என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, கடந்த 27-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைப்படியே அனுமதி தரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம் என கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.
- முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
- கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?
நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோன்று தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்! என்று கூறியுள்ளார்.
- பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
- எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை.
கோபிசெட்டிபாளையம்:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
* தனது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
* நான் அமைதியாக இருப்பது அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான அறிகுறி.
* எனக்கு வழிகாட்டி முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியில் பயணிக்கிறேன்.
* பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
* எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை என்றார்.
இதனிடையே, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி என்ன நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
- சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83 வயது) சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வார தொடக்கத்தில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.
இந்நிலையில் கார்கேவுக்கு நேற்றுமேற்கொள்ளப்பட்ட பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரூ.10 லட்சத்திற்குள் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.
எம்ஜி கோமெட் EV
நகர்ப்புற பயன்பாட்டிற்காக, இரு கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் கார் கோமெட் EV. இந்திய சந்தையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த கார் அதிகபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.
இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என இரட்டைத்திரை அமைப்பு கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா டியாகோ EV
டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும். டி.சி. பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
டாடா பன்ச் EV
இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது 315 கிலோமீட்டர்கள் வரை 'ரேஞ்ச்' வழங்கும்.
- வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது
- ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப் புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 121/2 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜெய்டன் சீல்ஸ் வீசினார். இதை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளை அடித்தார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல்-சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 188 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது அணியின் மூன்றாவது விக்கெட்டாக ஷுப்மான் கில் ஆட்டமிழந்தார். பின்னர், ராகுல், கிரீஸுக்கு வந்த துருவ் ஜூரலுடன் சேர்ந்து, கவனமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.
இந்த வரிசையில், கே.எல். ராகுல் 19 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ராகுலின் சதத்தில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
மதிய உணவு நேரத்தில், இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வேஸ்ட் வேஸ்ட் இண்டீஸ்-ஐ விட 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
தூத்துக்குடி :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது?
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
* தேர்தல் வருவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது.
* துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
* கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜயே முதல் காரணம்.
* காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தே பேச்சை தொடங்கினார் விஜய்.
* 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லையே.
* இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை இந்த முறை எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது.
* எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். எங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
- 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
- ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' வெளியாகி உள்ளது. 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வரும் நாட்களில் 'காந்தாரா சாப்டர்-1' வசூலை வாரிக்குவிக்கும் என்றும் முதல் பாகத்தை விட இப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.
- தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20-ந்தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தீபஒளித் திருநாளுக்கு குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வாங்கி தீபஒளிக்கு தயாராக முடியும்.
வழக்கமாக தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.
ஆனால், அக்டோபர் 20-ம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் 17 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை; அறிவிப்பும் வரவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசு, மிகை ஊதியம் வழங்குவதிலும் துரோகத்தைத் தொடருமோ? என்று பொதுத்துறை பணியாளர்கள் சந்தேகப்படுகின்றனர். தொழிலாளர்களின் சந்தேகம் சரியானது தான்.
தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அது அடுத்த இரு நாட்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
- அந்த சிறுவன் அம்மா, பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்தவர் குர்பஜன்கவுர். இவரது கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.
இதனால் குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்ஜீத்கவுர் தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாக அவர் தாக்கி உள்ளார்.
இதை ஹர்ஜீத்கவுரின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.
ஆனால் ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்குகிறார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை செல்போனில் வீடியோ எடுத்த அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
- கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
சென்னை:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பல் துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.
அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) 'கோல்ட்ரிஃப்' மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அங்கிருந்து அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.
அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு 'கோல்ட் ரிப்' மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்து உள்ளாா்.
- காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
- 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
புதுடெல்லி:
காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.
வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.






