search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமிதோப்பு"

    • 74-வது திருஏடு வாசிப்பு விழா.
    • நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.

    18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.
    • உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    சென்னை:

    அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசாமி அருளிய 'சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் எழுதிய அந்த புத்தகத்தை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அவர் கூறுகையில்,

    அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போதிருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார்.

    சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. 1600-ம் ஆண்டுகளில் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அறிந்தனர். அதனால் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டனர் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து கவர்னர் பேசி உள்ளார்.

    * ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் கவர்னர் பேசி உள்ளது வருந்தத்தக்கது.

    * அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் புரிந்து பேச வேண்டும்.

    * உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

    * அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    * அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம்.

    * கவர்னர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார் என்று கூறி உள்ளார்.

    • ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும்.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    நிலைக்கண்ணாடி

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனை யையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    மறு அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார். இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர்.

    1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர். 3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

     முத்திரி கிணறு

    அய்யா வைகுண்டர் சாமி தோப்பின் வடக்கு வாசல் பக்கம் இருந்தபடியே நிறைய அற்புதங்களையும், சமூக மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலானார். தீண்டாமை சிக்கலில் தவித்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கிணறு ஒன்றை உருவாக்கி அதற்கு முத்திரி கிணறு என்று பெயரிட்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒரே கிணற்றில் நீர் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

    ஒரு வீட்டு கிணற்று தண்ணீரை மற்றொரு வீட்டுக்காரர் எடுத்து பழகினாலே தீட்டு என்று கருதிய மேற்குடியினர், பல சாதியினரும் ஒரே கிணற்று தண்ணீரை பருகியதை கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார்கள்.

    • வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இங்கு தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆவணி, தை திருவிழாக்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும், வைகாசி திருவிழா தமிழ் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையும் கொடி ஏறி 11 நாட்கள் நடைபெறும். இதில் 6-ம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்று மாலை சர்ப்ப வாகனம் எடுக்கப்படும். நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்க வந்து வழிபட்டு செல்வார்கள். அய்யாவிற்கு பால், சுருள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    இதேபோல் 8-ம் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி யளித்து வருகிறார். 11-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகளிலும் அய்யா வழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

    தேர்த் திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செல்வார்கள்.

    அய்யா வைகுண்டருக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பன்னீர், பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபடுவார்கள். உப்பும், மிளகும் வாங்கியும் காணிக்கையாக செலுத்துவார்கள்.

    கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறும். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அய்யா வைகுண்டசாமி பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தினமும் அதிகாலை 3 மணிக்கு முத்திரி கிணற்றில் குளித்த பின்பு பணிவிடை செய்து வருகிறார்கள். கருவறை திறக்கப்பட்டு வாகன பவனி நடைபெறும். காலை, மாலை இருவேளையும் நான்கு ரத வீதிகளிலும் வாகன பவனி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனப்பால் வழங்கப்படும். காலை 11 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், அதைத் தொடர்ந்து வாகன பவனியும் நடைபெறும்.

     தலைமை பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் முத்திரி கிணற்றில் பதமிட்டு அங்கிருந்து அய்யா வைகுண்ட சாமி பதிக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். அய்யாவை நினைத்து பக்தர்கள் பதமிட்டு வருகிறார்கள்.

    அன்பில் எல்லோரையும் அரவணைத்து ஆள வேண்டும் என்று அய்யா விரும்பினார். எவருக்கு எவரும் குறைந்தவர் இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்கு அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்துவர சொன்னார். எனவே தற்போதும் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் யாராக இருந்தாலும் தலையில் தலைப்பாகை அணிந்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வடக்கு வாசலில் பக்தர்களுக்கு நாமம் கொடுப்பதில்லை. மாறாக திருமண்எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித மண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடிபட்ட மண் தான். இந்த மண்ணுக்கு அரிய மருத்துவ குணங்கள் உண்டு.அந்த திருமண் வடக்கு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் திருநாமமாக பூசி வழிபட்டு வருகிறார்கள். மேலும் பதிக்குள் நுழைந்ததும் குருமார்கள் நெற்றியில் நாமம் விட்டு வருகிறார்கள்.

    முந்தைய காலத்தில் கீழ்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழைய தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்'என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்கள் தரப்படும் விபூதியை பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கி போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் வழக்கம் தொடங்கப்பட்டது.

    அங்கிருந்து குருமார்கள் 2 விரல்களை கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். பக்தர்கள் நாமமிட்ட பிறகு கருவறைக்குள் சென்று வழிபடுவார்கள்.

    அய்யாவை நினைத்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது கை கூடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இதனால்தான் அய்யா வைகுண்டசாமி பதிக்கு பக்தர்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    சாமிதோப்பு தலைமை பகுதியில் வைகுண்டருக்கு கை குத்தல் அரிசி மூலம் காய்கறிகளை சேர்த்து சமைக்கப்பட்ட உணவே பணிவிடை செய்யப்படுகிறது. அந்த உணவு மண்பானை கொண்டே சமைக்கப்படுகிறது. சமையலில் பூசணிக்காய், மிளகாய், கத்தரிக்காய், இளவக்காய், வாழைக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அய்யாவிற்கு பக்தர்கள் தென்னங்கன்று மற்றும் கோமாதாவை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். மேலும் நினைத்தது நடக்க வேண்டி பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்தும் வழிபடுகிறார்கள்.

     சந்தன குடம் எடுக்கும் பக்தர்கள் பதியை சுற்றியுள்ள 4 ரத வீதிகளை சுற்றி வருவார்கள். குழந்தை வரம் வேண்டியும் பலரும் அய்யாவை வழிபட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்த பிறகு அந்த குழந்தையோடு வந்து அய்யாவை வழிபட்டு செல்கின்றனர். அப்போது அந்த குழந்தைக்கு முடி இறக்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பெண் குழந்தையாக இருந்தால் காதுகுத்தியும் செல்கின்றனர்.அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தேங்காய் எண்ணையையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    மேலும் பதியில் தங்கி இருப்பவர்களுக்கு வஸ்திரங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அன்னதர்மம், கருப்புகட்டி தர்மம், பழ தர்மங்கள் மிகச்சிறந்ததாக விளங்கி வருகிறது. நினைத்தது நிறைவேறியதும் தர்மம் வழங்குவதே இங்கு பிரதான ஒன்றாக உள்ளது.

    நோய்கள் குணமாக சிலர் சாமித்தோப்பு பதிவில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் முத்திரி கிணற்றில் பதம் இட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நோய் குணமாகிய பிறகு இங்கிருந்து வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள். இதன்மூலம் அய்யாவை நம்பி வந்தவர்களை வாழவைக்கும் புண்ணிய பூமியாக சாமிதோப்பு விளங்கி வருகிறது.

    புண்ணிய பூமியாக விளங்கும் சாமிதோப்பு. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அய்யா வைகுண்டர்.

    • அய்யா வைகுண்டர் நடந்து சென்ற பாதையை நினைவு கூறும் வகையில் சாமிதோப்பு அன்பு வனத்திலிருந்து
    • ய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை 22-ந் தேதி திருவனந்தபுரம் சிங்கார தோப்பு பதியில் நிறைவடைகிறது.

    நாகர்கோவில் : அய்யா வைகுண்டர் நடந்து சென்ற பாதையை நினைவு கூறும் வகையில் சாமிதோப்பு அன்பு வனத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய அய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை 22-ந் தேதி திருவனந்தபுரம் சிங்கார தோப்பு பதியில் நிறைவடைகிறது.

    இந்த மகா பாதயாத்தி ரையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதயாத்திரை சாமிதோப்பு முத்திரி கிணற்றிலிருந்து தொடங்கி சுசீந்திரம் வழியாக சென்று இன்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்குகின்றனர். இங்கிருந்து பாதயாத்திரை நாளை (18-ந்தேதி) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வில்லுக்குறி, பத்மநாபபுரம், தக்கலை, அழகிய மண்டபம், பரைக்கோடு வந்தடைகிறது. பின்பு 19-ந்தேதி மார்த் தாண்டம், கொடுங்குளம் வரை சென்று இரவு அங்கு தங்குகின்றனர். பின்னர் 20-ந்தேதி யாத்திரை புறப்பட்டு அமரவிளை சென்றடைகிறது. 21-ந்தேதி காலை மங்கலத்து கோணம் யாத்திரை புறப்பட்டு 22-ந்தேதி திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதியை சென்றடைகிறது. அங்கு பணிவிடைகள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு தர்மங்களுடன் நிறைவு விழா நடைபெறுகிறது.

    • விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு. சாமி தலைமை தாங்கினார். பூஜிதகுரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

    திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. 

    • இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும்
    • 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் :  சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பூஜித குரு சுவாமி தலைமை தாங்கினார். திருக்கொடியை பூஜிதகுரு ராஜசேகரன் ஏற்றி வைத்தார். பூஜிதகுரு தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து, பள்ளியறை பணி விடைகளை செய்திருந்தனர்.

    பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகி றது. வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடை பெறுகிறது. 9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 28-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறு கிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது. திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.
    • பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யாவழி பக்தர்கள் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது.

    பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

    இரவு 7 மணிக்கு பிச்சிப்பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.

    • குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
    • அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவழி பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மம் போன்றவை நடந்தது. குரு பால ஜனாதிபதி பக்தர்கள் இடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இரவு 7 மணிக்கு பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது
    • இன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர்.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பும், சிறப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரி கினற்றங்கரையில் 5 முறை சுற்றியபடி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார்.

    நள்ளிரவு 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து 5-ந்தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு, மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடை களை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்தி ருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சி யும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாக னத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அற நெறி பரிபாலன அறக்கட்ட ளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ×