என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி..!- நயினார் நாகேந்திரன் கண்டனம்
- ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
- எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அரசுப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால் ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி!
திமுக அரசின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம்.
இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, "ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை" எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன் அவர்கள். ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் திமுக அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்ற விளம்பரம் வேறு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






