search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest department"

    • வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    • சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவிகள் ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் நேற்று பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

    இருப்பினும், வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வார இறுதி நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    கோவை:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி மலை அமைந்து உள்ளது.

    இங்குள்ள 7-வது மலையில் சுயம்புவடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பூலோகத்தின் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வேண்டுமெனில், சுமார் 5.5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மலைப்பாதை வழியாக சென்று வழியிலுள்ள வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சனை, கைதட்டி சனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற மலைகளை கடந்தால் 7-வது மலையில் வீற்றிருக்கும் சுயம்புலிங்க பெருமானை தரிசிக்க முடியும். மேலும் இந்த மலைப்பாதை பயணம் என்பது மிகவும் கரடு-முரடானது.

    வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம்வரை அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்து உள்ளது. இதனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    வெள்ளியங்கிரி மலையில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அங்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் சிதலமடைந்து உள்ளன. தொடர்ந்து வெள்ளியங்கிரி மலையில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் வனத்துறையால் அகற்றப்பட்டது.

    இதையடுத்து 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,

    மாவட்ட கலெக்டர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படியே பூர்வக்குடி மக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு அகற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    • யானைகளின் பெயரை கூறி எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது
    • யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்

    பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    "தமிழக வனத் துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

    அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத் துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. சமீப ஆண்டுகளாக யானைகள் ஊருக்குள் வருவது தொடர்பாக செய்திகள் வெளிவருவதற்கு காரணம், வனத்துறையின் நிர்வாக சீர்கேட்டால் தான்.

     யானைகளுக்கு தேவையான உணவுப் பயிர்களை வனப்பகுதிகளுக்குள் பயிர் செய்யாமல் தேக்கு, புளியமரம், ஈட்டி போன்ற மரங்கள் ஏக்கர் கணக்கில் வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் வன விலங்குகளுக்கு தேவையான அளவு தண்ணீர் வசதியையும் வனத்துறை உருவாக்கவில்லை. இதன் காரணமாக தான் யானைகள் வனப்பகுதியை விட்டு எங்களுடைய விவசாய நிலத்திற்கு வந்து எங்கள் பயிர்களை நாசம் செய்கிறது.

    எனவே இப்போது யானைகளின் பெயரை கூறி எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது.

    தொடர்ந்து காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

    எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள 'வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை' யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி, ஜவளகிரி போன்ற வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் தேன்கனிகோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்திற்கு அடுத்துள்ள ஏரி பகுதியில் நேற்று இரவு மக்னா யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியை விட்டு கிராமத்திற்கு நுழைந்துள்ளது.

    இதையடுத்து அங்குள்ள ஏரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.

    தொடர்ந்து இன்று காலை அந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனச்சரகர் விஜயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்ய உள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் யானைகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    • கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை காட்டுயானை நேற்று காலை தண்ணீர் தேடி வந்தது.

    அப்போது அந்த யானை ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்து றையினர் அறிவு றுத்தியுள்ளனர்.

    இருந்த போதிலும் நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை கிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைதொடர்ந்து காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்து றையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்ததால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் புகுந்து, ஏரியில் யானை முகாமிட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவ்வாறு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கர்னூர் பகுதியில் மீண்டும் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    • தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
    • மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 1 மாதம் முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 20 வான்கோழி, 5 காவல் நாய் வேட்டையாடி கொன்றது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கால்நடைகளையும் அந்த சிறுத்தை கொன்று வந்தது. அதேபோல் கடந்த 3 நாட்கள் முன்பு அதே பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாக்கியலட்சுமி தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.கூண்டின் ஒரு புறம் காவல் நாயை கட்டி வைத்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில் இருந்த நாயை வேட்டையாட கூண்டுக்குள் சென்ற போது கூண்டுக்குள் சிக்கியது.

    இந்த நிலையில் இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் சிறிது நேரத்தில் பாக்கியலட்சுமி தோட்டத்திற்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.

    பின்னர் இது குறித்து தாளவாடி வனத்துறை யினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது. வனத்துறையினர் வந்து பார்த்த போது கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கூண்டுடன் சிக்கிய ஆண் சிறுத்தையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    கிட்டத்தட்ட ஒரு மாதமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.

    செந்துறை:

    மயிலாடுதுறை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கடந்த 11-ந்தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி முந்திரி காடு, செந்துறை அரசு மருத்துவமனை, நின்னியூர் பகுதியில் உலவியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் தென்பட்ட சிறுத்தை இன்னமும் செந்துறை பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சிறுகளத்தூர் தனியார் முந்திரி காட்டில் சிறுத்தை நடமாற்றம் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அதேபோல் இரவு துளாரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் இருளாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அங்கு இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.


    இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது. இதனால் முந்திரி விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சிறுத்தையை பிடிக்க திரண்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த பகுதி மக்கள் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் உள்ளனர். இதனை போக்கு வதற்காக வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பின்னர் அந்த சிறுத்தை குற்றாலம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 89 சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. மேலும் மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.

    ஆனால் அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் எங்கும் தென்படவில்லை.

    இதுகுறித்து மூத்த வன அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை. இருப்பினும் மேற்கண்ட மாவட்டங்களில் வனத்துறையினர் தொடர்ந்து 2 பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள், உள்ளூர் மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.

    சந்தேகப்படும்படியாக மர்ம விலங்கு ஏதும் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம்.
    • கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமியன்றும், ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இவர்கள் மலையேறி சென்று சுயம்பு லிங்கத்தை தரிசக்க உள்ளனர்.

    கடந்த மாதங்களில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி பக்தர்கள் மலையேறுவற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.

    பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனத்திற்குள் போடக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது.

    எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. மேலும் வனப்பகுதிக்குள் எங்கும் தீ முட்டக்கூடாது.

    வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கும் கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன் கருதி மேற்கண்ட அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
    • ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

    இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனை மலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மோப்ப நாய்களும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டது.

    மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாள பாலத்தில் வனத்துறையினர் சிறுத்தையின் கழிவுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த சிறுத்தை மயிலாடுதுறை கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    பின்னர் குத்தாலம் காஞ்சி வாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எங்கும் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறையில் காணப்பட்டதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாம்மிட்டு சிறுத்தையை தேடி வந்தனர். தற்போது சிறுத்தை அரியலூர்-பெரம்பலூர் எல்லை பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் பகுதி உமையாள்புரம் ஊராட்சி, உடப்பாங்கரை கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் கடந்த 13-ந் தேதி மாலை 7 மணியளவில் தனது பருத்தி வயலில் தண்ணீர் பாய்ச்சும் போது சத்தம் கேட்டு பார்த்த போது சிறுத்தை சென்றதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரது வயலில் அண்டகுடி கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தை சென்றதாககால் தடம் எதுவும் இல்லை எனவும், புல்வெளிகள் மிகுந்த பகுதியாக இருப்பதாகவும், தெரிவித்தனர்.

    மேலும் இந்த இடங்களை பார்வையிட்ட வனத்துறையினர் உமையாள்புரம், உடப்பாங்கரை, திருமண்டங்குடி, கூனஞ்சேரி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சிறுத்தை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ×