என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • ஜெயலலிதா இருந்தவரை டிடிவி தினகரன் வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம்
    • இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம்

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

    ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

    இந்நிலையில் ஆர்.பி.உதயகுமார் பேசியதற்கு "நாய் என்றைக்கும் சிங்கமாகாது.. ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்" என்று டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், துரோகிகளின் கைகளில் தற்போது அதிமுக உள்ளது. அதை மீட்பதற்கு தான் நானும் ஓ.பன்னீர்செல்வமும் போராடி கொண்டிருக்கிறோம். வீட்டுக்காவலில் இருந்தவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களை போல துரோகம் செய்யமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். அவரை சிறையில் அடைக்க முடியாது என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய ஆறு உத்தரவாதங்களை அவர் வாசித்தார்.

    டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், "இந்திய மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். அவரை சிறையில் அடைக்க முடியாது என்று தெரிவித்தார்.

    அப்போது சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக எழுதிய கடிதத்தை அவர் வாசித்தார் . அதில், "நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. தேர்தலில் யாரையும் தோற்கடிக்க உதவுமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை. இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு உதவுமாறு 140 கோடி இந்தியர்களை மட்டுமே கேட்டுக்கொள்கிறேன்" என்று கெஜ்ரிவால் எழுதியுள்ளார்.

    மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் எழுதிய ஆறு உத்தரவாதங்களை அவர் வாசித்தார்.

    1.நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது.

    2. நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

    3. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல பள்ளி இருக்கும், அங்கு சமூகத்தின் அனைத்து தரப்பு குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவார்கள்.

    3. ஒவ்வொருவரும். கிராமத்தில் மொஹல்லா மருத்துவமனை இருக்கும்,

    4. ஒவ்வொரு ஜில்லாவிலும் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருக்கும்.

    5. சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயிகளுக்கு நல்ல குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்.

    6. டெல்லி மக்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்

    இந்த உத்தரவாதங்கள் அனைத்தையும் நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.

    மேலும் அக்கூட்டத்தில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "கெஜ்ரிவால் என்ன தவறு செய்தார்? அவர் டெல்லியின் கல்வியை மேம்படுத்தியுள்ளார், மக்களுக்கு உதவினார். மக்கள் அவர் ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லையென்றால் , அவர் டெல்லியை மீண்டும் ஆட்சி செய்திருக்க மாட்டார்.

    பாஜகவில் சேராத தலைவர்களை சிறையில் அடைக்கும் வேலையை மட்டுமே தற்போது பாஜக செய்து வருகிறது. பாஜகவின் 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது? வருமான வரித்துறை மூலம் பாஜக வசூல் நடத்தி வருகிறது என்று கூறினார்.

    • தமிழ்நாட்டில் மொத்தம் 7 தனித் தொகுதிகள் உள்ளன.
    • விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதில் வடசென்னையில் 35 பேர், மத்திய சென்னையில் 31 பேர், தென்சென்னையில் 41 பேர் போட்டியிடுகின்றனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பலமுனை போட்டி இருந்தது. அப்போது 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இப்போது 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 65-ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் மத்திய சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிட வில்லை.

    தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடும் 950 பேரில் 874 பேர் ஆண்கள். 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 7 தனித் தொகுதிகள் உள்ளன. அதில் விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் 10 பேர் போட்டியிடுகின்றனர். பாராளுமன்ற தேர்தலுடன் இங்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறவைடைகிறது.

    தேர்தலுக்கு பிறகு வாக்கு எந்திரங்களை போலீசார் பாதுகாப்பு பத்திரமாக வைத்திருந்து ஜூன் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.

    • பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.
    • கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் திருச்சி, மணமேட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதுகுறித்து பாரிவேந்தர் பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய மேலான வாக்குகளை தாமரை சின்னத்திற்கு போட்டு வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நான் உங்களுக்கு புதியவன் அல்ல. இதே பாராளுமன்ற தொகுதிக்கு மூன்றாவது முறையாக பார்க்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு, என்னை பற்றி மக்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. கருத்து இருக்கிறது. ஆகவே என்னை ஒதுக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில், உங்களை நம்பி இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    2019 தேர்தலில், 6 லட்சம் வாக்குகள் கொண்டு வெற்றிப்பெற செய்தீர்கள். 6 லட்சம் வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

    வெற்றி பெற்ற நான் டெல்லிக்கு சென்று உங்கள் தொகுதிக்காக என்ன செய்தேன் என்பதை புத்தகமாக போட்டுக் கொடுத்துள்ளேன்.

    இந்த புத்தகத்தில், பாராளுமன்றத்தில் நான் எத்தனை முறை பேசினேன். எதற்காகப் பேசினேன். எத்தனை முறை பாரத பிரதமர், ரெயில்வே அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தேன் என்பதை புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளேன்.

    இந்த மாதிரி யாராவது கடந்த காலங்களில் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவன் மதிப்பெண் அட்டையை காட்டுவது போல் கொடுத்துள்ளார்களா ? பார்த்திருக்க மாட்டீர்கள்.

    அப்படி நான் கொடுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம், உண்மையாக இருந்திருக்கிறேன். கேட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதேபோல், எந்தெந்த ஊர்களில் என்ணென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அதையெல்லாம் முழுமையாக தீர்த்து வைத்திருக்கிறேன்.

    குறிப்பாக, முசரியில் என்னுடைய நிதியில் இருந்து வகுப்பறைகள் கட்டப்பட்டது. பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.

    அதேபோல, எத்தனையோ சமூக கூடங்கள், ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகிய அத்தனையும் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    பள்ளிக்கூடத்தில் கட்டிக் கொடுத்தால் அதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். நான் அடிப்படையில் கல்வியாளர் என்று தெரிந்துதான் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.

    மனிதனுக்கு வாழ்வில் கல்வி என்பது அவசியம். முதலிடம். ஆகவே தான் என் பாராளுமன்ற தொகுதிக்கு 42 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன். 9 தரைப்பாலங்களை கட்டியிருக்கிறேன். எளிதாக யாராலும் இந்த திட்டங்களை எல்லாம் கொடுக்க முடியாது.

    திமுக திருவாளர்கள் எம்.பிக்கள் பாராளுன்றத்தை முடக்குவதற்கே முயற்சிக்கின்றனர். மோடியை குழப்புவதிலயே குறியாக இருக்கின்றனர். அந்த நிலையிலும் கூட, என்னால் இதையெல்லாம் செய்திருக்க முடிந்தது.

    அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கலில் ரெயில்வே பாலம் அமைக்கிற திட்டம், 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக, பிரதமர், ரெயில்வே அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

    முடியாது என்று கூறிய இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தட்டி எழுப்பி இன்று சர்வே நடந்திருக்கிறது.

    2024 நிதி ஆண்டில் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் யார் ஆட்சி அமைப்புது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். 10 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகளவில் ஓங்கியிருக்கிறார்.

    மோடி எப்போது எங்கள் நாட்டிற்கு வருவார் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் எங்கள் தலைவர் மோடி என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால்,, உலகத் தலைவர்கள் எல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு கொடுங்கள், அவரை எங்கள் நாட்டில் பிரதமராக்கி விடுகிறோம் என்கிறார்கள்.

    அப்படிப்பட்ட மகானை, திறமைசாலியை, நாட்டுப்பற்று கொண்டவரை, எப்படியாவது ஊனப்படுத்த வேண்டும். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நமக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு விவேக்கானந்தர் கிடைத்தார். அவர் நாட்டின் ஆன்மிகத்தை உலகளவிற்கு கொண்டு சென்றார். இன்று மோடி அவர்கள், நல்லாட்சியை அரசியலுக்கு உலகளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் போனாலும், போகாவிட்டாலும் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் என்பதில் சந்தேகமே கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே.
    • தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும்.

    ஊட்டி:

    மத்திய மந்திரி எல்.முருகன் ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை தி.மு.க அரசு வஞ்சித்து வருவதன் மூலம் தமிழக முதலமைச்சரின் போலி வேஷம் அம்பலத்துக்கு வந்து உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிபடிக்கும் விடுதிகளின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு நாடகம் போடும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை நேரடியாக சென்று பார்க்க நேரம் இல்லை.

    தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே. பா.ஜனதா ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல்கலாமை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினோம். அவரை 2-வது முறையாக தேர்வுசெய்தபோது குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்தையும், 3-வது முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக தேர்வு செய்து உள்ளோம்.

    மத்திய மந்திரிகள் பட்டியலில் 27 சதவீதம் பேர் மிகவும் பிற்பட்டோர் பட்டியலை சேர்ந்தவர்கள். மேலும் 11 பழங்குடியினத்தவரும், 12 தாழ்த்தப்பட்ட பிரிவினரும் மத்திய மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனர். மிகவும் பிற்பட்டோர் கமிஷனுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது பா.ஜனதா கட்சி.

    தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும். இதற்கு உதாரணமாக 2ஜி, காமன்வெல்த் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

    அவர்கள் தமிழை வைத்து அரசியல் லாபம் தேடிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டுமே. புதிய பாராளுமன்றம் கட்டியபோது சோழர்களின் ஆட்சி பரிபாலனத்தின் அடையாளமாக கருதப்படும் செங்கோலை தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் வேதமந்திரம் முழங்க நிலைநிறுத்தியவர் நரேந்திர மோடி.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதே செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் வாக்கிங் ஸ்டிக் என்ற பெயரில் வைக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதனை புறக்கணித்தது யார் என்பது உலகம் அறியும். சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது. காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தி கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. காசி தமிழ் சங்கமத்தை 2 தடவைகளும், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தையும் நடத்தி காட்டி உள்ளோம்.

    பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழர் பண்பாடு குறித்து பேசி வருகிறார். மேலும் ஐ.நா.சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியை பதிவு செய்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க.வினர் தோல்வியின் விளிம்பில், தோல்வி பயத்துடன் நின்றுகொண்டு உள்ளனர்.

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் செல்லும் வாகனங்களில் அதிகாரிகள் அரைகுறையாக சோதனை நடத்துகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் பல பெட்டிகள் இருந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான்.
    • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதியில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது பிரசார கூட்டம் போல தெரியவில்லை. இது நன்றி அறிவிப்பு விழா போலவும், வெற்றி விழா போலவும் தெரிகிறது. அந்த அளவுக்கு உங்களுடைய எழுச்சி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் உறுதியாகி விட்டது. ஒன்றிய பா.ஜனதா அரசு தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட சின்னத்தை உடனே கொடுத்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன சின்னம் கேட்டாலும் கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக வேறு சின்னம் தான் கொடுப்போம் என்று அலைக்கழித்தது. ஆனால் திருமாவளவன் மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி பானை சின்னத்தை வாங்கி விட்டார்.

    பானை சின்னத்தை வாங்கியதிலேயே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் நாம் பாதி வேலைதான் செய்யவேண்டும். அந்த வேலையை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

    கடந்த முறை நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டியடித்தது போல, இந்த முறை அதைவிட அதிகமாக ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த முறை திருமாவளவன் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏனென்றால் கடைசி நிமிடத்தில் தான் பானை சின்னத்தை ஒதுக்கினார்கள். இந்த முறை நாம் கேட்டவுடன் பானை சின்னம் ஒதுக்கியிருந்தால் ஒரே நாள் செய்தியில் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை சட்டப்போராட்டம் நடத்தியதால் இந்த பானை சின்னம் தேசிய அளவில் பிரபலமாகி விட்டது. எனவே இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு பிரசாரத்துக்கு வந்திருந்தேன். அப்போது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இனிமேல் அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

    டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் அங்கு சென்று விட்டார். அதை நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். எனவே அவரது தம்பியாக நான் இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இந்த முறை 2 தொகுதிகள் கொடுத்தால் திருமாவளவன் நமது கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விடுவார், பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் திருமாவளவன் மன உறுதியோடு இருந்து அ.தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி அது கொள்ளை கூட்டணி, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணி, தி.மு.க. கூட்டணிதான் கொள்கை கூட்டணி, சமூக நீதிக்காக போராடுகிற கூட்டணி என்று கூறி நமது கூட்டணியில் உள்ளார். தி.மு.க. 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க.வின் வெற்றியை விட நான் மிக மிக முக்கியமான வெற்றியாக கருதுவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியைத்தான்.

    இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ்தான். அதன் உரிமையாளர்கள் பெண்கள் தான். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த 3 வருடத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பயனாளியாவது இருப்பார்கள்.

    ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான். நமது கழகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 6-ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார். பின்னர் அவர் அடுத்த தொகுதிக்கு சென்று விடுவார்.



    எனவே நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு தேர்தல் வரை பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி 10 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஏதாவது செய்தாரா? 2016-ம் ஆண்டு திடீரென்று நடு ராத்திரியில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். ஏ.டி.எம்.மில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் நின்று இறந்து போனார்கள்.

    பிரதமருக்கு நாம் வைத்திருக்கக்கூடிய புது பெயர் 29 பைசா. இது செல்லாக்காசு தான். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடியும் செல்லாக்காசாகி விடுவார்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுப்போம். ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கு கொடுப்போம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காட்சியரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒலி ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
    • கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரத்தில் இருக்கிற ஒலி அமைப்பு தி.மு.க.வின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் பற்றி புகார் கொடுத்துள்ளார்.

    தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற விதமாக அங்கே உள்ள காட்சியரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒலி ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அந்த ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். அந்த காணொலி அரங்கத்தை மூடி முத்திரையிட வேண்டும். மேலும் கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரத்தில் இருக்கிற ஒலி அமைப்பு தி.மு.க.வின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது. அதை ஒளிராமல் நிறுத்த வேண்டும்.

    மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உள்ள அந்த ஒலி-ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6-ந்தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூரில் தேர்தல் பிரசாரம்.
    • 11-ந் தேதி-விருதுநகர், 12-ந் தேதி தூத்துக்குடி , 13-ந் தேதி-தென்காசி, 15-ந் தேதி ஈராடு, திருப்பூர், 16-ந் தேதி நீலகிரி, கோவை.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவரது சுற்றுப்பயணம் விவரத்தை ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    3-ந் தேதி-மாலை 5 மணி தென்சென்னை, இரவு 7 மணி ஸ்ரீபெரும்புதூர், 4-ந்தேதி-மாலை 4 மணி வடசென்னை, 6 மணி மத்தியசென்னை, 6-ந்தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூர், 6 மணி திருச்சி.

    7-ந்தேதி-மாலை 4 மணி சிதம்பரம், மாலை 6 மணி திருச்சி, 8-ந்தேதி-மாலை 5 மணி தஞ்சாவூர், மாலை 6.30 மணி திருச்சி, 9-ந் தேதி-திருச்சி, 10-ந் தேதி-மாலை 4 மணி ராமநாதபுரம், மாலை 6.30 மணி மதுரை.

    11-ந் தேதி-விருதுநகர், 12-ந் தேதி தூத்துக்குடி , 13-ந் தேதி-தென்காசி, 15-ந் தேதி ஈராடு, திருப்பூர், 16-ந் தேதி நீலகிரி, கோவை.

    • தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும்.
    • ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க.வுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்மை கொடுமைக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காவிரி மேலாண்மை கூட்டம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும். கூட்டணிக்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீருக்காக பெங்களூர் செல்லவில்லை. தேர்தல் முறையாக நடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முறையாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும் எதிர்க்கட்சிகள் விதிமீறலை தொடங்கிவிட்டன.

    ஆளுங்கட்சியின் நோக்கமே வாக்காளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள். மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது இந்தியை பற்றி பேசுகிறார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள். நிதி அமைச்சர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணம் எண்ணிடம் இல்லை என்று கூறியது அவரது நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை குறிக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும். கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. தற்போது முறையான நேரத்தில் சரியான பணியின் காரணமாக சைக்கிள் சின்னம் கிடைத்து இருக்கிறது.

    9 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது கிடைத்து உள்ளது. முறையாக பணிகள் செய்யாததன் காரணமாக சின்னம் கிடைக்கவில்லை என்பதால் அரசியல் காரணம் கூறுவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க.வுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. ஸ்ரீபெரும்புதூர் உட்பட தி.மு.க. பிரபலங்கள் இருக்கும் தொகுதியில் எல்லாம் எங்களது வெற்றி உறுதி

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
    • வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார்.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

    அவர் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலையில் வாக்கு கேட்டு வேனில் சென்று கொண்டிருந்தார்

    இன்று காலை முதலே புதுவையில் வெயில் சுட்டெரித்தது. காலை 11.10 மணி அளவில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீது சரிந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வேனை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர்.

    அருகாமையில் இருந்த டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வைத்திலிங்கத்தை பரிசோதித்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் பருகும்படி டாக்டர் அறிவுருத்தினார்.

    இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எலுமிச்சை ஜூஸ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பகல் 11.30 மணியளவில் மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
    • பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி சோதனை சாவடியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்து செல்லப்படும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் கட்டுகட்டாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இரவில் உரிய ஆவணங்களை இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
    • ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.

    கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர.

    ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது.


    இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

    1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார்.

    அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

    இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

    முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

    1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

    ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

    கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்... ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×