என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபலம்"

    • "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
    • தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    நாம் ஆண்டின் இறுதியை நெருங்கியுள்ள நிலையில் இந்தாண்டு மண்ணை விட்டு மறைந்த ஆனால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அதன்படி உலகெங்கிலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களின் தொகுப்பை காலவரிசைப்படி இங்கு பார்ப்போம். 

    ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன்

    தனது அரிய வகை ரத்த பிளாஸ்மா தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88), கடந்த பிப்ரவரி 17, 2025 அன்று காலமானார்.

    "Man with the golden arm" என்று அன்போடு அழைக்கப்படும் இவர், தனது 18 வயது முதல் 81 வயது வரை சுமார் 1,173 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

    இவரது ரத்தத்தில் இருந்த 'Anti-D' என்ற அரிய வகை ஆன்டிபாடி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது.

    2022 வரை உலகிலேயே அதிக பிளாஸ்மா தானம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்த ஹாரிசன், உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் பெற்றோரின் பார்வையில் ஒரு ஹீரோ ஆவார்.

    ஆகா கான் 

    இஸ்லாமின் ஷியா இஸ்மாயிலி பிரிவின் தலைவரான ஆகா கானும் (IV) இந்த ஆண்டு காலமானார். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல நற்காரியங்களை செய்த அவர் பிப்ரவரி 4 தனது 88வது வயதில் காலமானார்.  

     

    பழம்பெரும் பேட்மேன்

    ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், 'பேட்மேன்' கதாபாத்திரத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான வால் கில்மர் (65), நிமோனியா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 1, 2025 அன்று காலமானார்.

    1984-ல் 'டாப் சீக்ரெட்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'பேட்மேன் ஃபாரெவர்' மற்றும் டாம் குரூஸுடன் 'டாப் கன்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

    2014-ல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்த நிலையில், தற்போது நிமோனியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான கஸ்தூரிரங்கன் (84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஏப்ரல் 25, 2025 அன்று பெங்களூருவில் காலமானார்.

    1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராகப் பணியாற்றிய இவர், இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவர்.

    ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.

    இந்தியாவின் Tiger Man.. வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர்

    "இந்தியாவின் புலி மனிதன்" (Tiger Man of India) என்று போற்றப்படும் பிரபல வனவிலங்கு ஆர்வலர் வால்மிக் தாப்பர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக மே 31, 2025 அன்று டெல்லியில் காலமானார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் பாதுகாப்புக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவர், 1988-ல் ரந்தம்போர் அறக்கட்டளையை நிறுவி புலி வேட்டையைத் தடுக்கவும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் போராடினார்.

    வனவிலங்குகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்ட பல அரசு குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

    10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை.. மனிதநேய மருத்துவர் ரத்தினம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் (96), வயது முதிர்வு காரணமாக ஜூன் 7, 2025 அன்று காலமானார்.

    1959-ல் தனது மருத்துவப் பணியைத் தொடங்கிய இவர், ஆரம்ப காலத்தில் 2 ரூபாய்க்கும், பின்னர் தனது வாழ்நாள் இறுதி வரை 10 ரூபாய்க்கும் சிகிச்சை அளித்து வந்ததால், மக்கள் மத்தியில் "பத்து ரூபாய் மருத்துவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா

    லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான டியோகோ ஜோட்டா (28), ஸ்பெயினில் கடந்த ஜூலை 3 நடந்த கார் விபத்தில் தனது சகோதரருடன் உயிரிழந்தது கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய ஜோட்டாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது ஆகும். ரொனால்டோ அவரது மறைவுக்கு உருக்கான இரங்கலை தெரிவித்திருந்தார்.

    உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பௌஜா சிங்

    உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான பௌஜா சிங் (114), கடந்த ஜூலை 14, 2025 அன்று பஞ்சாபில் நடந்த சாலை விபத்தில் காலமானார்.

    தனது சொந்த கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    "தி டர்பண்ட் டோர்னாடோ" (The Turbaned Tornado) என்று அழைக்கப்படும் இவர், தனது 89-வது வயதில் மாரத்தான் ஓடத் தொடங்கி உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தவர் ஆவார்.

    மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன்

    உலகின் புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் (71), மாரடைப்பு காரணமாக ஜூலை 24, 2025 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் காலமானார்.

    90-களில் மல்யுத்தப் போட்டிகளை உலக அளவில் பிரபலமாக்கியதில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. தனது கம்பீரமான தோற்றம், தனித்துவமான ஸ்டைல் மற்றும் தேசபக்தி மிக்க விளம்பரங்கள் மூலம் '90ஸ் கிட்ஸ்'களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    உலகெங்கும் மக்களின் அன்பைப் பெற்ற நீதிபதி ஃபிராங் கேப்ரியோ

    அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (88), கணையப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 21, 2025 அன்று காலமானார்.

    "Caught in Providence" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற இவர், போக்குவரத்து விதிகளை மீறியவர்களை விசாரிக்கும்போது காட்டிய அதீத மனிதாபிமானத்தால் உலகின் மிகவும் கனிவான நீதிபதி என்று போற்றப்பட்டார்.

    தண்டனை வழங்குவது மட்டுமே நீதியல்ல, குற்றம் செய்தவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கருணை காட்டுவதும் நீதியே என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இவர்.

     

    ஆடை வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானி

    ரெடி-டு-வேர் ஃபேஷனில் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி, இந்த ஆண்டு செப்டம்பரில் தனது 91 வயதில் காலமானார்.

    கொரோனா போராளி பீலா வெங்கடேசன்

    தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் கடந்த செப்டம்பர் 25 அன்று காலமானார்.


    ஜேன் குடால்

    உலகப் புகழ்பெற்ற சிம்பன்சி ஆய்வாளர் ஜேன் குடால் இந்த ஆண்டு அக்டோபர் 1, தனது 91வது வயதில் காலமானார். தனது 60 ஆண்டுகால ஆய்வின் மூலம், சிம்பன்சிகளின் புத்திசாலித்தனத்தை அவர் நிரூபித்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

     இந்திய விளம்பரங்களின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே

    இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவான் என்று போற்றப்படும் பியூஷ் பாண்டே (70), உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று காலமானார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 'ஓகில்வி' (Ogilvy) நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஃபெவிகால், காட்பரி, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற 90-களின் மறக்க முடியாத பல ஐகானிக் விளம்பரங்களை உருவாக்கியவர். விளம்பர உலகில் இந்தியத் தன்மையையும், நகைச்சுவையையும் புகுத்திய இவரது சிறந்த பணிக்காக 2016-ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

    தாய்லாந்தின் ராஜமாதா

    தாய்லாந்து நாட்டின் ராஜமாதா சிரிகிட், உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 24, 2025 அன்று தனது 93-வது வயதில் காலமானார். தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான இவர், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.

    ரத்தத் தொற்று காரணமாகப் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரது உயிர் பிரிந்தது. தாய்லாந்தில் இவரது பிறந்தநாள் 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்துஜா சாம்ராஜ்யத்தின் தலைவர் கோபிசந்த் இந்துஜா

    இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா (85), நவம்பர் 3, 2025 அன்று லண்டனில் காலமானார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இரண்டாமவரான இவர், 2023-ல் தனது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் இந்துஜாவின் மறைவுக்குப் பிறகு குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

    அசோக் லேலண்ட் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்துஜா குழுமத்தை ஆட்டோமொபைல், வங்கி, தொழில்நுட்பம் என 11 துறைகளில் விரிவுபடுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், இவரது குடும்பம் பிரிட்டனின் மிகவும் செல்வந்தக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன்

    டிஎன்ஏவின் (DNA) 'இரட்டை ஹெலிக்ஸ்' கட்டமைப்பைக் கண்டறிந்த உலகப்புகழ் பெற்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97), நவம்பர் 6, 2025 அன்று நியூயார்க்கில் காலமானார்.

    1953-ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிரிக்குடன் இணைந்து இவர் வெளியிட்ட டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த ஆய்வு, உயிரினங்களின் பரம்பரைத் தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியதுடன், நவீன மருத்துவ மற்றும் தடயவியல் அறிவியலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

    இந்த வரலாற்றுச் சாதனைக்காக 1962-ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூனை உருவாக்கிய ஜாம்பவான் டான் மெக்ராத்

    உலகப்புகழ் பெற்ற 'தி சிம்ப்சன்ஸ்' (The Simpsons) கார்ட்டூன் தொடரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான டான் மெக்ராத் (61), பக்கவாத பாதிப்பு காரணமாக நவம்பர் 14, 2025 அன்று காலமானார்.

    1997-ல் வெளியான 'ஹோமர்'ஸ் போபியா' (Homer's Phobia) என்ற புகழ்பெற்ற எபிசோடுக்காக இவர் 'எம்மி' விருது வென்றவர்.

    90-களில் தொடங்கி இன்றுவரை உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இத்தொடரின் வளர்ச்சிக்கு மெக்ராத்தின் எழுத்துக்கள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

    ஈரோடு தமிழன்பன் - ஈடுசெய்ய முடியாத இழப்பு

    தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் (92), வயது மூப்பு காரணமாக நவம்பர் 22, 2025 அன்று காலமானார்.

    மரபுக் கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர், பாவேந்தர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய பெருமைக்குரியவர்.

    செய்தி வாசிப்பாளர், பேராசிரியர் எனப் பல தளங்களில் பணியாற்றிய இவர், 'சாகித்ய அகாதெமி', 'கலைமாமணி' உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    துல்சா படுகொலை: அமெரிக்க நிறவெறியின் சாட்சி

    அமெரிக்க வரலாற்றின் கருப்பு அத்தியாயமான 1921-ம் ஆண்டு 'துல்சா' (Tulsa) இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களில் மிக மூத்தவரான வயோலா பிளெட்சர் (111), நவம்பர் 24, 2025 அன்று காலமானார்.

    தனது 7-வது வயதில் அரங்கேறிய அந்த கோரமான வன்முறையில் 300-க்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டதையும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதையும் நேரில் கண்ட இவர், தன் வாழ்நாள் முழுவதும் அந்த நீதிக்காகப் போராடினார். நிறவெறியின் கோர முகத்தை உலகுக்கு எடுத்துரைத்த சாட்சியாக பிளெட்சர் திகழ்ந்தார்.

    சென்னையின் பறவை மனிதர் ஜோசப் சேகர்

    சென்னையின் "பறவை மனிதர்" என்று அன்போடு அழைக்கப்படும் ஜோசப் சேகர் (73), புற்றுநோய் பாதிப்பு காரணமாக டிசம்பர் 10, 2025 அன்று காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாகத் தனது வீட்டின் மாடியில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை ஒரு தவமாகவே செய்து வந்தார்.

    தொடக்கத்தில் "கேமரா ஹவுஸ் சேகர்" என்று அறியப்பட்ட இவர், பின்னாளில் பல்லாயிரக்கணக்கான கிளிகளுடனான தனது பிணைப்பால் "பறவை மனிதர்" என்று உலகப் புகழ் பெற்றார்.

    பதவியை உதறிய முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல்  

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 11, 2025 அன்று மகாராஷ்டிராவின் லத்தூரில் காலமானார்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் உள்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக உயரமான சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்:

    உலகின் மிக உயரமான சிலையான, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் "ஒற்றுமை சிலை"யை (Statue of Unity) வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வி. சுதார் (100), வயது மூப்பு காரணமாக டிசம்பர் 17, 2025 அன்று காலமானார்.

    மகாராஷ்டிராவின் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது அபாரத் திறமையால் இந்தியாவின் தலைசிறந்த சிற்பக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரது அரிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது.    

    • இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
    • சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனாவை உறவினர்கள் எதிர்த்தனர்.

    பாகிஸ்தானில் டிக்டாக் நட்சத்திரம் சனா யூசுப் (17) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ராலைச் சேர்ந்த சனாவுக்கு டிக்டோக்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது வீடியோக்கள் ஏராளமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனா தனது உறவினர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது ஒரு கௌரவக் கொலை என்றும் சந்தேகிக்கப்படுதுகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு, குவெட்டாவைச் சேர்ந்த ஹிரா என்ற 15 வயது சிறுமி டிக்டோக்கில் தீவிரமாக இருந்ததற்காக அவரது தந்தை மற்றும் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2016 ஆம் ஆண்டில், சமூக ஊடக நட்சத்திரம் கந்தீல் பலோச் அவரது சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    • ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.

    அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
    • அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், 48 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு.

    பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலமாக திகழ்ந்தவர் 19 வயதான மரியா சோபியா வலிம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து பிரபலமானார். மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் வெளிப்படுத்துவார். அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    19 வயதேயான மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்ச மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார்.

    சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும் அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார். 19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
    • 1995 ஆம் ஆண்டு லவ் லெட்டர் திரைப்படம் அவருக்கு புகழை தேடித் தந்தது

    ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியான மிஹோ நகயாமா [54 வயது] டோக்கியாவில் உள்ள அவரது வீட்டின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நகாயாமா நேற்று [வெள்ளிக்கிழமை] ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

    ஆனால் நேற்று வேலை நிமித்தமாக அப்பாயிண்ட்மண்ட் இருந்தபோதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார்.

    அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளிவரும் என்று தெரிகிறது.

     

    யார் இந்த மிஹோ நகயாமா?

    ஜப்பானின் சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, 1985 ஆம் ஆண்டு 'மைடோ ஒசவாகசே ஷிமாசு' என்ற நாடகத்தில் நடிகையாக அறிமுகமானார்.

    அதே ஆண்டில் அவர் தனது முதல் ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்தபோது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.

    1995 ஆம் ஆண்டு அவர் நடித்த 'லவ் லெட்டர்' திரைப்படம் நடிகையாக அவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நகயாமா சுமார் 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டார்.

     

    1997 ஆம் ஆண்டு 'டோக்கியோ வெதர்' படமும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளை தனதாக்கியவர் ஆவார். 

    ×