என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார்.
- அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஜெட் விமானம், காலை 10:30 மணியளவில், முகமதாபாத் பகுதியில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தில் டேக்-ஆஃப் செய்யும் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த புதர்களுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார். அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இன்று 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டுள்ளது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கியது.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 252 ரன்களை வெற்றி இல்லாக்க இந்தியா நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து, இந்திய அணி தரப்பில் பிரதீகா ராவல் 37, சினேகா ரானா 33 மற்றும் ஸ்மிருதி மந்தனா 23 ரன்களும் எடுத்தன.
- சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
- இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.
ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரை தலிபான் பாதுகாப்புப் படையினர் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கமான பாஸ்போர்ட் சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
அவர் தன்னை இந்தியர் என்று கூறியவுடன், தாலிபான் வீரர் உடனடியாகச் சிரித்து, அவரை வரவேற்று, ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்ல அனுமதித்தனர்.
அந்த வீரர், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்கள் போல என்று கூறியதுடன், இந்திய பயணியை தேநீர் அருந்த அழைத்தார். இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.
"ஆப்கானிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இப்படித்தான் நடத்துகிறது" என்ற தலைப்பில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பைசன்' 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இன்று 6 மணிக்கு 'காளமாடன் கானம்' பாடல் வெளியாக உள்ளதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
அதன்படி, காளமாடன் கானம் பாடல் வெளியாகியுள்ளது.
- ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த வருடம் காந்தி ஜெயந்தி தினத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி இருந்தார்.
ஜன் சுராஜ் கட்சியும் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண உள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலுக்கான 51 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜன் சுராஜ் கட்சி வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட இந்த பட்டியலில் கணிதவியலாளர், மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வேட்பாளர்களில் 16% முஸ்லிம்கள் மற்றும் 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வேட்பாளர்களில், பாடப் புத்தகங்கள் தயாரிக்கும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கணிதவியலாளர் கே.சி. சின்ஹா (குமஹ்ரார் தொகுதி) மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒய்.பி. கிரி (மஞ்ஜி தொகுதி) ஆகியோர் அடங்குவர்.
முசாபர்பூர் தொகுதியில், கிராமப்புற சுகாதார விழிப்புணர்வில் பணியாற்றிய மருத்துவர் அமித் குமார் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறவில்லை. அவரது சொந்தத் தொகுதியான கார்கஹரில் ரித்தேஷ் ரஞ்சன் என்பவர் ஜன் சுராஜ் போட்டியிட உள்ளார்.
எனவே லாலு பிரசாத் உடைய ஆர்ஜேடி கட்சியின் கோட்டையான ராகோபூரில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
- எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அரசுப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால் ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி!
திமுக அரசின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம்.
இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, "ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை" எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன் அவர்கள். ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் திமுக அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற விளம்பரம் வேறு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு இது பேருதவியாக இருக்கும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
- மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவும் இணைந்துள்ளது.
கர்நாடகாவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தும்.
சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு இது பேருதவியாக இருக்கும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவின் மூலம், பீகார், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவும் இணைந்துள்ளது.
- பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.
இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன்.
பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும்.
ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம் " என்று தெரிவித்தார்.
இதன்பின் பேசிய கெய்ர் ஸ்டார்மர், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும்.
உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்காமன். காமன்வெல்த், ஜி20 இல் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்' என்று கூறினார்.
- கரூரில் என்ன பூதமா உள்ளது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,"கரூரில் என்ன பூதமா உள்ளது" என கேள்வி எழுப்பினார்.
கரூரில் விஜய் உயிருக்க ஆபத்து உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? யார் வேண்டுமானாலும் கரூர் வரலாம். கரூர் மக்கள் ரொம்ப அன்பானவர்கள். கரூரில் என்ன பூதமா உள்ளது
அதிமுகவும்- தவெகவும் வெவ்வேறு பாதையில் உள்ள கட்சிகள், பொறுத்திருந்து பார்ப்போம். விசிகவினர் திருமாவளவன் கண்முன்னரே ஒருவரை அடித்ததற்கு இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதியப்படவில்லை.
விசிக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு திருமாவளவன் தான் பொறுப்பு. ஆதவ் அர்ஜூனாவை கட்சியை விட்டு அனுப்பிவிட்டு ஏன் இன்னும் திருமாவளவன் அவருடன் நட்பு பாராட்டுகிறார்?
ஆதவ் அர்ஜூனாவை தவெகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு திருமாவளவன் பாஜக மீது குறை கூறுவதா? கோவையில் பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தததை வரவேற்கிறோம்.
ஆனால், எம்ஜிஆர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை ஏன் வைக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.
- 93-வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.
- இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று விழாவின் ஒரு பகுதியாக இரவு விருந்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயரால் பல உணவுகளுக்கு பெயரிடப்பட்டது.
மெனுவில் உள்ள உணவுகள்: ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தல் மக்கானி, ஜகோபாபாத் மேவா புலாவ், பகவல்பூர் நான்.
இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.
மெனுவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 22 இல் 26 உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் தனது காலணியை வீச முயன்றார்.
- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய தலைமை நீதிபதி, "வழக்கறிஞர் ஒருவர் தன் மீது காலணி வீசிய சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன். ஆனால், அது ஒரு மறக்க வேண்டிய கடந்தகால நிகழ்வாகவே பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.
- ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.
- 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மீனவர்கள் கைது சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், இன்று (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இன்று (09.10.2025) அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






