என் மலர்
நீங்கள் தேடியது "பழனிவேல் தியாகராஜன்"
- ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும்.
- உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "2025–26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம், கிளவுட் உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஸ்டார்ட்அப்களை விரைவாக அளவிடவும் எளிதாக புதுமைகளை உருவாக்கவும் உதவும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
* ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் என 3 ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும்.
* அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாப்ட் அஸூர் போன்ற உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து (AWS, Google Cloud, Microsoft Azure, Oracle, RailTel, Sify, முதலியன) கிளவுட் சேவை செலவுகளில் 5% முதல் 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்
மொத்த செலவு: ரூ.10 கோடி.
தகுதி:
StartUpTN, iTNT Hub மற்றும் ELCOT–STPI FinBlue ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் தொடக்க நிறுவனங்கள்.
இந்தத் திட்டம் இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது.
- செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.
- செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற தகவலும் பரவுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு செந்தில் பாலாஜி மோசடி செய்ததற்காக ஆதாரங்கள் இருப்பதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் பதவியுடன் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகே அவருக்கு ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருப்பதால் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
வழக்கு மீதான விசாரணையின்போது அமைச்சர் பதவியா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது.

இதைத்தொடர்ந்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனைக்கு பின் செந்தில் பாலாஜி பதவி விலகுவதே நல்லது என முடிவெடுத்துள்ளாராம். ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசியப்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்த பிறகு, மின்சாரத்துறை யார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற தகவலும் பரவுகிறது.
இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏற்கனவே கூடுதல் இலாக்க உள்ள நிலையில், மின்சாரத்துறையும் கூடுதல் முக்கியப் பொறுப்பாக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 21ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கூடலூர் தொகுதியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்தக் கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை." என்றார்.
தன்னுடைய அமைச்சரவைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து, சட்டமன்றத்துக்குள்ளேயே விமர்சனத்துடன் பி.டி.ஆர் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது.

இதைதொடர்ந்து, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்," நம்முடைய பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். நான் அவருக்குக் கூற விரும்புவது இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும். " என்று பேசி மேடையிலேயே சமாதானம் செய்து வைத்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் இலாகாவான மின்சாரத்துறையுடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் பி.டி.ஆர் வசமே ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், பி.டி.ஆர்-க்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதோடு, அவரது புத்திசாலித்தனத்தை இந்த இரண்டு சர்ச்சை நிறைந்த இலாக்ககளை கையாள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வி.பி. சிங்கை சமூக நீதி காவலர் என்று அழைக்கின்றனர்.
- நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்கலாம்.
தமிழ்வேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது "வி.பி. சிங்கை சமூக நீதி காவலர் என்று அழைப்பதை போல, நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்கலாம்.
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராடி பல வெற்றிகளை குவித்து, நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்" என்றார்.
- கூடலூர் தொகுதியில் சிறிய ஐடி பார்க் அமைத்து தருமாறு அதிமுக MLA ஜெயசீலன் கோரிக்கை
- இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பேசுங்கள் என சபாநாயகர் அப்பாவு அறிவுரை
சட்டப்பேரவையில் இன்று கேள்வி, பதில் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயசீலன், "எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கான நிறுவனங்கள் கிடையாது. ஆகவே எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தருமாறு அரசு முன்வர வேண்டும்
எனது துறையில் உள்ள சிக்கல்களை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காவும் எனது துறையில் செயல்படுவதில்லை. அதில் சிறிய பங்கு தான் எனது துறையின் கீழ் வருகிறது. மற்றவை தொழில்துறையின் கீழ் தான் வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறோ அவரிடம் கேட்டால் அவர் செய்து தருவார் என்று கருதுகிறேன். என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, "இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பதில் கூறினால் நன்றாக இருக்கும்" என்று அறிவுரை கூறினார்.
- தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது.
- டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுமா" என்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் எல்கோசெஸ் பூங்கா மட்டுமே தகவல் தொழில்துறையிடம் உள்ளது. டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையிடம் தான் உள்ளது.
எனவே சரியான இடத்தில் கையில் நிறைய வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த துறையில் கேட்டால் கிடைக்கும். என்னுடைய துறையில் அந்த உரிமைகள் இல்லை" என்று பதில் அளித்தார்.
- 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
- இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது.
மதுரை:
மத்திய அரசி்ன் மும்மொழி கொள்கையை கண்டித்து மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் உங்களுக்கு நிதியை கொடுப்போம் என மத்திய அரசு கூறுகிறது. உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மாணவர்கள் இந்தியில்கூட தேர்வை எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு மொழிக்கொள்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. கொரோனா காலத்துக்கு பின்பு, இல்லம் தேடிக்கல்வி முயற்சியை வேறு எந்த மாநிலம் எடுக்காத நிலையில் நம் மாணவர்களுக்கு, குழந்தைகளின் முன்னேற்றத்தை கருதி முயற்சி எடுத்தோம்.
இருக்குற 2 மொழிக்கொள்கையை சிறப்பிக்க முயற்சிகள் எடுக்கும்போது, அதை விட்டுட்டு மூன்றுக்கு செல்வது சரியா?
தமிழ்நாட்டில் பல பத்தாயிரம் பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள். கல்வி பெற்று வருகிறார்கள். இதில் கூடுதல் மொழியை கட்டாயப்படுத்தி திணித்தால், எத்தனை ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நமக்கு தேவை. எத்தனை பத்தாயிரம் மணி நேரங்கள் இல்லை; லட்சம் மணி நேரங்கள் அவங்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டியதுவரும். இதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எத்தனை கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள். தேவைப்படும். இதற்கெல்லாம் யார் செலவு செய்வார்கள்?
கொள்கை என்று நீங்கள் எழுதி கொடுக்கிறீர்கள். செயல்படுத்த வேண்டியது நாங்கள். இன்றைக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
இதில் அமைச்சர் பசங்க எங்க படிக்கிறாங்க... அமைச்சர் பேரங்க எங்க படிக்கிறாங்க.... என்கிறார்கள். அமைச்சர்கள் 34 பேரோட பசங்க எங்க படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. 8 கோடி மக்களுக்கு என்ன கல்வித்திட்டம் என்பதுதான் முக்கியம். எந்த வாதத்தையும் தனிநபருக்காக திசை திருப்ப முயற்சிப்பது சரியல்ல. அவ்வாறு செய்தால் வாதத்தை திசை திருப்புகிறார்கள் என்று நாம் எண்ண வேண்டும். ஆனாலும் நான் ஒரு உண்மையை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர் (அண்ணாமலை), எதோ ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பசங்க எத்தனை மொழி படித்தார்கள்? என சொல்லட்டும் எனக்கேட்டுள்ளார்.
நான் தெளிவாக விளக்கம் சொல்கிறேன். எனக்கு 2 புதல்வர்கள். என் அப்பா பெயரை 2 பேருக்கும் பிரித்து வைத்துள்ளேன். ஒருவர் பழனி, இன்னொருவர் வேல்.
எல்.கே.ஜி. முதல் பள்ளிப்படிப்பை முடிக்கிற வரை இருமொழி கொள்கை படிதான் இருவரும் படித்தார்கள். யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக்கொள்ளட்டும்.
இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது. அதற்கு மேல் திருச்சியில் ஒரு அலுவலகத்தை வைத்து எங்கெங்கெல்லாம் எப்ப எல்லாம் முடியுமோ மத்திய அரசாங்க நிதியை வைத்து இந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் தடை செய்யவில்லை. தமிழகத்துக்கு இருமொழி கொள்கைதான் சரி.
இவ்வாறு அவர் பேசினார்.
- இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
- பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.
தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,
முதல் மொழி: ஆங்கிலம்
இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்
இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?
வெளங்கிடும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
பி.டி.ஆரின் இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார்.
- வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.
* மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
* பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.
* 1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது.
* 1968-ல் இருந்து மும்மொழி கொள்கை பேசப்பட்டு வந்தாலும் இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.
* கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?
* வெற்றிகரமான ஒரு கல்வி முறையை நீக்கிவிட்டு தோல்வி அடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா?
* தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம்.
* கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது.
* வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது.
* வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.
* இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 200 நாட்களாக விலை குறைக்கப்படாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது
- சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.
சென்னை:
இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை.
கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்தாலும் கூட, பெரிய அளவில் விலை குறைக்கப்படவில்லை. அந்த வகையில் 200 நாட்களாக விலையை குறைக்காமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 200 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் உள்ளது.
இதனை தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது. இந்தியாவில் சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதுபோல உள்ளது, என்று அவர் கூறி உள்ளார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும், ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
- பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.
சென்னை:
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பான நிதித்துறையை யாருக்கு வழங்குவது என விவாதம் எழுந்தபோது அதற்கு தகுந்த நபராக பழனிவேல் தியாகராஜன் திகழ்ந்தார்.
பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆனபிறகு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். நிதிச்சுமையை எவ்வாறு குறைப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
காகிதம் இல்லாத பட்ஜெட்டை உருவாக்கியும், பல்வேறு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்தார்.
இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தி.மு.க.வின் தொழில்நுட்ப மாநில செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே ரேஷன் கடை விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பேட்டியின் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் மதுரை அரசியல் தொடர்பாக அங்கு உள்ள அமைச்சருக்கும், இவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கியது.
இதற்கிடையே அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும், கடக்க போகும் பாதை குறித்தும் புத்தகம் எழுத இருந்தார். இதுகுறித்து புத்தாண்டில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 2023-ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம் இது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும், புதிய நம்பிக்கைகளுக்கான உறுதிமொழியையும் ஏற்கும் நேரம் இது. நான் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தை எழுத தொடங்கி உள்ளேன்.
அரசியலில் இருந்து வெளியேறிய பிறகு அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் வெளியானதும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவியது. இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார். நான் வெளியிட்ட டுவிட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை வைத்து சிலர் வேறுமாதிரி புரிந்துள்ளனர். நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும்.
இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறிதான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் டுவிட்டரில் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.
- தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு
- மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுகுறித்து துணைக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
'ஒரே நாடு ஒரே வரி' என்பது போன்ற முழக்கங்களை எழுப்புவது எளிது. ஆனால் செயல்படுத்துவது கடினம். 'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படும் அளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான், உண்மையிலேயே அது 'ஒரே நாடு ஒரே வரி'.
ஜி.எஸ்.டி. கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். நிஜமாகவே கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகின்ற கூட்டமோ, கவுன்சிலோ இருந்தால், இழப்பீடு தொகை குறித்த விவாதமும் இந்த கவுன்சிலில் தான் நடைபெற வேண்டும். தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரோ, மத்திய அரசோ முடிவெடுத்து, உண்டு, இல்லை என்று சொல்வது நியாயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது.
- சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி :
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த முறை நான் டெல்லி வந்தபோது வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினேன். அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதராக இருந்துள்ளார். உலக பொருளா தாரத்தின் கவனம் இந்தியா மீது இருக்கும் சூழ்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அது தொடர்பாக அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்த ஆட்சி தொடங்கும்போது நிதி நிலைமை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதை படிப்படியாக சரிசெய்து, கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும் குறைத்தோம். இந்த ஆண்டும் அந்த செயல்பாடு தொடர்கிறது.
மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும், தற்போதைய புதிய அறிவிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. அதைப்போல தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக கூடுதல் நிதி கேட்டும் கோரிக்கை வைக்கவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது. மத்திய அரசின் பங்களிப்பு 4 சதவீதம் வரை இருந்தது. தற்போது 3 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






