என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.
- உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்ட மோடி தமிழராகவே செயல்படுகிறார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படாததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான். மருத்துவமனை வருவதற்கு துணை நிற்காமல், வராமல் இருப்பதற்கு துணை நிற்கிறார்கள். ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும். அதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.
கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு தொடர்பாக எடுத்த முடிவுக்கு தி.மு.க. துணை போனது. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்த கூட்டணியாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உள்ளது.
இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். மீனவ மக்களின் வாக்கு அவர்களுக்கு கிடைக்காது. தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி உள்ளது. 10 வருட காலம் மோடி அரசின் சாதனை எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இந்த வெற்றியானது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.
இவர் அவர் பேசினார்.
- ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
- வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி 4 பிராந்தியங்களாக உள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளன. காரைக்கால் மாவட்டம் தலைநகரான புதுச்சேரியில் இருந்து 132 கி.மீ. தூரத்தில் தமிழகத்தின் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.
மாகி பிராந்தியம் 614 கி.மீ. தூரத்தில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே அரபிக்கடலோரம் உள்ளது. மற்றொரு பிராந்தியமான ஏனாம் 822 கி.மீ. தூரத்தில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாகி செல்ல 15 மணி நேரமும், ஏனாம் செல்ல 18 மணி நேரமும் சாலையில் பயணிக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இங்கு சென்று பிரசாரம் செய்ய பல்வேறு சிரமம் உள்ளது. கால விரயமும் ஏற்படும்.

தமிழகம், புதுச்சேரியில் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதனால் குறைந்த நாட்களே பிரசாரத்துக்கு அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.
இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு 3 மாநிலங்களில் பரவியுள்ள புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு கட்சி தலைமை உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ஏனாம், மாகி, காரைக்கால் பிராந்தியங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் விரைவாக சென்று பிரசாரம் செய்ய கட்சி தலைமை ஹெலிகாப்டர் வழங்கியுள்ளது. புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) தனியார் நிறுவன ஹெலிகாப்டர் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து தேவைப்படும் நேரத்தில் ஹெலிகாப்டரை நமச்சிவாயம் பயன்படுத்தி மற்ற பிராந்தியங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய கட்சித்தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் பா.ஜனதாவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- மைசூரு-குடகு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் யதுவீருக்கு பி படிவம் வழங்கினர்.
- மனைவி திரிஷிகா குமாரி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன.
மைசூரு:
மைசூரு-குடகு பாராளுமன்ற தொகுதியில் மைசூரு மன்னர் யதுவீர் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் மைசூரு அரண்மனைக்கு சென்றனர்.
அங்கு மைசூரு-குடகு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் யதுவீருக்கு பி படிவம் வழங்கினர். அந்த படிவத்தை மன்னர் யதுவீர், தனது தாயாரும், மகாராணியுமான பிரமோதா தேவி முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு மன்னர் யதுவீர் மைசூரு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டர் கே.வி.ராஜேந்திராவிடம், 'டம்மி' வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில், தனது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 303 என தெரிவித்துள்ளார். தன்னிடம் ரூ.1 லட்சம் கையிருப்பாக உள்ளது.
தனது பெயரில் உள்ள 2 வங்கி கணக்குகளில் ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் இருப்பு உள்ளது. மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான பங்குகள், நிறுவனங்களின் பத்திரங்கள் இருப்பதாக மன்னர் யதுவீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னிடம் 4 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் கூறியுள்ளார். ஆனால் மன்னராக இருந்தாலும் தனக்கு சொந்தமாக வீடு, விவசாய நிலம், கார், வணிக கட்டிடங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் கடன் பெறவில்லை என்றும், வருமானவரி பாக்கி இல்லை எனவும், தன் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் மன்னர் யதுவீர் தெரிவித்துள்ளார். அவரது மனைவி திரிஷிகா குமாரி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன.
நேற்றே மன்னர் யதுவீர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும், முறைப்படி நாளை (புதன்கிழமை) மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அரண்மனை ஜோதிடர் கூறியதால், மன்னர் யதுவீர் நேற்று டம்மி மனுவை தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
- அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே.
- இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
திண்டுக்கல்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.
சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 சீட் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது.
கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரஉள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.
தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறோம்.
பா.ஜ.க.வினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் டி.டி.வி.தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பா.ஜ.க.வுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். இரட்டை இலையை மீட்பதே லட்சியம் என்று கூறி வரும் தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் உள்ளார்.
அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலமாக மாறி விட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல், புகைப்படம் என்று காமெடி பிராப்பர்ட்டி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மாலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், கீரனூர் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துராஜ், புஷ்பா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவரை விசாரித்த போது, மன்னார்குடியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 40) என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக சோதனை சாவடியில் இருந்த போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.12.85 லட்சம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
- 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.
மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?
எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.
நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.
விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான் என பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருந்தார்
- அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது
அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று அவர் பேசியிருந்தார்.சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான்,
ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.
- தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மிகவும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசும் தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருவதாகவும், இதனால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. அதே நேரத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நெல்லை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
அதேநேரத்தில் வேட்பாளரான ராபர்ட் புரூஸ், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்காமல் இருந்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ராபர்ட் புரூஸ் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கூறியுள்ளார். உடனடியாக மேலிடத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நெல்லை தொகுதியின் நிலவரத்தை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோஷ்டி பூசல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார். மேலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருக்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லை பாராளுமன்ற தொகுதி கூடுதல் பொறுப்பாளராக அறிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு ராதாபுரம் தொகுதி கடற்கரை கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொடர்ந்து இன்று ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அம்பை சட்டமன்ற தொகுதிகளில் முகாமிட்டு தி.மு.க.வினரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட முடுக்கி விடும் பணியில் களம் இறங்கி உள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம், கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று மாலை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
- பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் இன்று காலை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மலையடி வாரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அண்ணாமலை வடவள்ளி பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
2024-ம் ஆண்டு நடக்கிற பாராளுமன்ற தேர்தலானது ஒரு வித்தியாசமான தேர்தல். மீண்டும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவார் என்று உறுதியாக தெரிந்து கொண்டு நடக்கிற தேர்தல் தான் இது.
கடந்த 10 வருடமாக தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி நிறைவேற்றிய திட்டங்களால் தற்போது மிகப்பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
2024-2029 காலகட்டம் என்பது தற்போதைக்கு முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக போகிறது. அதனால் இந்த தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தினரும் பா.ஜனதாவுக்கும், பிரதமருக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வருகிற காலத்தில் பொருளாதாரத்தில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறும். வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த பல கோடி மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் முன்னேறி உள்ளனர்.
பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை. அதனால் வருகிற தேர்தலில் 400 எம்.பிக்கள் தேவை. அதனை கொடுக்க மக்களும் தயாராகி விட்டனர். கோவை தொகுதியில் போட்டியிடும் என்னையும் வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இந்தியாவில் 70 வருடமாக எடுக்கப்படாத முக்கிய முடிவுகள் இனிமேல் எடுக்கப்பட உள்ளது. இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
எதிர்கட்சிகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியவில்லை. இன்னும் அவர்களில் யார் மாப்பிள்ளை என்பதே தெரியவில்லை.
தி.மு.க.வினர் பற்றி இனி பேச வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 33 மாதங்களாக தி.மு.கவினர் குறித்து நாம் கடும் விமர்சனங்கள் வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் அதற்கு பிறகும் திருந்தவில்லை. அப்படி இருக்கையில் இந்த 16 நாள் பிரசாரத்தில் பேசுவதால் மட்டும் அவர்கள் என்ன திருந்தி விடவா போகிறார்கள்? இல்லவே இல்லை.
தற்போதைய காலகட்டத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த பலரும் மீண்டும் களத்தில் இறங்கி உள்ளனர்.
கோவை தொகுதி எம்.பியாக இருந்தவர் கோவைக்கு தேவையான எந்த திட்டத்தையும் பிரதமரிடம் கேட்டு பெற்று நிறைவேற்ற தவறிவிட்டார். கோவையில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு ஒதுக்கிய நிதியும் முறையாக எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை.
நான் வெற்றி பெற்றதும் கோவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வன். தற்போது ஐ.ஓ.பி காலனியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சென்னை 45-வது இடத்தில் இருந்தது. தற்போது சென்னை அந்த திட்டத்தில் 199-வது இடத்திற்கு சென்று விட்டது. நகரங்கள் அனைத்தும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நான் வெற்றி பெற்றதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நகரங்கள் அனைத்தும் சுத்தமானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
- போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.
இந்த பாராளுமன்ற தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை என்று கூறுகிறார்.
தமிழகத்தில் ஒன்று கள்ள கூட்டணி. மற்றொன்று நள்ளிரவு கூட்டணி உள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை பொருள் இறக்குமதி செய்யும் தாயிடம் குஜராத் தான்.
மோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410. ஆனால் இப்போது ரூ.1200 ஆக சிலிண்டர் விலை உள்ளது. அண்மையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது.
கச்சத்தீவை இந்திரா காந்தி தான் இலங்கைக்கு கொடுத்தார். அப்போதைய முதல்வரைகூட கேட்கவில்லை.
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் மோடி 10 ஆண்டுகளில் அவர் விரும்பி இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் மீனவர்களையும் படகுகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை.
சுங்கசாவடி கட்டனங்களும் உயர்த்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடி கட்டுபாட்டில் உள்ளது.மோடி நிர்ணயித்த தேதியில் தேர்தல் நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதற்கும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 பேர் போட்டியிடுகிறார்கள்.
- தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலான துணை ராணுவ படையினரும் இன்று சென்னைக்கு வந்து உள்ளனர்.
சென்னை:
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு செய்து வருகிறது.
இந்த தேர்தலில் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையங்கள் எங்கெங்கு அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டறிந்து வைத்துள்ளது.
கடந்த தேர்தலின்போது எந்தெந்த மையங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்ததோ அதே பகுதிகளில் இந்த தேர்தலுக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 68,144 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேலும் 177 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன.
வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக எவ்வளவு பேர் தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவிக்கின்றனர் என்பதை அறிய அவர்களுக்கு விருப்ப படிவங்களையும் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இதற்கான 12டி படிவத்தை 77,445 பேர் சமர்ப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 50,676 பேர் வழங்கி உள்ளனர். இதில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அடுத்த வாரம் தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யார்-யாருக்கு என்னென்ன சின்னங்கள் என்று ஒதுக்கப்பட்டு விட்டதால் மின்னணு வாக்கு எந்திரத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் ஒட்டுவதற்கான வேட்பாளரின் பெயர் சின்னங்கள் அச்சிடும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே வாக்காளர்கள் அனைவருக்கும் 'பூத் சிலிப்' வழங்கும் பணியும் இன்று தொடங்கி உள்ளது. தேர்தல் ஆணையம் உத்தரவு வட்டார அளவிலான அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று 'பூத் சிலிப்' வழங்கி வருகின்றனர்.
சென்னையில் வீடு வீடாக 'பூத் சிலிப்' வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். 'பூத் சிலிப்' வழங்கும் பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலான துணை ராணுவ படையினரும் இன்று சென்னைக்கு வந்து உள்ளனர். அவர்கள் எங்கெங்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்படி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
- ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
- நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
அருவங்காடு:
இந்து மதம் பற்றி எதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.. சமீபத்தில் கூட இந்து கடவுளான ராமர் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். நாங்கள் ஒருபோதும் ரா மரை ஏற்க மாட்டோம், ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என பேசி இருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதுதொடர்பாக காங்கிரசாரே ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆ.ராசா எம்.பி. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார். அப்போது ஆன்மீகம் பற்றிய பேசிய அவரது பேச்சுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:-
என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதம் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது.
நான் ஒருநாளும் உள்ளே சென்றது இல்லை. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
பக்தி என்பது தனிமனித தேவைக்காக தான். என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது கோபம் இல்லை. கும்பிட்டு விட்டுபோ.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆ.ராசாவின் பேச்சு குறித்து எதிர்க்கட்சியினர் கூறுகையில் இதுவரை இந்து கடவுள்களுக்கு எதிராக ராசா பேசி வந்தார். தற்போது ஓட்டுக்காக அவர் பல்டி அடித்துள்ளார். கோத்தகிரியில் உள்ள கோவிலுக்கு கூட சென்று வந்துள்ளார். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றனர்.






