என் மலர்
உலகம்

பக்ரைனில் கைதான தமிழக மீனவர்கள் 28 பேர் வருகிற 10-ந்தேதி விடுவிப்பு
- இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
- விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள்.
மனமா:
தமிழக மீனவர்கள் 28 பேர் கடந்த செப்டம்பர் மாதம் மீன்பிடிக்க சென்றபோது, பக்ரைன் நாட்டின் கடல் பகுதியில் எல்லை தாண்டி சென்றனர். இதையடுத்து அவர்கள் 28 பேரையும் பக்ரைன் அரசு கைது செய்தது.
இந்த நிலையில் எல்லை தாண்டி சென்றதாக பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்பட உள்ளதாக நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூசுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராபர்ட் புரூசுக்கு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீங்கள் எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடிதம் எழுதி இருந்தீர்கள். பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட அந்த மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
அவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






