search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avani festival"

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி மூலவீதியில் வீதி உலா நடந்தது.
    • 8-ந்தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதில் சித்திரை திருவிழாவில்தான் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம்.

    அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் மதுரையை ஆட்சி செய்வதாக பக்தர்களின் நம்பிக்கை.

    சிவபெருமான், நடத்திய 64 திருவிளையாடல்களில், 12 திருவிளையாடல்களை விளக்கும் லீலை அலங்கார காட்சிகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி திருவிளையாடல் லீலை அலங்காரங்கள் நேற்று முதல் தொடங்கின. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளேயே நடந்தன. இந்த ஆண்டுதான் வழக்கம் போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    சிவபெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை அலங்காரத்தில் நேற்று சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். இந்த திருவிளையாடல் பற்றிய புராண வரலாறு வருமாறு்-

    முற்பிறவியில் பல புண்ணிய காரியங்களை ஒருவன் செய்திருந்தான். ஆனால், அவன் சிறிது பாவமும் செய்ததால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. காகங்களுக்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன் நிலையை எண்ணி வருந்தியது.

    அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர், மதுரையை பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று கூறினர். அதை கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரைக்குளத்திலே நீராடி இறைவனை வணங்கியது.

    இதை கண்ட இறைவன் குருவியின் பக்திக்கு இறங்கி மிருத்யுஞ்சிய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கினார் என்று ஐதீகமாக சொல்லப்படுகிறது.

    இதை விளக்கும் விழாவையொட்டி நேற்று காலை மற்றும் இரவில் ஆவணி மூல வீதியில் சுவாமி-அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி ஆவணி மூல வீதியில் வலம் வருவதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று (30-ந் தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், நாளை மாணிக்கம் விற்ற லீலை, 1-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 2-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 3-ந் தேதி அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகிறது.

    4-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளன.

    8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது. அன்று இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.. 9-ந்தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.

    11-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பச்சை பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்டசாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட பணிவிடைகளை குரு பால ஜனாதிபதி நிகழ்த்தினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் பள்ளி அலங்கார பணிவிடைகளை செய்திருந்தனர்.

    பள்ளியறை பணி விடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவை குந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவா அரகரா' என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தடையும். வடக்கு வாசலில் அய்யா வழி பக்தர்கள் பூ, பழம், பன்னீர், தேங்காய், போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வருகிறது.

    இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உட்பட பல மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜன், பால்மணி, ராஜலட்சுமி, சத்தியசேகர், ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா நிறைவு பெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவி லில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

    7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்திருப்பு, மாலையில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்திக்கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், மதியம் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்த ருளி வீதி உலாவும் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருவிழா தேரோட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    ஆவணி 12-ந் திருவிழாவான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலர் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய மலர் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விழா நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

    பக்தர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை சுமந்து சென்றும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலை வலம் வந்தும், கோவிலுக்கு முன்புறம் மற்றும் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று மூலஸ்தான அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    இந்நிலையில், நேற்று ஆவணி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவில் ஆஸ்தான மண்டபத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு வாரமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
    • கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது.

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர்.

    கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு ஆவணிமாதம் ஒவ்வொரு வாரமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். முதல் ஞாயிற்றுக்கிழமை மலர்அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.
    • பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இ்ந்த கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த 21-ந் தேதி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகைதந்தனர். 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இது கடந்த வாரத்தை விட அதிகம். கோவிலின் உள்புறத்தில் இருந்து பிரதான வாயிலுக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள்.

    கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாகவும், பலர் கைக்குழந்தைகளோடும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் நேற்று மதியம் நடை சாத்துவது தாமதம் ஆனது. சிறப்பு அர்ச்சனை டிக்கெட்டுகளும் கடந்த வாரத்தை விட நேற்று அதிக அளவில் விற்பனையானதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதே சமயத்தில் பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பால் பாக்கெட், மஞ்சள் பொடி, பூ, பழம், தேங்காய் தட்டு உள்ளிட்டவை கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது. பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நாகராஜா திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீசார் சீருடையிலும், மாற்று உடையிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் நேற்று நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேசும், தி.மு.க.வினரும் உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • வருகிற 31-ந் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருளல் வைபவம் நடைபெறாது.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், உள் திருவிழாவாக கோவிலில் உள்ளே மட்டும் நடைபெறும்.

    சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம், சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருளல் ஆகிய வைபவங்கள் நடைபெறாது.

    இந்த தகவலை. கோவில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

    • ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு.
    • ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது.

    ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன. மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு.

    அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.

    ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள்.

    அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.

    இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

    • 29-ந்தேதி சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.
    • வருகிற 5-ந்தேதி கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதாவது கீரனூரில் கருவூர் சித்தர் சிவாலயங்களுக்கு சென்று நல்வரங்களை கேட்டு பெற்றார். இவ்வாறு நெல்லைக்கு வந்து சேர்ந்த கருவூர் சித்தர், நெல்லையப்பரை தரிசிக்க வந்தபோது நெல்லையப்பரிடம் இருந்து மறுமொழி கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் சாபமிட்டு விட்டு மானூருக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நெல்லையப்பர் ஆவணி மூல நாளில் மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்தார்.

    இந்த வரலாற்றுக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 4-வது நாளான 29-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.

    3-ந்தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி இரவு 1 மணி அளவில் சந்திரசேகரர் சுவாமி, பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகத்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

    அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் 5-ந்தேதி காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
    • திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு கலிவேட்டைக்கு அய்யா புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரத வீதிகளையும் வாகனம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

    அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட்டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி,சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்களான செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடந்தது.

    நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு எட்டு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.

    5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா அன்று அதிகாலை உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8-ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தேரோட்டம் நடைபெற்றது.

    அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு), தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு எட்டு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அய்யா வைகுண்டசாமி குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 29-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு அய்யா வைகுண்டசாமி சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பதி மற்றும் நான்கு ரத வீதியிலும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    பக்தர்கள் பூ, பழம், பன்னீர், பால் போன்றவற்றை சுருளாக வைத்து வழிபட்டனர். 7-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் எழுந்தருளி வாகன பவனியும் நடைபெறுகிறது.

    8-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்து முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கலிவேட்டையாடும் பணிவிடையை குரு பாலஜனாதிபதி நிகழ்த்துகிறார். இந்தநிகழ்ச்சிக்கு குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் கிருஷ்ண நாமமணி, ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா வைகுண்டசாமி குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் விழாவில் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ம் திருவிழாவன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றுவருகிறது. மேலும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    ×