரத்தியேக பாராட்டு மற்றும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வெயில் என்றும் மழை என்றும் பனி என்றும் பாராமல், கால்கள் தளர்ந்து விடாமல், மனம் சோர்ந்து விடாமல் இந்தியாவை ஒன்றிணைப்பது லட்சியம் என்ற குறிக்கோளுடன் நடந்து செல்லும் இவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

    இந்தப் பயணம் வெற்றிகரமாக கடந்து சென்ற அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பை மட்டும் தூவி செல்லும் இந்த யாத்திரை இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வரும் நாட்களிலும் இந்த பயணம் இன்னும் பலம் பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.

    • ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
    • இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.

    சவாய் மாதோபூர்:

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:

    பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,

    இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×