search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடி செல்லாக்காசாகி விடுவார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    X

    ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடி செல்லாக்காசாகி விடுவார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    • ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான்.
    • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதியில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது பிரசார கூட்டம் போல தெரியவில்லை. இது நன்றி அறிவிப்பு விழா போலவும், வெற்றி விழா போலவும் தெரிகிறது. அந்த அளவுக்கு உங்களுடைய எழுச்சி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் உறுதியாகி விட்டது. ஒன்றிய பா.ஜனதா அரசு தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட சின்னத்தை உடனே கொடுத்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன சின்னம் கேட்டாலும் கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக வேறு சின்னம் தான் கொடுப்போம் என்று அலைக்கழித்தது. ஆனால் திருமாவளவன் மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி பானை சின்னத்தை வாங்கி விட்டார்.

    பானை சின்னத்தை வாங்கியதிலேயே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் நாம் பாதி வேலைதான் செய்யவேண்டும். அந்த வேலையை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

    கடந்த முறை நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டியடித்தது போல, இந்த முறை அதைவிட அதிகமாக ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த முறை திருமாவளவன் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏனென்றால் கடைசி நிமிடத்தில் தான் பானை சின்னத்தை ஒதுக்கினார்கள். இந்த முறை நாம் கேட்டவுடன் பானை சின்னம் ஒதுக்கியிருந்தால் ஒரே நாள் செய்தியில் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை சட்டப்போராட்டம் நடத்தியதால் இந்த பானை சின்னம் தேசிய அளவில் பிரபலமாகி விட்டது. எனவே இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு பிரசாரத்துக்கு வந்திருந்தேன். அப்போது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இனிமேல் அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

    டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் அங்கு சென்று விட்டார். அதை நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். எனவே அவரது தம்பியாக நான் இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இந்த முறை 2 தொகுதிகள் கொடுத்தால் திருமாவளவன் நமது கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விடுவார், பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் திருமாவளவன் மன உறுதியோடு இருந்து அ.தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி அது கொள்ளை கூட்டணி, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணி, தி.மு.க. கூட்டணிதான் கொள்கை கூட்டணி, சமூக நீதிக்காக போராடுகிற கூட்டணி என்று கூறி நமது கூட்டணியில் உள்ளார். தி.மு.க. 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க.வின் வெற்றியை விட நான் மிக மிக முக்கியமான வெற்றியாக கருதுவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியைத்தான்.

    இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ்தான். அதன் உரிமையாளர்கள் பெண்கள் தான். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த 3 வருடத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பயனாளியாவது இருப்பார்கள்.

    ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான். நமது கழகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 6-ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார். பின்னர் அவர் அடுத்த தொகுதிக்கு சென்று விடுவார்.



    எனவே நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு தேர்தல் வரை பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி 10 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஏதாவது செய்தாரா? 2016-ம் ஆண்டு திடீரென்று நடு ராத்திரியில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். ஏ.டி.எம்.மில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் நின்று இறந்து போனார்கள்.

    பிரதமருக்கு நாம் வைத்திருக்கக்கூடிய புது பெயர் 29 பைசா. இது செல்லாக்காசு தான். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடியும் செல்லாக்காசாகி விடுவார்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுப்போம். ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கு கொடுப்போம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×