என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
- வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, கடந்த 27-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைப்படியே அனுமதி தரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம் என கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.






