என் மலர்
உலகம்
- 2 மினி பஸ்கள் மோதிய வேகத்தில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.
- பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள ப்ரோகோவா என்ற கிராமத்தில் 2 மினி பஸ்கள் மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதில் பஸ்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஐவரி கோஸ்ட்டில் பாழடைந்த சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெற்றோரை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
- பெற்றோர் வற்புறுத்தியதான் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்றுள்ளார்.
பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்கணும்... வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது.
திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
வடக்கு வியட்நாமை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவருக்கு காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் வற்புறுத்தியதன் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்தே இந்த நடைமுறை அறிமுகமாகி உள்ளது.
வாடகைக்கு சென்ற 25 வயதான நபர் கூறும்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக "போலி காதலனாக" வேலை செய்து வருகிறேன். தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிம்மிற்குச் செல்வது, சமைக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பாடும் திறன் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்துவது, தோற்றம் மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
- அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது
- நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
சியோல்:
தென் கொரியாவில் கடந்த 3-ந்தேதி அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.
பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அரசை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், அவசரநிலை முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் அதிபரின் சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் பிறப்பித்த ராணுவ சட்டத்தை பாராளுமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ அவசரநிலையை திரும்ப பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.
இதற்கிடையே தென் கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இத்தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
300 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். இன்னும் 8 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. யூன் சுக் இயோலுக்கு எதிராக அவரது கட்சியின் தலைவரே உள்ள நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் அவசர நிலையை அறிவித்ததற்கு அதிபர் யூன் சுக் இயோல் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது:-
அவசரகால ராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு ராணுவச் சட்டப் பிரகடனம் இருக்குமா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
அதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். இந்தப் பிரகடனத்தால் ஏற்படும் எந்தவொரு சட்ட மற்றும் அரசியல் பொறுப்புச்சிக்கல்களையும் நான் தவிர்க்க மாட்டேன்.
எனது பதவிக்காலம் உள்பட நாட்டை எவ்வாறு ஸ்திரப்படுத்துவது என்ற முடிவை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு எனது கட்சியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு நான் தலை வணங்குகிறேன். மக்களுக்கு நான் ஏற்படுத்திய ஏதேனும் கவலைகளுக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
- காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
லண்டன்:
உலகம் முழுவதிலும் உள்ள பொது போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாதது, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து முழுவதும் ஜி.எஸ்.எம்.ஆர். எனப்படும் ரேடியோ அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இது ஓட்டுனர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இடையே பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.
இதில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் தாமதமாக சென்று சேர்ந்தன. குறிப்பாக தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் செல்லும் எலிசபெத் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பரபரப்பாக இயங்கும் காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து ரேடியோ அமைப்பில் ஏற்படும் கோளாறை சரிசெய்தனர். அதன்பிறகே ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.
- புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.
- குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக அமைந்துள்ளது செல்போன்... உணவு, தூக்கம் இல்லாமல் கூட இருந்திடலாம்.. ஆனால் செல்போன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது என்றாகிவிட்டது.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல ஆய்வு முடிவுகள் வெளிவந்தாலும் அதனை கண்டுகொள்வதில்லை. இதனால் அதிரடி நடவடிக்கையில் ஸ்பெயின் அரசு இறங்கி உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் விற்கப்படும் செல்போன்களில் எச்சரிக்கை வாசகங்களை விரைவில் பார்க்கலாம். அதாவது, செல்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதில் எழுதப்பட்டிருக்கும். புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் போல.
செல்போன் உபயோகிப்பதை 'பொது சுகாதார தொற்றுநோய்' எனக்குறிப்பிட்டுள்ள அரசு, நாட்டு மக்கள் அதிக நேரம் மொபைலை உபயோகிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முன்னெடுப்பை எடுக்க உள்ளது.
இதில் மொபைல் போன்களின் தீய விளைவுகள் பற்றி இடம்பெறும். இதற்காக 250 பக்க அறிக்கை தயாரிக்க 50 பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு 3 வயது வரை டிஜிட்டல் சாதனம் கொடுக்கக்கூடாது. 6 வயது குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செல்போன் கொடுக்க வேண்டும். இது தவிர, 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணையம் இல்லாத போன்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார் எலான் மஸ்க்.
- வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க்கை முக்கிய துறையின் தலைவராக நியமித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கும் இவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. டொனால்டு டிரம்பிற்கு முதலில் இருந்தே தொழில் அதிபரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்ததோடு, பிரசாரத்தோடு அணிவகுத்து சென்றார்.
இதனால் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் முக்கிய துறையான திறன் துறைக்கு (Department of Government Efficiency) எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை தலைவராக நியமித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் 270 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டிம் மெலன் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியிருந்தார். தற்போது டொனால்டு டிரம்பின் பிரசார நிதிக்கு எலான் மஸ்க் 270 மில்லியன் டாலர் வழங்கி, அதிக நிதி வழங்கிய தனி நபர் என்பதில் முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்கா பிஏசி-க்கு (America PAC) 238 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இந்த அரசியல் நடவடிக்கை கமிட்டி டிரம்பிற்கு ஆதரவாக நிதி சேகரித்தது.
அதேபோல் கருத்தடை தொடர்பான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முன்னெடுத்தார். இது தொர்பான விளம்பரத்திற்கு உதவும் வகையில் 20 மில்லியன் டாலர் கூடுதலாக நன்கொடை வழங்கியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை பார்வையிட எலான் மஸ்க் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று டொனால்டு டிரம்ப் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரகசிய அறைகளில் பொக்கிஷங்கள் இருக்கும். புத்தகங்களை பொக்கிஷங்களாக கருதுவது வெகுசிலரே!
- புத்தக அறை பற்றிய அவரது கனவை பலரும் பாராட்டினார்கள்.
நீங்கள் ஒரு பழமையான, பாரம்பரிய வீட்டை விலைக்கு வாங்கினால் அதன் எல்லா ரகசியங்களையும் அறிந்து வைத்திருப்பீர்களா என்ன? அப்படி ஒரு வீட்டில் வசித்த இளம்பெண், திடீரென அங்கு ஒரு ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்து உள்ளார்.
அதை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி உள்ளது. நைகோல் கிளேர் எனப்படும் அந்த பெண்மணி, "இந்த வீட்டில் 120 ஆண்டுகளாக திறக்கப்படாத ரகசிய அறை இருக்கிறது. அதை உங்களுக்காக திறக்கிறேன்" என்று வீடியோவில் காட்டுகிறார். உள்ளே பாழடைந்த ரகசிய அறையின் படிக்கட்டுகள் தெரிகிறது. அதன்பின்னர் அங்கே குறுகிய அறைக்குள் ஏராளமான புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதையும், பழமையான ஷோபாக்கள் கிடப்பதாகவும் காட்சி காட்டப்படுகிறது.
ரகசிய அறை திறக்கப்படுவது உண்மை என்றும், புத்தக அறையாக காட்டப்படுவது எனது கற்பனை. இருந்தாலும் அப்படியொரு நூலகம் இருக்க வேண்டும் என்பது என் கனவு என்று அந்த பெண்மணி பதிவு வெளியிட்டு உள்ளார். ரகசிய அறைகளில் பொக்கிஷங்கள் இருக்கும். புத்தகங்களை பொக்கிஷங்களாக கருதுவது வெகுசிலரே! புத்தக அறை பற்றிய அவரது கனவை பலரும் பாராட்டினார்கள். அவரது பதிவு 97 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி உள்ளது.
- 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.
- பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும்
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், வருங்காலம் குறித்த தனது கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்.
அவரது எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும், இது உலகையே உலுக்கக்கூடும். நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும். இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.

அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.
நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன.

அவரது கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் [அது ஒரு விளையாட்டு நிகழ்வாக இருக்கலாம்] போது தங்களை வெளிக்காட்டுவார்கள்.
மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார்.
- அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
- மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.
காம்போ சடங்கு
இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
மார்செலாவுக்கு என்ன ஆனது?
சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.
மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் அலெப்போ
- ஹோம்ஸ் நகரை கைப்பற்றினால் டமாஸ்கஸ் நோக்கி எளிதில் முன்னேற முடியும்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.
ஆசாத்தை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் ஆசாத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
அல் கொய்தாவுடான் நெருங்கிய தொடர்பில் இருந்த இவ்வமைப்பு ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ளது. கடந்த வாரம் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் படையினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்தது. அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிய நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

சிரியாவுக்கு ஆதரவாக மீண்டும் ரஷியா ராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைநகர் டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நேற்றைய தினம் ஹமா நகரையும் கைப்பற்றி உள்ளனர்.

ஹமா[hama] நகரம் தலைநகர் டமாஸ்கஸ் - அலெப்போ இடையிலான நேரடி இணைப்புப் பாதை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் ஹமா நகரம் சென்றுள்ளது. கிழக்கில் உள்ள இரண்டு நகர்களை தொடர்ந்து தற்போது மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் [homs] நகரைக் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைக்கிறது. இந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் பட்சத்தில் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுவது எளிதாக அமையும்.
- ஒரு நபருக்கு $300 [ 25 ஆயிரம் ரூபாய்] முதல் $400 [33 ஆயிரம் ரூபாய்] வழங்கப்படும்
- லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியவில் தஞ்சம் அடைந்தனர்
லெபனானில் இஸ்ரேலுடனான 14 மாத கால போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டாலருக்கு [சுமார் 42 கோடி ரூபாய்] மேல் ரொக்கமாக ஹிஸ்புல்லா விநியோகித்துள்ளதாக அவ்வமைப்பின் தற்போதைய தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.
ஒரு நபருக்கு $300 [25 ஆயிரம் ரூபாய்] முதல் $400 [33 ஆயிரம் ரூபாய்] வரையிலான வீதத்திலும் 233,500 பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு $77 மில்லியனுக்கும் [சுமார் 51 கோடியே 98 லட்சம் ரூபாய்] அதிகமான தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். தலைநகர் பெய்ரூட்டில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வாடகையாக $6,000 மற்றும் தலைநகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு $4,000, வீடுகளை இழந்தவர்களுக்கு $8,000 வீதம் ஹிஸ்புல்லா ஒதுக்கியுள்ளது.

நைம் காசிம்
இஸ்ரேல் தாக்குதலால் அதிக சேதத்தைச் சந்தித்த தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் தெற்கு மற்றும் ஷியா மக்கள் அதிகம் உள்ள கிழக்கு லெபனான் பகுதிகளுக்கு பெரும்பான்மையான நிவாரண தொகை சென்று சேர்கிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பண ஆதாரமாக இருக்கும் ஈரான் உதவியுடன் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. காசாவுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3500க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். அவருக்கு பின் நைம் காசிம் தலைவரானார்.
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியவில் தஞ்சம் அடைந்தனர். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இணைந்து ஏற்படுத்திய போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும் முந்தைய தாக்குதல்கள் லெபனான் முழுவதும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. போர் நிறுத்தனத்தின் பின் அனைவரும் மீண்டும் தத்தமது இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

ஐநா மற்றும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி , 14 மாத கால சண்டையில் லெபனானில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 3.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழு என்பதையும் தாண்டி ஹிஸ்புல்லா லெபனானில் குறிப்பிடத்தகுந்த அரசியல் சக்தியாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
- விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள்.
மனமா:
தமிழக மீனவர்கள் 28 பேர் கடந்த செப்டம்பர் மாதம் மீன்பிடிக்க சென்றபோது, பக்ரைன் நாட்டின் கடல் பகுதியில் எல்லை தாண்டி சென்றனர். இதையடுத்து அவர்கள் 28 பேரையும் பக்ரைன் அரசு கைது செய்தது.
இந்த நிலையில் எல்லை தாண்டி சென்றதாக பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்பட உள்ளதாக நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூசுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராபர்ட் புரூசுக்கு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீங்கள் எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடிதம் எழுதி இருந்தீர்கள். பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட அந்த மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
அவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






