search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget bill"

    புதுவை சட்டசபை கூட்டத்தை வருகிற 30-ந் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். அன்று எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும். #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவைக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி வர தாமதம் ஆனதால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

    4 மாத காலத்துக்கு தேவையான பணத்தை மட்டும் ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததை அடுத்து கடந்த 2-ந் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு பட்ஜெட் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும்.

    ஆனால், கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே பட்ஜெட் நிறைவேற்றப்படாமலேயே கடந்த 19-ந் தேதி சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    அதன் பின்னர் கவர்னர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அதில் ஒரு நிபந்தனை விதித்து இருந்தார்.

    புதுவையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தார்.

    ஏற்கனவே சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு தலைவர்களை சந்திப்பதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்றனர்.

    இதனால் உடனடியாக சட்டசபை கூட்டத்தை நடத்த முடியவில்லை. டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் இன்று புதுவை திரும்பினார்கள். மற்றவர்கள் இன்று இரவு திரும்புகிறார்கள்.

    எனவே, நாளை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ.க்கள் 3 நாட்களாக டெல்லியில் இருந்ததால் தங்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி இருக்கிறார்கள்.

    இதனால் சட்டசபை கூட்டத்தை வருகிற 30-ந் தேதி நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளனர். அன்று எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் அந்த மசோதா கவர்னருக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்து மத்திய உள்துறைக்கு அனுப்புவார். உள்துறை அனுமதி அளித்ததும் பட்ஜெட் அமலுக்கு வரும்.

    ஆனால், கவர்னர் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையில் கூறி இருக்கிறார். அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி எழுகிறது.

    அவ்வாறு அனுமதிக்கவில்லை என்றால், கவர்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் பட்ஜெட் மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கலாம். இதனால் பட்ஜெட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

    அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது.

    பொதுவாக அந்தந்த மாத சம்பளம் அந்த மாதத்தில் இறுதி நாளில் வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் (ஜூலை) சம்பளம் 31-ந் தேதி வழங்கப்பட வேண்டும்.

    இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய 4 மாத சம்பளம் கடந்த பிப்ரவரி மாதத்துக்கும் சேர்த்து 4 மாதங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    எனவே, இந்த மாதத்துக்கான அரசு ஊழியர் சம்பளத்துக்கு பட்ஜெட்டில் இருந்துதான் நிதி எடுக்க வேண்டும். கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.

    அது மட்டும் அல்ல, கவர்னர் அனுமதி அளித்தாலும் கூட இனி இந்த மாதம் 31-ந் தேதி சம்பளம் வழங்குவதற்கு கால அவகாசம் இல்லை.

    30-ந் தேதி சட்டசபை கூட்டம் நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அன்றே அனுப்பி வைக்கப்படும். அதற்கு அன்றைய தினமே கவர்னர் ஒப்புதல் அளித்தாலும் பின்னர் உள்துறைக்கு செல்ல வேண்டும். அங்கிருந்தும் அனுமதி வர வேண்டும். இதற்கு ஓரிரு நாள் காலம் தேவைப்படலாம்.

    பொதுவாக மாத கடைசி நாளில் சம்பளம் வழங்குவதற்கு 25-ந் தேதியே சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியை கருவூலத்துறை மேற்கொள்ளும். 28-ந் தேதிக்குள் பணிகள் அனைத்தையும் முடித்து வங்கிக்கு பட்டியலை அனுப்பி வைத்து விடுவார்கள்.

    அதன்படி மாத இறுதி நாளில் சம்பளம் வழங்கப்படும். இனி 30-ந் தேதி அனுமதி கிடைத்தால் அதன் பிறகு சம்பள பட்டியலை அனுப்ப முடியாது. எனவே, ஒன்றிரண்டு நாட்கள் கால தாமதத்துக்கு பிறகே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

    ஒருவேளை கவர்னர் அனுமதி வழங்கவில்லை என்றால் அவர் எப்போது அனுமதி வழங்குகிறாரோ அதன் பிறகுதான் சம்பளம் வழங்க முடியும்.

    இது மட்டும் அல்ல, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாது. அரசு திட்ட பணிகளுக்கும், மற்ற செலவுகளுக்கும் நிதி இருக்காது. எனவே, ஒரு நெருக்கடியான நிலை புதுவையில் உருவாகி இருக்கிறது.

    இதற்கிடையே அரசிடம் மீதமாக இருக்கும் வேறு ஏதாவது நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கலாமா என உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    அவ்வாறு எந்தெந்த துறைகளில் உபரி நிதி இருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. #PondicherryAssembly
    ×