என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரைன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
    • விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள்.

    மனமா:

    தமிழக மீனவர்கள் 28 பேர் கடந்த செப்டம்பர் மாதம் மீன்பிடிக்க சென்றபோது, பக்ரைன் நாட்டின் கடல் பகுதியில் எல்லை தாண்டி சென்றனர். இதையடுத்து அவர்கள் 28 பேரையும் பக்ரைன் அரசு கைது செய்தது.

    இந்த நிலையில் எல்லை தாண்டி சென்றதாக பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்பட உள்ளதாக நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூசுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராபர்ட் புரூசுக்கு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீங்கள் எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடிதம் எழுதி இருந்தீர்கள். பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட அந்த மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.

    அவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பக்ரைன் விமானத்தில் பயணம் செய்த சென்னை பெண் மாரடைப்பால் மரணமடைந்தார். இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இவர் பக்ரைனில் உள்ள மகனை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் சென்னை திரும்புவதற்காக விமானத்தில் வந்தார்.

    அதிகாலை 3 மணி அளவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது வசந்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு விமான பெண்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் வசந்தா மயங்கினார்.

    இதற்கிடையே விமானம் சென்னையில் தரையிறங்கியது. தயாராக இருந்த மருத்துவ குழுவினர் வசந்தாவை மீட்டு பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிந்தது.

    இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் யுஏஇ, பக்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. #AsianCupfootball
    சார்ஜா

    4 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. 

    இந்த நிலையில் தரவரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113-ம் நிலை அணியான பக்ரைன் அணியுடன் நேற்று மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், பக்ரைன் அணி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்தியாவின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

    கூடுதல் நேரத்தில் பக்ரைன் வீரர் ஜமார் ரஷீத் அடித்த ஒரு கோல் வெற்றி கோலாக மாறியது. இந்திய அணி வெறும் 3 புள்ளிகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. யுஏஇ, பக்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. #AsianCupfootball
    பக்ரைனில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. #Bakriniparliamentaryelections
    துபாய், 

    பக்ரைனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள், தேர்தலை புறக்கணிக்க விடுத்த அழைப்புக்கு மத்தியில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    வளைகுடா நாடுகளில் ஒன்று பக்ரைன். அங்கு சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் ஹமாத்தின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் அரசியலமைப்பின் கீழான மன்னராட்சியை ஏற்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் கொண்ட அரசு அமைக்க வேண்டும் என்று ஷியா பிரிவு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையொட்டி 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக அந்த எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 24-ந்தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

    இந்த தேர்தலில் ஷியா பிரிவு எதிர்க்கட்சியான ஷியா அல் வெபாக் மற்றும் மதச்சார்பற்ற வாத் கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன.

    எனவே இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தி அழைப்பு விடுத்தன. இந்த தேர்தல் கேலிக்கூத்தானது, நம்பகத்தன்மையற்றது என கூறி ஜனநாயக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

    இதுவும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக 6 பேர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷியா அல் வெபாக் கட்சியின் முன்னாள் எம்.பி. அலி ரஷீத் அல் அஷீரியும் அடங்குவார்.

    இந்த அஷீரியும், அவரது குடும்பத்தினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும் 40 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 506 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பெண் வேட்பாளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    தற்போதைய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களில் 23 பேர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியில் உள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரங்கள்தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று மன்னர் ஹமாத், மக்களை கேட்டுக்கொண்டார். இதே போன்று வேட்பாளர்களும், மக்கள் ஓட்டு போட்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு மத்தியிலும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

    முக்கிய எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலின் மூலம் அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். #Bakriniparliamentaryelections
    அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர். #IndianWorkers
    புதுடெல்லி:

    பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய அரேபிய நாடுகளில் பணிபுரிய இந்தியாவில் இருந்து ஏராளமானோர் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த 6 நாடுகளிலும் சேர்ந்து 2017-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 22 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக டெல்லி மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆர்.டி.ஐ. என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்திய மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-

    அரேபிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மத்திய மனித உரிமைகள் மற்றும் பொதுநல அமைப்பு, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அப்போது 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இதுநாள் வரை பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மரணமடைந்த இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை கேட்டது.

    அரேபிய நாடுகள் உள்பட அனைத்து வெளிநாடுகளுக்கும் சென்று பணிபுரியும் இந்தியர்களின் விவரம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சேகரிக்கப்பட்டது.

    2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இந்திய பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 410.33 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது. அரேபிய நாடுகளில் மட்டும் 209.07 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த புள்ளி விவரப்படி 2012-ம் ஆண்டு முதல் இதுவரை அரேபிய நாடுகளில் 24 ஆயிரத்து 570 இந்திய பணியாளர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த எண்ணிக்கையானது முழுமை அடைந்த எண்ணிக்கை அல்ல. எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். இந்த காலங்களில் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் சராசரியாக இறந்துள்ளனர்.

    இவ்வாறு தன்னார்வ அமைப்பு நிர்வாகி வெங்கடேஷ் நாயக் கூறி உள்ளார். #IndianWorkers
    பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கத்தார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுள்ளார். #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    துபாய்:

    பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.  இதனால், அல் வெஃபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.



    இந்த நிலையில், பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கத்தார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    கத்தார் நாடு, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு பக்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Bahrain #SushmaSwaraj
    மனாமா:

    இரு நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பக்ரைன் சென்றடைந்தார். அப்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபா மனாமா விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

    இதையடுத்து நேற்று மாலை, பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார்.



    இந்நிலையில், இன்று பக்ரைன் பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவுடன் நேரில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. #Bahrain #SushmaSwaraj
    2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மனாமா விமானநிலையத்தில் பக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார். #SushmaSwaraj #Bahrain
    மனாமா:

    2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பக்ரைன் வந்தடைந்தார். இந்த பயணத்தில் பக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபாவுடனான உயர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.



    மேலும், பல்வேறு உயரதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் இருநாட்டு உறவுகள் குறித்தும், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் திறந்துவைக்க உள்ளார்.#SushmaSwaraj #Bahrain
    ×