என் மலர்
உலகம்
- சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பீஜிங்:
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவி 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது.
இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.
- பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசினார்
- டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவார். அண்மையில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று டிரம்ப் கூறியது சர்ச்சையானது.
மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து டிரம்ப் பேசிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ளன.
பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து பேசிய டிரம்ப், "இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார்" என்று பேசினார்.
டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
- வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
- நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட் டார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம். தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம். மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும்போது, தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து, பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை மடக்கிப் பிடித்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை மடக்கிப் பிடித்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்ததால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தியாவில் 50-60 கோடி மக்கள் தான் இந்தி மொழி பேசுகினறனர்.
- இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்
சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் . டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் புதின் பங்கேற்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டார்.
இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், இந்திய வருகை குறித்து பேசிய புதின், "சில நாட்களுக்கு முன் இந்தியா சென்றேன். சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை, 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அங்கு ஒரு மொழி பேசும் மக்கள் குறித்து இன்னொரு மொழி பேசும் மக்களுக்கு தெரியாது. ஆனால் இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்" என்று தெரிவித்தார்.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் ஊடகங்களை பயன்படுத்த தடை. மீறி அவர்களுக்கு கணக்கு உருவாக்க அனுமதித்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
- மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
- குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.
அரசுக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மேலாளர், லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று தூக்கிலிடப்பட்டதாக நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018 க்கு இடையில் பல திட்டங்களை வாங்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவாக அவர் பெரும் அளவில் லஞ்சம் பெற்றதாகக் கண்டறியப்பட்டது.
அவர் 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.
- பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதேநேரம் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- மழலையர் பள்ளி மீது நடத்திய தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ:
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சண்டையிட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் துணை ராணுவம் தெற்கு கோர்டோபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மற்றும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழலையர் பள்ளி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 குழந்தைகளும் அடங்குவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.
- ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று அந்த அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 மாடி கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதால் வானத்தில் அடர்ந்த கரும்புகை எழுந்தது. இந்த கரும்புகை எழும்பியதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து என்று கூறுவார்.
- அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்.
வாடிகனின் கத்தோலிக்க திருசபையின் தலைவராக கடந்த 2012 முதல் செய்யப்பட்டு வந்தவர் போப் பிரான்சிஸ். நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் இந்த ஆண்டு ஏப்ரல் 21 காலை காலமானார்.
அவரது விருப்பப்படி அவரின் உடல் வாடிகனுக்கு வெளியே அவருக்கு பிடித்தமான புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சேரிகளின் போப் என்று அன்போடு அழைக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடைய மறைவு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

யார் இந்த போப் பிரான்சிஸ்?
அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.
அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.
2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்

சேரிகளின் போப்
ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.
அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

சீர்திருத்தவாதி
பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.
வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.
ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.
இறுதி செய்தி
மறைவுக்கு முன் போப் பிரான்சிஸ் உலகத்திற்க்கு வழங்கிய தனது கடைசி ஈஸ்டர் செய்தியில்,
"எவ்வளவு பெரிய மரண தாகம், கொலைக்கான தாகம், நம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல மோதல்களில் நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, குடும்பங்களுக்குள்ளும் கூட, எவ்வளவு வன்முறையை நாம் காண்கிறோம்! பாதிக்கப்படக்கூடியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது சில நேரங்களில் எவ்வளவு அவமதிப்பு இழைக்கப்படுகிறது!.
இந்த நாளில், நாம் அனைவரும் புதிதாக நம்பிக்கை வைத்து, நம்மை விட வித்தியாசமானவர்கள், அல்லது தொலைதூர நாடுகளிலிருந்து வந்து, அறிமுகமில்லாத பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டு வருபவர்கள் உட்பட மற்றவர்கள் மீது நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க விரும்புகிறேன்! ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்று தெரிவித்திருந்தார்.

புதிய போப்:
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கு வாடிகனில் உலகெங்கிலும் உள்ள 250 கார்டினல்கள் கூடினர். அதில் வாக்களிக்க தகுதியான 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் வெளியுலக தொடர்புகளை துண்டித்துக்கொண்டு தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
முதல் வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

இது புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கிறது. புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் ஆவார். மே 8 அன்று போப் ஆக பதவியேற்றிக்கொண்ட இவர் தனக்கு போப் லியோ XIV என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
- எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் இன்னும் விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும்.
- பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முப்படைகளின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-
வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, முப்படைகள் ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் அதன் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது அவசியம்.
எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் இன்னும் விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும். இதனால் இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது.
எந்தவொரு சுய-ஏமாற்றம் அல்லது அனுமானத்திற்கும் இந்தியா பலியாகக்கூடாது. பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு. ஆனால் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை யாரும் சோதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.






