என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
- தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி மதுரையில் பல்வேறு பகுதிகளில் வாகன பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் குரல் உண்மையாகவே பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டுமானால் நமது வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். மக்களின் குரலை எதிரொலிக்க பாராளுமன்றத்தில் அக்கட்சியின் பலம் அதிகரிக்க வேண்டும். பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
ஜனநாயகத்தையும் மதச் சார்பின்மையையும் காக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளித்தபோது மத்திய அரசு நிவாரணமாக ஒரு பைசா கூட தரவில்லை. அப்போது வந்து மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தேர்தல் நேரம் என்பதால் ஓட்டு கேட்க மட்டும் தமிழகத்துக்கு அடுத்தடுத்து ஓடோடி வருகிறார்.
தமிழக மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவர். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார். தமிழகத்துக்கு எந்தவொரு நன்மையையும் செய்துவிடக் கூடாது என்ற திடமான முடிவோடு இருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை திரட்டி ஊழல் செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா அனைத்திலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி.
- கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியல் அ.தி.மு.க. சார்பில் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி. எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்கள். கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார். அவர் டுவிட்டர் அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். மதுரை மக்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
கடந்த 4 வருடங்களாக மக்களை சந்திக்காத அவர் தற்போது தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கிறார். அவரது சொத்து 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலின்போது சு.வெங்கடேசன் உள்ளிட்ட எண்ணற்ற 44 வாக்குறுதிகளை மதுரை மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் அதை எதையும் நிறைவேற்றவில்லை. மோடி, மு.க.ஸ்டாலின் வாயால் வடை சுடுவது போல சு வெங்கடேசனும் 44 ஊசி போன வடைகளை சுட்டுள்ளார்.

இது மதுரை மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல. கீழடிக்கு அவர் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். கீழடி தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஆனால் வெங்கடேசன் உரிமை கொண்டாடி வருகிறார். இதன் மூலம் அவர் போலி விளம்பர அரசியல் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு 26 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது மதுரையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. தான். குறிப்பாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு உள் இடஒதுக்கீடு. குடிமராமத்து பணி, அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம், மடிக்கணினி, பெண்களுக்கு இலவச கால்நடை திட்டம்
திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. அரசு கடந்த முறை தேர்தல் அறிக்கையின்போது கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறையும் என தெரிவித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்தார்கள். தற்போது 75 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் விலை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள். தி.மு.க. அரசு இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசையை தூண்டுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
- இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.
ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.
நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Madurai: Tamil Nadu Minister Dr Palanivel Thiaga Rajan says, "A minister from Tamil Nadu has been in jail for a year without bail. Similarly, the Chief Minister and ministers of the Delhi government are in jail. If this government continues, democracy will be completely… https://t.co/Ud3IbP3Vkh pic.twitter.com/pysVg0q1sS
— ANI (@ANI) April 2, 2024
- அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
- மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியின் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் மங்கலம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
திருக்காஞ்சி அகரம் கிராமத்தில் வேனில் இருந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கீழே நின்றிருந்த மூதாட்டி ஒருவர் தான் மேலே வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனடியாக அந்த மூதாட்டியை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிரசார வாகனத்திற்கு வர செய்து மைக்கை கொடுத்தார். மைக்கில் மூதாட்டி எம்.ஜி.ஆரின் பாடலை பாடினார். "நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க" என்ற பாடலை அவர் பாட கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.
மூதாட்டியை பாராட்டி அ.தி.மு.க. சார்பில் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
- சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது.
- காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் கடியம் ஸ்ரீ ஹரி.
இவரது மகள் கடியம் காவ்யா. சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதனால் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
கடியம் ஸ்ரீ ஹரியன் மகள் காவ்யா வாரங்கல் தொகுதியில் போட்டியிட பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
அவர் திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
- 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகத்தை இன்று மத்திய மந்திரி எல்.முருகன் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சத்தீவு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. அது குறித்து தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு முழு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தான். இதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு தான். இதனால் இன்று வரை தமிழக மீனவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது.
- பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு என்று ஏகலைவா என்ற ஒரு பள்ளி இருப்பதே அவர்களுக்கு தெரியாது.
கவுண்டம்பாளையம்:
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை ஆனைகட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்தியாவின் முதல் குடி பழங்குடியின இனம் தான். பழங்குடியின மக்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசின் நிதி மட்டுமே மலைப்பகுதிகளுக்கு வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் மலைவாழ் மக்களுக்கு அனைத்து வசதிகளுமே கிடைத்தன.
பழங்குடியின இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை இந்தியாவின் முதல் குடிமகளாக, குடியரசு தலைவராக அமர்த்தி கவுரப்படுத்தியது பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு தான். மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் பாதுகாவலராக இருந்து வருகிறார்.
பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏகலைவா பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியிலும் அந்த பள்ளி வர வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆனைகட்டி பகுதிக்கு மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தேர்தல் கவுன்சிலர் யார்? பஞ்சாயத்து தலைவர் யார்? முதலமைச்சர் யார்? என்பதற்கான தேர்தல் அல்ல. இது பிரதமருக்கான தேர்தல். டெல்லியில் யார் ஆட்சி அமைந்தால் நல்லது நடக்கும் என்பதற்கான தேர்தல். எனவே மக்கள் யோசித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 400 இடங்களை தாண்டி வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர வேண்டும். 100 சதவீதம் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் இங்கு கிடைக்க வேண்டும். மோடி பிரதமராக வந்தால் தான் நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்.
இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி மலைப்பகுதி தான். நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஆக்சிஜன் கொடுப்பவர்கள் நீங்கள் தான். இங்குள்ள ஒவ்வொரு மரமும் வைரத்திற்கு சமம். அனைவரும் இந்த பகுதியை தேடி தான் வருவார்கள்.
செங்கல் சூளை பிரச்சனையில் தி.மு.க. குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது. இதுதான் எப்போதும் அவர்களுக்கு வேலையாக உள்ளது. இது அவர்களுக்கு கைவந்த கலை. இந்த விவகாரத்தில் சுற்றுச்சுழல் அமைச்சரிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்ற 2 வண்டிகளும் போகாது. அந்த வண்டிகள் லோக்கல் வண்டிகள். இங்கேயே தான் சுற்றி கொண்டிருக்கும்.
அவர்களுக்கு பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு என்று ஏகலைவா என்ற ஒரு பள்ளி இருப்பதே தெரியாது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த ஒரு டாஸ்மாக்கை மட்டும் அகற்றுவது நமது நோக்கம் அல்ல. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றி விட்டு, அதற்கு பதிலாக கள்ளுக்கடை திறக்கப்படும்.
தி.மு.க. 5 வருடம் மக்களை மறந்து விடுவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு மக்கள் ஞாபகம் வரும். தேர்தல் நேரத்தில் வந்து பணம் கொடுத்து கொடுத்து வெற்றி பெறுகின்றனர். மீண்டும் 5 வருடம் மக்களை மறந்து விடுகிறார்கள். எப்படியாவது வாக்கை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அதனை மக்களாகிய நீங்கள் உடைத்தெறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூயம் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரசார பொதுகூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
- முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார்.
தருமபுரி:
தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அ.தி.மு.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் வள்ளலார் திடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த பிரசார பொதுகூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்கிறார்.
முன்னதாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி. அன்பழகன் இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.
- வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
- வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முழுவதும் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 6 மணி அளவில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
இந்த கூட்டத்துக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வரவேற்று பேசுகிறார். இதில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முடிவில் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்துள்ளனர். இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வருகையையொட்டி வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் குழுவைச் சேர்ந்த 13 படையினர் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தை சுற்றி மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை செய்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முழுவதும் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
- பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
- மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில், கடந்த 21-ந் தேதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம் தலைமையிலான குழுவினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது பறையப்பட்டி புதூரைச் சேர்ந்த மோகன் வந்த காரில், 96, 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பின், மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.
இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள் தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகனிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.96,500-யை திரும்ப ஒப்படைத்தனர்.
- த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை கடந்த 27-ந்தேதி தொடங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
- 7-ந்தேதி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை கடந்த 27-ந்தேதி தொடங்கி வாக்கு சேகரித்து வரும் நிலையில், தற்போது 2-வது கட்டமாக தென்மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பிரசார தொகுதிகள் அதன் விவரம் வருமாறு:-
இன்று (செவ்வாய்க்கிழமை) தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை தொகுதிகளிலும், நாளை (3-ந்தேதி) தூத்துக்குடி தொகுதியிலும், 4-ந்தேதி விருதுநகர், தேனி தொகுதிகளிலும், 5-ந்தேதி சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை தொகுதிகளிலும், 6-ந்தேதி ஈரோடு, கரூர் தொகுதிகளிலும், 7-ந்தேதி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளிலும்,
8-ந்தேதி ஈரோடு, திருப்பூர் தொகுதிகளிலும், 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் தூத்துக்குடி தொகுதியிலும், 11-ந்தேதி நாமக்கல், சேலம், தர்மபுரி, வேலூர் தொகுதிகளிலும், 12-ந்தேதி ஈரோடு தொகுதியிலும், 13-ந்தேதி திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 15-ந்தேதி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளிலும், 16-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.






