என் மலர்tooltip icon

    உலகம்

    • பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து அதனிடம் இருந்து தனது மனைவியை மீட்க போராடினார்.
    • காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கனடாவின் போர்ட் செவன் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் வளர்ப்பு நாய்களை தேடி வீட்டின் வெளியே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு பனிக்கரடி பெண் மீது பாய்ந்து தாக்கி உள்ளது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து அதனிடம் இருந்து தனது மனைவியை மீட்க போராடினார். அப்போது கரடி அவரை கடித்து காயப்படுத்தியது. இதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடவும், கரடி அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியது. காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரெயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள்.
    • வீடியோ ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

    ரஷியாவை சேர்ந்தவர் கேத் சும்ஸ்கயா. பிரபல மாடல் அழகியான இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 30 லட்சம் பேர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தோழிகள் 3 பேருடன் இணைந்து குளியல் அறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். இதுதொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். அதில் அரைகுறையாக உடம்பை மூடியபடி, 'ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்தவாறு அவர்கள் 4 பேரும் மெட்ரோ ரெயிலுக்குள் ஏறுகிறார்கள்.

    பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரெயிலில் ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு லூட்டி அடிக்கிறார்கள். இந்த வீடியோ ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.



    • விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரசை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார்.
    • வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரை சேர்ந்த பெண் சாரா பூன் (வயது 47). இவரும் ஜார்ஜ் டோரஸ் (42) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வீட்டுக்குள் கண்ணாமூச்சி விளையாடினர். இருவரும் அதீத மதுபோதையில் இந்த விளையாட்டை விளையாடினர். விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரசை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார்.

    பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் சாரா, காதலன் தாமாக சூட்கேசில் இருந்து வெளியே வருவார் என நினைத்துக் கொண்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை எழுந்து காதலனை தேடினார். பின்னர் அவரை சூட்கேசுக்குள் வைத்து பூட்டியது நினைவு வந்து பதறியடித்துக் கொண்டு சூட்கேசை திறந்தார். அப்போது ஜார்ஜ் டோரஸ் சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தார். அவர் மூச்சு திணறலுக்கு ஆளாகி இறந்தது தெரியவந்தது.

    இந்த விவகாரத்தில் சாராவை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதில் சாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • இந்தப் பட்டியலில் பாரிஸ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

    லண்டன்:

    யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 100 சிறந்த நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பாரிஸ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

    கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தியது, சுற்றுலா சலுகைகளை வழங்கியதால் மக்களைக் கவர்ந்த நகரங்களில் பாரிஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

    மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன.

    நியூயார்க் (6), ஆம்ஸ்டர்டாம் (7), சிட்னி (8), சிங்கப்பூர் (9), பார்சிலோனா (10) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் கெய்ரோ உள்ளது. ஜுஹாய் (சீனா) 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98-வது இடத்திலும் உள்ளது.

    • இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
    • மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

    ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அறியப்படாத நோய் காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நோய் கடந்த நவம்பர் 10 முதல் காங்கோவில் இதுவரை 300 பேரை பாதித்துள்ளது. இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடையாளம் காணப்படாத காய்ச்சல் போன்ற நோய் தென்மேற்கு காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. நோயின் தன்மை குறித்து கண்டறிய குவாங்கோ மாகாணத்திற்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

    சோப்பு போட்டு கைகளை கழுவவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், தகுதியான சுகாதார பணியாளர்கள் இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை தொடுவதை தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா பிராந்திய அதிகாரி பிபிசியிடம், "ஆய்வக விசாரணைகளுக்காக மாதிரிகளை சேகரிக்க தொலைதூர பகுதிக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளோம்" என்று கூறினார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று சிவில் சமூகத் தலைவர் சிம்போரியன் மன்சான்சா கூறினார்.

    • வங்கதேசத்தின் தேசத்தந்தை என ஷேக் ஹசீனாவின் தந்தை அழைக்கப்படுகிறார்.
    • முஜிபுர் ரஹ்மான் படம் வங்கதேசம் கரன்சியில் இடம் பெற்றுள்ளது.

    வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் கேட்டு தங்கியுள்ளார்.

    அவருக்கு எதிராக கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா தந்தை முஜிபுர் ரஹ்மான் வங்கதேச நாடு உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அவரை நாட்டின் தேசத்தந்தை என அழைப்பார்கள்.

    வங்கதேச நாட்டின் கரன்சியில் முஜிபுர் ரஹ்மான் படம் இடம் பெற்றுள்ளது. தற்போது அவரது புகழை குறைக்கும் வகையில் கரன்சியில் இருந்து நீக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.

    டாக்கா 20, 100, 500 மற்றும் 1000 கரன்சிகளை பிரிண்ட் செய்ய மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கரன்சிகளில் முஜிபுர் ரஹ்மான் பெயர் இடம் பெறக்கூடாது. அதற்குப் பதிலாக மதம் சார்பான கட்டமைப்புகள், பெங்காலி பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின்போது தீட்டப்பட்ட Graffiti ஆகியவை கரன்சியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்து வெளியாகியுள்ளது.

    நான்கு வடிவிலான கரன்சியின் டிசைன் மாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தின்போது முஜிபுர் ரஹ்மான சிலை அவமதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    • மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்தது.
    • இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

    நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக இம்ரான் கான் மீது புதிதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இஸ்லாமாபாத் காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி நவம்பர் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டது. இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.

    போராட்டத்தின் அங்கமாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் நவம்பர் 26 அன்று இரவு டி-சௌக் அருகே வந்தபோது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டனர்.

    இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவரான நொரீன் நியாசி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இம்ரான் கான் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்த தேசிய பாகிஸ்தான் ஊழல் எதிர்ப்பு நிறுவனம் (NAB) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு விவரங்களை சமர்பித்தது.

    • உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷியா சாதனை படைத்து வருகிறது.
    • விவசாயம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியாவை பாராட்டினார். அதிபர் புதின் பேசியதாவது:-

    இந்திய பிரதமர் மோடியிடம் 'மேக் இன் இந்தியா' திட்டம் உள்ளது. அது ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்துக்கு இணையாக உள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்ட முயற்சி பாராட்டுக்குரியது. இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார். எங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க நாங்களும் தயாராக உள்ளோம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரதமர் மோடியும், இந்திய அரசும் நிலையான தன்மைகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

    நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷியா சாதனை படைத்து வருகிறது. மேற்கத்திய பொருட்களை விட ரஷிய பொருட்கள் அதிகமாக விற்பனையாகிறது. மேலும் விவசாய உற்பத்தியும் ரஷியாவில் பெருகியுள்ளது. விவசாயம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

    1988-ம் ஆண்டு ரஷ்யா 35 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை இறக்குமதி செய்தது. கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.
    • கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ந் தேதி 47-வது அதிபராக பதவி ஏற்கிறார். அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருப்பது இது 2-வது முறையாகும்.

    இந்த நிலையில் டிரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்ததால் தங்கம், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. அத்தனையையும் விட கவனம் பெற்றது கிரிப்டோகரன்சியின் விலை உயர்வு.

    அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம் ) என்று இருந்தது. விரைவில் 1 லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.


    இந்தநிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலரை இன்று தொட்டது. இந்திய ரூபாயின் மதிப்புபடி 85 லட்சத்தை தொட்டது. இன்று எட்டியுள்ள புதிய உச்சம் கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    முதல் முறையாக 1 லட்சம் அமெரிக்க டாலரை தொட்டது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற 4 வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் நாளில் கிரிப்டோ கரன்சி 69,374 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

    • சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ்.
    • புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. கிறிஸ்துமஸ் சீசனில் இரவு நேரங்களில் சாண்டா கிளாஸ், குழந்தைகளுக்கு பல பரிசுகளை வழங்கி சுற்றி வருவதை காண முடியும்.

    அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையை பிரதிபலிக்கும் உடல் அமைப்புடன் வசீகரமாக சாண்டா கிளாஸ் வலம் வருவார்.

    கிறிஸ்தவ பிஷப்பான சாண்டா கிளாசின் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ். துர்க்கிஸ்தானில் உள்ள மயூரா நகரில் பிறந்த இவர் மலைகளில் பனி நிறைந்த இடங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நிக்கோலஸ் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் சாண்டா கிளாசின் உண்மையான முகத்தை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி உள்ளனர். சாண்டா கிளாசின் நிஜ வாழ்க்கை ஆயரான புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருந்து அவரது முகத்தை தடயவியல் ரீதியாக மீண்டும் உருவாக்கம் செய்து விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.


    இந்த புதிய ஆய்வில் முதன்மை ஆசிரியரான சிசரோ மோரேஸ் கூறுகையில், சாண்டா கிளாஸ் வலுவான மற்றும் மென்மையான முகம் கொண்டவர் என்பதை அவரது முக அமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    இது 1823-ம் ஆண்டு கவிதையில் விவரிக்கப்பட்டுள்ள அவரது முகத்துடன் ஒத்துப்போகிறது என்றார். அடர்ந்த தாடியுடன் கூடிய சாண்டா கிளாசை பற்றி நினைக்கும் போது நம் மனதில் இருக்கும் உருவத்தை நினைவூட்டுகிறது என்றும் மோரேஸ் கூறினார்.

    1950-ம் ஆண்டில் லூய்கி மார்டினோவோல் சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்தியும், மண்டை ஓட்டை 3-டியில் வரைந்தும் சாண்டா கிளாஸ் உருவத்தை வடிவமைத்ததாக கூறி உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை
    • கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் தாலிபான் அரசின் இந்த தடை உத்தரவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் ஆழமாக பாதித்துள்ளது.

    நமது அன்புக்குரிய தாயகமான ஆப்கானிஸ்தான் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக மருத்துவத் துறையில் வல்லுநர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை. பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை

    ×