என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
- கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
சென்னை:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பல் துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.
அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) 'கோல்ட்ரிஃப்' மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அங்கிருந்து அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.
அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு 'கோல்ட் ரிப்' மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்து உள்ளாா்.
- காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
- 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
புதுடெல்லி:
காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.
வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
- 20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.
காசாவில் நேற்று இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது.
அல்-மசாவியில் ஒரு உணவகத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு முதியவர், அவரது நான்கு மகன்கள் மற்றும் பேரன் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் அல்-புரேஜ் அகதிகள் முகாமில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாக்கில் ஒரு வீட்டின் மீது நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக புதன்கிழமை அன்று மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் தெற்கில் இருந்து வடக்கு காசாவுக்குச் செல்லும் வழியை அடைத்தது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தங்கள் படைகள் காசா நகரை சுற்றிவளைக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று கூறினார்.
இதற்கிடையே கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு டிரம்ப் உடைய 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதில் ஹமாஸ் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.
பதிலுக்கு, இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்து, காசாவில் ஒரு அமைதி காக்கும் படை அவர்களை மாற்றிய பிறகு படிப்படியாக தனது படைகளை வாபஸ் பெறும்.
இந்த திட்டத்தை ஏற்பது குறித்து ஹமாஸ் கலந்தாலோசித்து வரும் நிலையில் நேற்றைய தாக்குதல் பின்னடைவாக அமைந்துள்ளது.
- ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
- பரமக்குடி நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* தண்ணீர் இல்லாத காடு என கூறப்பட்ட ராமநாதபுரத்தை மாற்றி காட்டியது தி.மு.க. அரசு.
* இரண்டே ஆண்டுகளில் ராமநாதபுரம் மக்களின் குடிநீர் தேவையை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
* விரிவுபடுத்தப்பட்ட குடிநீர் திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.
* ராமநாதபுரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,105 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்படுகிறது.
* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டியவர் கலைஞர்.
* 500 கி.மீ. கிராம சாலையை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியவர் கலைஞர் கருணாநிதி.
* ராமநாதபுரத்தில் 5000 சுனாமி குடியிருப்புகள் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன.
* ஒவ்வொருவரின் தேவையையும் கனவையும் நிறைவேற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.36 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது.
* 16 முக்கிய கண்மாய்கள் ரூ.18 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும், 6 கண்மாய்கள் ரூ.4 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
* ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம், நவீன வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும்.
* ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
* பரமக்குடி நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
* பரமக்குடி நகராட்சியில் ரூ.4 கோடியில் புதிய கட்டிடம், ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* செல்வானூர் கண்மாய், சிக்கல் கண்மாய்களும் மறு சீரமைக்கப்படும்.
* கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும்.
* மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
* கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுக்கு கோரிக்கை வைக்க கூட மத்திய அரசு மறுக்கிறது.
* மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நமது மீனவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.
* கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார், அதை மறுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேசவில்லை.
* நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சணை, பள்ளிக்கல்வித்திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்.
* தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
* தமிழகத்தில் இயற்கை பேரிடர் தாக்கிய போது தமிழகத்திற்கு வராத மத்திய நிதி அமைச்சர்.
* பெருந்தலைவர் காமராஜரை கொல்ல ஆர்.எஸ்.எஸ் முயன்றது.
* தவறு செய்தவர்கள் அனைவரும் தவறில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வுடன் சேருகின்றனர்.
* கூட்டணியில் ஆள் சேர்க்கும் அசைன்மென்டை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
- மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.
அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.
இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
- புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
- காவல்துறை தங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் என்பதால் 2 பேரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
கரூரில் கடந்த 27 ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் மதியழகன் மற்றும் மத்திய நகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர். புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
காவல்துறை தங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் என்பதால் 2 பேரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புஸ்சி ஆனந்த் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூர் தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.
மேலும் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்ய கோவை , சேலம் திருப்பூர் ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள்.
- நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்தது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி (நேற்று முன்தினம்) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் தங்கம் விலை ஏற்ற-இறக்கத்தை சந்தித்தது.
காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, நேற்று முன்தினம் விலையிலேயே நேற்று விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்ம் 10,840 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 86,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.161-க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600
30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-10-2025- ஒரு கிராம் ரூ.164
01-10-2025- ஒரு கிராம் ரூ.161
30-09-2025- ஒரு கிராம் ரூ.161
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
- மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார்
டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். '
அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டாலராக சற்று இறக்கம் கண்டது.
இதனால் அவர் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலும், மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சொத்துகளின் இந்திய மதிப்பு ரூ.44.33 லட்சம் கோடியாகும். இதே வேகத்தில் அவரது சொத்து மதிப்புகள் உயர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தனிநபரின் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் உலகின் முதல் டிரில்லியனராக அவர் இடம் பிடிப்பார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக ஆரகிள் நிறுவனர் லாரி எலிசன், ரூ.31 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
- சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்திய மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்களுடன் அவர் சந்திப்பு நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை பாஜகவை கொந்தளிக்க செய்துள்ளது.
நேற்று அங்கு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா உலகிற்கு வழங்க நிறைய இருக்கிறது. அதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். ஆனால் தற்போது இந்தியாவின் கட்டமைப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா கவனிக்க வேண்டிய சில அச்சுறுத்தல்கள் உள்ளன.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தியா பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகளைக் கொண்டது. ஜனநாயக அமைப்பே அனைவருக்கும் இடமளிக்கிறது. ஆனால், இப்போது ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
சீனா மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியா பரவலாக்கப்பட்ட, பல மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட சிக்கலான அமைப்பைக் கொண்டது. சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது. நமது நாட்டின் அமைப்பு இதை ஏற்றுக்கொள்ளாது" என்று கூறினார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எக்ஸ் மூலம் விமர்சித்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, "ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை பிரச்சாரத் தலைவர் போல வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தைத் தாக்குகிறார். அவர் இந்திய தேசத்துடன் சண்டையிட விரும்புகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
- டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
மோட்டோ ஹவுஸ் நிறுவனம் விஎல்எப் மாப்ஸ்டர் 135 என்ற ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12.1 பிஹெச்பி பவர், 11.7 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒரு லிட்டருக்கு 46 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, டிஆர்எல்-களுடன் கூடிய டூயல் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், காம்பேக்ட் வைசர், ஆங்குலர் சைடு பேனல், எல்இடி டெயில் லைட்டுகள், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5 இன்ச் டிஎப்டி கலர் டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், 12 வாட்ஸ் யுஎஸ்பி சார்ஜர் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய விஎல்எப் மாப்ஸ்டர் விலை ரூ.1.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகச் சலுகை விலை சுமார் ரூ.1.29 லட்சம் எனவும், இந்த சலுகை முதல் 2,500 முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும்.
சென்னை:
கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.






