என் மலர்
உலகம்

2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா
- வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
- நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட் டார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம். தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம். மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும்போது, தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து, பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






