search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு எட்டு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
    • தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.

    5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா அன்று அதிகாலை உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8-ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தேரோட்டம் நடைபெற்றது.

    அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு), தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு எட்டு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×