என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு கச்சத்தீவை மீட்பதற்கு எதுவும் செய்யவில்லை.
- நாடு முழுவதும் 150 இடங்களைதான் வெல்ல முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.
சென்னை:
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் (பாரதிய ஜனதா) என்ன செய்தீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு கச்சத்தீவை மீட்பதற்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. இப்போது ஏன் இப்படி செய்கிறது. நாடு முழுவதும் 150 இடங்களைதான் வெல்ல முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்பும் பிரச்சனைகளை அவர்கள் கையில் எடுக்க விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன்.
- புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை.
ராமேசுவரம்:
தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தனியாக தேர்தல் களம் காண்கிறார். கட்சி, சின்னம் முதல் கரை வேட்டி வரை அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் அவர் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க தானே களத்தில் இறங்குகிறேன் என்று கூறி ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டேன். அப்போது துணை முதலமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் அந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை. அந்த பதவியில் எந்த அதிகாரமும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை ஏற்று கொண்டேன்.
ஆனால் எனது அரசியல் வாழ்வை அழிக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து சதி செய்தனர். அ.தி.மு.க.வை மீட்க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன். புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமநாதபுரம் தொகுதியை பொறுத்த வரை இங்கு ஏற்கனவே பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். எனவே பிரதமர் மோடியே போட்டியிடுவதாக நினைத்து பாரதிய ஜனதா தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுகிறார்கள் ஆனால் உண்மையான ஹீரோ மோடி தான். அவரால் தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சாத்தியமாயிற்று.
இவ்வாறு அவர் பேசினார்.
- 6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.
சென்னை:
பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு வருகிற 4-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
4-ந்தேதி (வியாழக்கிழமை), 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வேலூரில் பிரசாரம் செய்கிறார்.
6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.
7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தமான் தீவில் பிரசாரம் செய்கிறார். 9-ந்தேதி மும்பையில் பிரசாரம் செய்கிறார்.
மீண்டும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் குஷ்பு 11-ந்தேதி கிருஷ்ணகிரியிலும், 12 மற்றும் 13-ந்தேதிகளில் நாமக்கல்லிலும் பிரசாரம் செய்கிறார். 14-ந்தேதி திருப்பூரில் பிரசாரம் செய்கிறார்.
அதன் பின்னர் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.
வருகிற 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார்.
- பா.ஜனதாவுக்கு எதிரான 18 கட்சிகள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஒன்றிணைந்தன.
- பேரணியில இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.- பினராயி விஜயன்
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இன்று வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவரது கைது கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப் பிரமாண்ட பேரணி கூட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோரின் மனைவிகளும் இந்த பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏராளமான மக்கள் இந்த பேரணிக்கு திரண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பேரணிக்கு திரண்ட கூட்டம், பா.ஜனதாவுக்கு கடுமையான எச்சரிக்கையை கொடுத்துள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், "பா.ஜனதாவுக்கு எதிரான 18 கட்சிகள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. இந்த பேரணியில இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி மாநில மதுபான கொள்கையில் காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைதான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணைக்கு வழிவகுத்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் புகார் அளித்தது. இருந்தபோதிலும் பேரணியில் கலந்த கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன்" என்றார்.
இந்த பேரணியின்போது எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பாற்ற பா.ஜனதாவை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசின் சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் சமநிலை பறிக்கப்படுகிறது என பா.ஜனதா மீது குற்றம் சாட்டினர்.
- மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
- மேட்டுப்பாளையம் நகராட்சி முழுவதுமே சுத்தம் இன்றி காணப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அந்த பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-
பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். வீட்டுக்கு வீடு கியாஸ் இணைப்பு திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். இது தி.மு.க.வின் சாபக்கேடு.
மேட்டுப்பாளையம் மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் பவானி ஆறு தற்போது வறண்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகளாகவே உள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய மந்திரி எல்.முருகன், அங்குள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய காட்சி.
சுகாதாரம் என்றால் என்ன விலை எனக் கேட்பார்கள் போல. மேட்டுப்பாளையம் நகராட்சி முழுவதுமே சுத்தம் இன்றி காணப்படுகிறது.
மேட்டுப்பாளையம் மக்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள். இது சாதாரண ஊர் இல்லை, தியாகபூமி, ரத்தம் சிந்திய பூமி. மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டுவர நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
மேட்டுப்பாளையம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சியில் பெண்களை மிகவும் தரக்குறைவாக தான் பேசுவார்கள். நடத்துவார்கள். மேட்டுப்பாளையத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
- எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.
- போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது.
- தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை.
பிரதமர் மோடி தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தல் பத்திரம் விவாகரம் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-
இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். இதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள்
இந்த புத்திசாலிகளிடம் கேட்கிறேன். 2014-க்கு முன் எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவு ஆகியிருக்கும். அந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?.
தற்போது மோடி வந்து தேர்தல் பத்திரத்தை உருவாக்கிவிட்டார். அதனால் உங்களால் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது. தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை. சில குறைகளை தீர்த்துவிட்டால், தேர்தல் பத்திரத்தில் நன்மைகள் கிடைக்கும்.
- பா.ஜ.க. கூட்டணி சார்பில் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிடுகிறார்.
- பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர்
தமிழகத்தின் கல்வி வள்ளலான டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், பெரம்பலூரில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் இரவு பகல் பாராமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் 1500 ஏழை குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தார், பாஜக தலைவர் அண்ணாமலையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர்.
பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, பெரம்பலூர் நான்கு ரோடு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூட்டணி கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஒருசேர பிரசார வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்தனர்.
பெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரெயில் திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
நேர்மையால், உண்மையால், மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது.
இம்முறை பாரிவேந்தர் வெற்றி பெற்றால் 1,500 ஏழை குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்துவந்தவர் பாரிவேந்தர். பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது.
தாமரைச் சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக ஒவ்வொரு பா.ஜ.க. நிர்வாகியும், தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக் கொடுத்து வேலை பார்க்க வேண்டும்.
பெண்களை அவமானப்படுத்தும் தி.மு.க.வின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம். உண்மையான மனிதர் டாக்டர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்வது நமது கடமை என பேசினார்.
- சின்னியம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு என தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. இது பரப்புரை கூட்டமா அல்லது மாநில மாநாடா என கேள்வி எழும் அளவுக்கு திரண்டு வந்திருக்கிறீர்கள்.
நாடு காக்கும் ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். இங்கு வரமுடியாவிட்டாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களில் இடம்பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி.
தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு திட்டத்தில் பயன் கிடைக்கும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்கள் பயன்பெறும் நல்லாட்சியை வழங்கிவருகிறோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மகளிருக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்கான அரசாக தி.மு.க. ஆட்சி நடந்துவருகிறது. குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, பெண்களுக்கு பணமும் கொடுக்கிறீர்கள் என தாய்மார்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அரசை குறைகூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, திட்டங்களால் பயன் பெறும் மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தாங்கள் நிறைவேற்றியதை கூறாமல், அவதூறு குதிரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. பயணம் செய்கின்றனர். நல்ல விமர்சனம் வைத்தால் மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்களை எதிர்க்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்யும் கட்சி தி.மு.க. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க. என குறிப்பிட்டார்.
- மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது.
- இதனால் அதற்கு விண்ணப்பிக்கவே வேண்டாம்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறி வரும் நிலையில், அவர்களால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படாது என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். மேலும், சி.ஏ.ஏ.-வுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொது மக்களை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, நீங்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவராகி விடுவீர்கள், இதனால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் "பா.ஜ.க.-வினர் 400-க்கும் அதிக இடங்களை பிடிப்போம் என கூறி வருகின்றனர், நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், அவர்கள் முதலில் 200 இடங்களில் வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம். 2021 தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் அவர்கள் 200-க்கும் அதிக இடங்களை குறி வைத்து, வெறும் 77 இடங்களில் தான் வெற்றி பெற்றனர்."
"சி.ஏ.ஏ. தொடர்பான மோடியின் உத்தரவாதம் பூஜ்ஜியத்திற்கு சமம். சி.ஏ.ஏ. சட்டம் குடியுரிமை கொண்டவர்களை வெளிநாட்டவராக மாற்றிவிடும். சி.ஏ.ஏ.-வை அனுமதித்தால் அடுத்து என்.ஆர்.சி. வந்துவிடும். நாங்கள் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்டவைகளை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.
- பெரம்பலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.
- பெரம்பலூர் 4 ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
2013-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் பாரிவேந்தர்.
தி.மு.க.வில் அப்பா நேரு மந்திரி! பிள்ளை அருணுக்கு பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு சீட்! ஒரு குடும்பத்திற்கு எத்தனை பதவி தான் கொடுப்பாங்க?
தி.மு.க. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இருபதைக் கூட நிறைவேற்றவில்லை இந்த இரண்டரை ஆண்டுகளில்.
பெண்களை அவமானப்படுத்தக்கூடிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனின் மகனான வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கூறுகிறார், தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மினுக் மினுக் என இருக்கிறார்களாம். தி.மு.க. மகளிர் உதவித்தொகையில் அழகு கிரீம் தடவிக் கொண்டிருக்கிறார்களாம். இப்படியா தாய்க்குலத்தை கேவலப்படுத்துவது?
பெண்களை மரியாதையாக, பாதுகாப்பாக நடத்தும் கட்சி பாரதிய ஜனதா.
அரியலூர், பெரம்பலூர், முசிறி, நாமக்கல், துறையூர் பகுதிக்கான ரெயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்.
அடித்தட்டு மக்களுக்காக உழைக்கக் கூடிய பாரிவேந்தர் வெற்றி பெற ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும், தலைவர்களும் உயிரைக் கொடுத்து பாடுபட வேண்டும்.
பிரதமர் மோடி பாரிவேந்தருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடியின் பேரன்பைப் பெற்றவராக பாரிவேந்தர் திகழ்கிறார் என தெரிவித்தார்.






