search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ragging"

    • மாணவர்களை துணை விடுதி காப்பாளர் டாக்டர் கண்ணன் பாடு தட்டிக்கேட்டுள்ளார்.
    • மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

    ராகிங் தொடர்பாக சம்பந்தப்பட் மாணவர்களை துணை விடுதி காப்பாளர் டாக்டர் கண்ணன் பாடு தட்டிக்கேட்டுள்ளார்

    இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், டாக்டர் கண்ணன் பாபுவின் கார் மீது பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராகிங், தாக்குதல் தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது.
    • ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதன்படி ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும், ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.

    ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியை அமைத்து ராகிங் கொடுமையை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறை தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் கடந்த 2019-ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மகாராஷ்டிர அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறைசார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ராகிங் குழுக்கள் அமைக்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார்.
    • ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கோவை:

    கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி மாணவர் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர் 2-ம் ஆண்டு மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 7 மாணவர்களும் 2-ம் ஆண்டு மாணவரை யாரும் இல்லாத அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

    மேலும் மாணவரை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.

    இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார். மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணிதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் 7 மாணவர்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதான மாணவர்கள் 7 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இதுபோன்ற ராகிங் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. மேலும் சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது
    • ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டும் கல்லூரிகளில் ராக்கிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ராக்கிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்டு 12-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு வாரம் ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும், ராக்கிங் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை எழுதுதல், விளம்பர பலகை உருவாக்குதல், லோகோ (இலச்சினை) வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.

    போதிய வசதியிருப்பின் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தலாம். குறும்படம், ஆவணப்படங்களை திரையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை, பல்கலை கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

    • தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
    • 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புள்ளல்லூரை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் முகமது மிதுலாஜ். இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவர் முகமது மிதுலாஜ் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை, அதே கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். மாணவர் அணிந்திருந்த உடை மற்றும் சிகை அலங்காரத்தை குறிப்பிட்டு கேலி-கிண்டலும் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறியபடி செய்வதற்கு மாணவர் முகமது மிதுலாஜ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முகமது மிதுலாஜை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் முகமது மிதுலாஜ் ராகிங் செய்து கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து, குன்ன மங்கலம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார்.

    அனர் தனது புகாரில், தனது மகனை 20 மாண வர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்தது மட்டு மின்றி, கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் எனது மகனுக்கு கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மூக்கில் எலும்பு சேதமடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது மகனை ராகிங் செய்து தாக்கிய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஒருவரை, 20 மாணவர்கள் கும்பலாக சேர்ந்து ராகிங் செய்து தாக்கிய சம்பவம் கோழிக் கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங்கில் கைதான 3 மாணவர்களையும் கல்லூரியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாட பிரிவுகளில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு இளங்கலை விலங்கியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான அனிஷ் மைக்கேல், சுஜித் குமார், சிவகுமார் ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன் அதே துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் இயங்கும் ராக்கிங் தடுப்பு குழு விசாரணை நடத்தியது. இதில் மாணவர்கள் 3 பேரும் ராக்கிங் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. மேலும் ராக்கிங் குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் ராக்கிங் செய்த மாணவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறும் போது, கைதான 3 பேரையும் கல்லூரியில் இருந்து நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் மாணவர்களின் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #Ragging #Anbalagan
    சென்னை:

    சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்.

    ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிப்புக் குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். #Ragging #Anbalagan
    ×