search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் ஜோடோ யாத்ரா"

    • கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாதயாத்திரை தொடங்கினார்.
    • 30-ந்தேதி காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது.

    சிம்லா :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று அங்கிருந்து புறப்பட்டது. காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல பிரதேசத்துக்குள் நுழைந்தது.

    கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர். வாழ்த்து கோஷங்கள் முழங்கின. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட சிலர் மட்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், ராகுல்காந்தி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர்களுடன் உரையாடினார்.

    மான்சர் சுங்கச்சாவடி அருகே ராகுல்காந்திக்கும், தொண்டர்களுக்கும் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு, துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங் ராஜா வார்ரிங், தேசிய கொடியை இமாசலபிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங்கிடம் ஒப்படைத்தார். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-

    "பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்தில், கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கினோம். இது நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயன்றோம். வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் நாட்டின் முக்கிய பிரச்சினைகள். ஆனால் இவற்றை பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை.

    நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை மூலமும் எழுப்ப முடியவில்லை. ஏனென்றால், அவை மத்திய அரசின் நிர்பந்தத்தில் இயங்குகின்றன. எனவே, மக்களிடமே இப்பிரச்சினைகளை பேசுவதற்காக பாதயாத்திரையை தொடங்கினோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் உள்பட மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் மூன்று, நான்கு பெரும் கோடீசுவரர்களுக்கு நன்மை செய்வதை நோக்கமாக கொண்டவை.

    விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. நாட்டில் வெறுப்பு, வன்முறை, அச்சம் ஆகியவற்றை பரப்பி வருகிறது. முதலில், பாதயாத்திரை பயணத்தில் இமாசலபிரதேசம் இல்லை. பின்னர், பயண வழியை மாற்றி, இமாசலபிரதேசத்தையும் சேர்த்துள்ளோம். இங்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். 30-ந் தேதி, காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது."

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிம்பத்தைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்
    • தனது பணிகளை மட்டுமே தொடர இருப்பதாக கூறினார்.

    புதுடெல்லி :

    இந்திய ஒற்றுமை பயணம் தன்னை மிகப்பெரிய அளவில் மாற்றும் என கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அரியானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இந்த பாதயாத்திரை உங்களின் பிம்பத்தை மாற்றியிருக்கிறதா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தியை அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள்? என தெரியாது. ஆனால் அந்த ராகுல் காந்தியை எப்போதோ கொன்று விட்டேன். இப்போது நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை. என் மனதில் ராகுல் காந்தி இல்லை, பா.ஜனதா தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது' என்று கூறினார்.

    மேலும் அவர், 'இது குறித்து குழப்பம் வேண்டாம், இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு புரியும்' என்றும் தெரிவித்தார்.

    பிம்பத்தைப்பற்றி தான் கவலைப்படமாட்டேன் என்றும், அதில் என்றுமே விருப்பம் இல்லை எனறும் கூறிய ராகுல் காந்தி, அதை அடுத்தவர்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும், அவர் தனது பணிகளை மட்டுமே தொடர இருப்பதாகவும் கூறினார்.

    • மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது.
    • அசவுகரியத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்போதும் நல்லது.

    இந்தூர் :

    மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள இந்தூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பாதயாத்திரையில் மிகவும் திருப்தியான தருணம் குறித்து கேட்டதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-

    திருப்தியான தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால், என்னுள் ஏற்பட்ட சில சுவையான மாற்றங்கள் இருக்கின்றன. பாதயாத்திரையால் எனது பொறுமை கணிசமாக அதிகரித்து விட்டது. இரண்டாவது, 8 மணி நேரமானாலும் நான் எரிச்சல் அடைவது இல்லை. முன்பெல்லாம் 2 மணி நேரத்தில் எரிச்சல் அடைந்து விடுவேன். யாராவது தள்ளினாலும், இழுத்தாலும் என்னை பாதிப்பது இல்லை.

    மூன்றாவது, மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது. யாராவது என்னிடம் ஏதேனும் சொல்ல வந்தால், நன்றாக கேட்கிறேன். இவையெல்லாம் எனக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.

    நான் பாதயாத்திரையை தொடங்கியபோது, ஏற்கனவே குணமாகிவிட்ட ஒரு காயத்தால், முழங்காலில் வேதனை ஏற்பட்டது. அந்த நிலைமையில், என்னால் நடக்க முடியுமோ, முடியாதோ என்ற அச்சம் உருவானது. ஆனால், அந்த அச்சத்தை படிப்படியாக சமாளித்தேன். அசவுகரியத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்போதும் நல்லது.

    தென்மாநிலம் ஒன்றில் நான் நடைபயணத்தில் இருந்தபோது, வேதனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, 6 அல்லது 7 வயதுடைய ஒரு சிறுமி என்னிடம் வந்து ஒரு கடிதத்தை அளித்தாள்.

    அதை படித்து பார்த்தேன். ''நீங்கள் தனியாக நடப்பதாக கருதாதீர்கள். பெற்றோர் அனுமதிக்காததால், உங்களுடன் என்னால் நடக்க இயலாது. ஆயினும் நானும் நடப்பதாக கருதுகிறேன்'' என்று எழுதப்பட்டு இருந்தது.

    இதுபோல், ஆயிரக்கணக்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதுதான் முதலில் என் மனதில் வந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
    • ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது.

    ஐதராபாத்

    இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து சென்ற வாரம் தெலுங்கானாவில் நுழைந்துள்ளது.

    யாத்திரையின் 56-வது நாளான நேற்று ஐதராபாத் நகரின் பாலநாகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யாத்திரை தொடர்ந்தது. ஹபீஸ்பேட்டில் காலை இடைவேளையும், முதாங்கியில் மாலை இடைவேளையும் விடப்பட்டது.

    பாதயாத்திரை சென்றவர்கள் கவுலம்பேட்டில் இரவில் ஓய்வெடுத்தனர்.

    முன்னதாக இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பங்கேற்கும் யாத்ரீகர்களை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று போவன்பள்ளியில் சந்தித்து உரையாடினார்.

    பின்னர் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-

    இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள யாத்ரீகர்களை ஐதராபாத்தின் போவன்பள்ளியில் சந்தித்து பேசினேன். ராகுல் காந்தியுடன் 3,500 கி.மீ. நடந்து செல்லும் அவர்கள் நமது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.

    இந்திய ஒற்றுமை பயணம் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    • செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
    • 21-ந்தேதி வரை ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார்.

    கர்னூல் :

    நாட்டின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பாதயாத்திரை) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் யாத்திரையை முடித்து விட்டு கர்நாடக மாநிலத்தில் அவர் யாத்திரை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில், அவர் அங்கு பல்லாரி மாவட்டம், சங்கனகல்லு கிராமத்தில் வாக்கு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து நேற்று அவர் ஆந்திர மாநிலத்தில், அலுரு தொகுதியில் உள்ள ஹலாகார்வியில் பாத யாத்திரையைத் தொடங்கினார்.

    21-ந் தேதிவரை அவர் ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார். இந்த யாத்திரையில் அவர் 119 கி.மீ. தொலைவை கடக்கிறார்.

    நேற்று அவர் ஷேத்ரகுடியில் அனுமன் கோவிலுக்கு சென்று அங்கிருந்த யாத்திரையைத் தொடர்ந்தார்.

    ஆந்திர மாநிலத்தில் யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜாநாத், ரகுவீர ரெட்டி, தெலுங்கானாவின் நால்கொண்டா எம்.பி. உத்தம்குமார் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    ஆந்திராவில் 4 நாள் பாத யாத்திரைக்கு பின்னர் மீண்டும் கர்நாடகத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை நடத்த உள்ளார்.

    • ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ளார்.
    • குலாம்நபி ஆசாத் என் மதிப்புக்குரிய மூத்த தலைவர்.

    திருவனந்தபுரம் :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ளார்.

    இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவரும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவருமான மூத்த தலைவர் சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்வதை விட காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் போன்றோர் விமர்சித்துள்ளார்களே, இதில் உங்கள் கருத்து என்ன?

    பதில்:- குலாம்நபி ஆசாத் என் மதிப்புக்குரிய மூத்த தலைவர். அவா் குறிப்பிட்ட கருத்து பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

    ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்தும், காங்கிரசில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும். விழுமியங்கள், லட்சியங்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாட்டை ஒருங்கிணைக்கக்கூடிய கட்சி காங்கிரஸ்தான்.

    கேள்வி:- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவது தொடர்பான வாய்ப்பு பற்றி?

    பதில்:- நான் தேர்தல் நடத்தப்படுவதைத்தான் வரவேற்றேன். இது கட்சிக்கு நல்லது என்று நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள வேறு எந்த கட்சி அதன் தலைவர் பதவிக்கு வெளிப்படையான தேர்தல் நடத்துகிறது?

    ஜனநாயக கொள்கையின் இந்த பொதுவான அறிக்கை, நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நாடு முழுவதும் உள்ள ஏராளமானோர் உடனடியாக வரவேற்க வழிவகுத்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளேன்.

    கேள்வி:- பா.ஜ.க. தலைவர் அத்வானி 1990-களின் முற்பகுதியில் மேற்கொண்ட ரத யாத்திரை போன்ற சமூக அரசியல் தாக்கத்தை இந்த இந்திய ஒற்றுமை பயணம் ஏற்படுத்துமா?

    பதில்:- அது சாத்தியம்தான். ஆனால் பயணம் தொடரும்போதுதான் அதன் தாக்கத்தை அளவிட முடியும். காங்கிரசின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு இது அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- இந்த நடைபயணம் கட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?

    பதில்:- நிச்சயமாக நான் அதை நம்புகிறேன்.

    மற்ற கட்சிகள், அரசியல் சார்பில்லாத தனிநபர்கள், சிவில் சமூக குழுக்கள் உள்பட அனைவருடனும் நாங்கள் பணியாற்றும் வேளையில், ஒரு அரசியல் கட்சியால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பெரிய நடவடிக்கையும் சந்தேகத்துக்கு இடமின்றி, ஒரு அரசியல் செய்தியைக் கொண்டுள்ளது. அந்த செய்தி, இந்தியாவை ஒருங்கிணைக்க இயலக்கூடிய கட்சி எங்கள் கட்சி என்பதுதான். இது பொதுமக்களால் ஈர்க்கப்படுகிறபோது, அது கட்சிக்கு மறுமலர்ச்சியைத் தொடங்கி வைக்கும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    ×