search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty govt arts college"

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் 241 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது. புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு ஊட்டி அரசு கல்லூரியில் 3 பேர் வடமாநில பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் 2 பேர் சிக்கி உள்ளனர். #OotyGovtArtsCollege
    ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங்கில் கைதான 3 மாணவர்களையும் கல்லூரியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாட பிரிவுகளில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு இளங்கலை விலங்கியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான அனிஷ் மைக்கேல், சுஜித் குமார், சிவகுமார் ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன் அதே துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் இயங்கும் ராக்கிங் தடுப்பு குழு விசாரணை நடத்தியது. இதில் மாணவர்கள் 3 பேரும் ராக்கிங் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. மேலும் ராக்கிங் குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் ராக்கிங் செய்த மாணவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி கூறும் போது, கைதான 3 பேரையும் கல்லூரியில் இருந்து நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    ×