என் மலர்
உலகம்
- வீட்டில் இருந்த உறுப்பினர்கள் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
மலேசியாவில் ஒரு வீட்டின் கூரை வழியாக 80 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அங்குள்ள காமுண்டிங்க் நகரில் ஒரு வீட்டில் திடீரென கூரையை பிய்த்து கொண்டு 5 அடி நீளம் கொண்ட பெரிய மலைப்பாம்பு வீட்டில் இருந்த சோபா மீது விழுந்தது.
அப்போது வீட்டில் இருந்த உறுப்பினர்கள் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மலைப்பாம்பு சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தினர் அங்கு வந்து வீட்டு கூரையின் ஒரு பகுதியை இடித்து சோபாவில் கிடந்த பாம்பை மீட்டு வன விலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையினரிடம் ஒப்படைத்தனர். வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
- வழியில் அதிக நடமாட்டம் இருந்த போதிலும் யாரும் கார் மீது இருந்த தங்க நகைகளை பார்த்துவிட்டு, அதை எடுக்காமல் செல்கின்றனர்.
- சில பயனர்கள் துபாயின் பாதுகாப்பை பாராட்டினர். சிலர் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
துபாயில் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளத்தில் பிரபலமான லெய்லா அப்ஷோங்கர் என்ற இளம்பெண் நடத்திய சோதனை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், துபாயின் பரபரப்பான சாலையில் லெய்லா அப்ஷோங்கர் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் முன்புற பேனட்டில் தனது தங்க நெக்லஸ் மற்றும் காதணிகளை வைக்கிறார். பின்னர் அந்த வழியில் செல்பவர்களை கவனிப்பதற்காக அருகே உள்ள நகைக்கடைக்கு சென்று மறைந்து கொள்கிறார். வழியில் அதிக நடமாட்டம் இருந்த போதிலும் யாரும் கார் மீது இருந்த தங்க நகைகளை பார்த்துவிட்டு, அதை எடுக்காமல் செல்கின்றனர்.
சுமார் அரை மணி நேரம் சோதனைக்கு பிறகு லெய்லா அப்ஷோங்கர் கூறுகையில், அரை மணி நேரம் ஆகியும் இந்த தங்கத்தை யாரும் தொடவில்லை. துபாய் உலகிலேயே பாதுகாப்பான நாடு இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம், இது வினோதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றதோடு விவாதத்தையும் தூண்டி உள்ளது. சில பயனர்கள் துபாயின் பாதுகாப்பை பாராட்டினர். சிலர் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார்.
- கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணி நேரம் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் ஸ்டிக்கர்களை விற்று மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லங்காஷையர் பகுதியை சேர்ந்தவர் கேலன் மெக்டொனால்ட். 17 வயதான இந்த இளைஞர் ஸ்டிக்கர்கள் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார். இதையறிந்த அவரது தாயார் கரேன் நியூஷாம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பரிசாக தனது மகனுக்கு ஒரு டிஜிட்டல் கைவினை எந்திரத்தை பரிசாக வழங்கினார். அதன்மூலம் கண்ணாடி பொருட்களில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை பேஸ்புக்கில் பதிவிட்டார். புதுமையான வடிவமைப்புடன் கூடிய இந்த ஸ்டிக்கர்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார். கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணி நேரம் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார். பின்னர் தொழில்ரீதியாக பெரிய பிரிண்டர்களை வாங்கி கடந்த ஜூலை மாதம முதல் அதிக அளவிலான ஸ்டிக்கர்களை தயாரித்து ஆன்மூலம் விற்பனை செய்தார்.
டிக்டாக் மற்றும் பிற வணிக ரீதியிலான வலைதளங்கள் மூலம் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் வரை ஸ்டிக்கர்ளை விற்பனை செய்துள்ள கேலன் மெக்டொனால்ட் மாதம் சராசரியாக ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பெற்றதிலேயே சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எனது தாய் எனக்கு கொடுத்த எந்திரம் தான். ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கிய இந்த ஸ்டிக்கர் தயாரிப்பு மூலம் நான் இந்த அளவுக்கு உயர்வேன் என்று நினைக்கவில்லை என்கிறார்.
- சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்.
- பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
சிரிய அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சிரிய எதிர்க்கட்சி போர் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் ரமி அப்துர் ரஹ்மான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து அப்துர் ரஹ்மானின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன. தலைநகரில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிரிய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.
- சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.
இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
- பூங்காவில் உள்ள ராட்டினத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஐகான் பார்க் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உறுதியானது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோ நகரில் ஒரு கேளிக்கை பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு இந்த பூங்காவில் உள்ள ஒரு ராட்டினத்தில் பலர் சவாரி செய்தனர்.
அப்போது அந்த ராட்டினம் திடீரென அறுந்து விழுந்தது. இதில் 14 வயதான டயர் சாம்ப்சன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனையடுத்து பூங்காவில் உள்ள அந்த ராட்டினத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் கேளிக்கை விடுதிக்கு இடத்தை வாடகைக்கு வழங்கிய ஐகான் பார்க் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உறுதியானது.
எனவே ஐகான் பார்க் நிறுவனம் சிறுவனின் பெற்றோருக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 600 கோடி இழப்பீடு வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
- நாடு முழுவதும் "இஸ்திஸ்கா" வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அதிபர் ஷேக் முகமது பின் சையது வலியுறுத்தி இருந்தார். அமீரகத்திற்கு மழையும், இரக்கமும் அளித்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்று பொது மக்களிடம் அவர் தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த "சலாத் அல் இஸ்திஸ்கா" சடங்கு, தண்ணீரின் முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சிறப்பு வழிபாட்டில், அஜ்மன் ஆட்சியாளர் ஷேக் உமைத் பின் ரஷீத் அல் நுவாமி, ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சாகிர் அல் குவாசிமி ஆகியோர் கலந்து கொண்டு நாடு முழுவதும் "இஸ்திஸ்கா" வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வழிபாட்டில் தெய்வீக கருணை, மழை பொழிவு, வளம் செறிந்த பயிர்கள், அதிபர் மற்றும் அவரை பின்பற்றி நடக்கும் ஆட்சியாளர்கள் ஆகியோரை பாதுகாப்பது மற்றும் தேசத்தின் தலைவர்களுக்கு தெய்வீக ஆசி கிடைக்க வேண்டும் என்று வேண்டி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
- கத்தாரில் நடந்த தோஹா மாநாட்டில் இந்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
- அமெரிக்க டாலரை பலவீனப்படுத்துவதில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை என தெரிவித்தார்.
தோஹா:
கத்தார் நாட்டில் 22-வது தோஹா மாநாடு நடந்தது. இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். கத்தார் மற்றும் நார்வே நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என கூறினார். பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக கரன்சி நோட்டுகள் அறிமுகம் என வெளிவந்த செய்தி பற்றி பேசுகையில் இதனை குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் தோஹா மாநாட்டில் பேசியதாவது:
டிரம்பின் முதல் நிர்வாகத்தின்போது, அமெரிக்காவுடன் நாங்கள் நல்ல, வலுவான உறவை கொண்டிருந்தோம்.
சில பிணக்குகள் உள்ளன. அவை, வர்த்தகம் சார்ந்தவையாக உள்ளன. டிரம்ப் அதிகாரத்தின் கீழ்தான் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது என நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இடையே தனிப்பட்ட நட்புறவு உள்ளது. அது இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான இருதரப்பு உறவுக்கு பங்காற்றியது.
இந்தியா ஒருபோதும் டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தியதில்லை என எப்போதும் கூறிவருகிறோம். பிரிக்ஸ் கரன்சிக்காக எந்தவித முன்மொழிவும் இதுவரை இல்லை. நிதிப்பரிமாற்ற விஷயங்களைப் பற்றியே பிரிக்ஸில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா எங்களுடைய மிக பெரிய வர்த்தக நட்பு நாடு. டாலரை பலவீனப்படுத்த எங்களுக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்தார்.
- நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் தேவாலயத்தை 5 ஆண்டுகளுக்குள் புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சுமார் 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு நாட்டர்டாம் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரிசின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த தேவாலய திறப்பு விழாவில் அதிபர் இம்மானுவல் மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- டாக்கா விமானநிலையத்தில் கடந்த 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைதுசெய்யப்பட்டார்.
- வங்கதேசத்தில் இந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
டாக்கா:
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்
வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர். அதில் அங்கிருந்த லட்சுமி நாராயணர் சிலை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
டாக்காவின் புறநகர் பகுதியான தோவூர் கிராமத்தில் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கம் நிர்வகித்து வந்த ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமிநாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலையும் சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளுக்கு தீவைத்தனர். அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது என கொல்கத்தா இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
- 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
- 1995 ஆம் ஆண்டு லவ் லெட்டர் திரைப்படம் அவருக்கு புகழை தேடித் தந்தது
ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார்.
அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது.

யார் இந்த மிஹோ நகயாமா?
ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு 'மைடோ ஒசவாகசே ஷிமாசு' என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
1995 ஆம் ஆண்டு அவர் நடித்த 'லவ் லெட்டர்' திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார்.

1997 ஆம் ஆண்டு 'டோக்கியோ வெதர்' படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார்.
- அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்
- முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்தது
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

ராணுவம் அங்கிருந்து வெளியேறிய நிலையில் முந்திய உள்நாட்டு போரின் போது உதவிய ரஷியா மீண்டும் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் துரிதமாக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வியாழனன்று ஹமா நகரையும் கைப்பற்றினர்.
கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
தொடர்ந்து மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகருக்கு கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் தாரா [Daraa] நகரையும் ராணுவத்திடம் இருந்து கிளர்ச்சியாளர்கள் இன்று கைபட்டறியுள்ளனர். முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்த ஒன்றாகும்.
இங்கே 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தாரா நகரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதுவே உள்நாட்டு போராக பின்னர் பரிணமித்தது.

அலெப்போ - ஹாமா ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் தாரா நகரை உள்ளூர் ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றி உள்ளதாக சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.
தாரா நகரின் 90 சதேவீதம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்ற நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது. ஜோர்டான் நகரில் எல்லையில் தாரா மாகாண பகுதிகள் அமைந்துள்ளதால் நிலைமை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த உள்நாட்டு போரின் போது நாடு முழுவதும் 500,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






