என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அதிமுக கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை.
- அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுக காரங்க எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க.. இதுல அடுத்த கட்சிக் கொடியைப் பிடித்து ஆட்டுவோமா? அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது. தவெக கொடியை தூக்கி பிடிக்கும் அளவிற்கு அதிமுகவினர் இழிபிறவிகள் அல்ல" என்று தெரிவித்தார்.
- மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
- கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் பிற மாநிலங்களில் தாரிக்கப்டும் ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் மருந்துகளில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் ம.பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன.
இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு டெல்லி அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பின் நலன் கருதி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது.
- கிங்டம் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
- நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
- ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.
உத்தரகாண்டை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி (IFS) அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி அரசின் பல்வேறு மட்டங்களில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக அறியப்படுபவர் ஆவார்.
இந்த ஊழல்கள் குறித்து அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறார்.
ஆனால் இந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடங்கல் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மத்திய அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) க்கு எதிராக சஞ்சீவ் சதுர்வேதி தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் வர்மா விலகியுள்ளார். இது, சதுர்வேதியின் வழக்குகளில் இருந்து ஒரு நீதிபதி விலகுவது இது 16வது முறையாகும்.
இவருக்கு முன், கடந்த செப்டம்பர் 26 அன்று, நீதிபதி ரவீந்திர மைதானியும் இதேபோல எந்தக் காரணமும் குறிப்பிடாமல் விலகினார்.
சதுர்வேதி தொடர்ந்த வெவ்வேறு வழக்குகளில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் இரண்டு நீதிபதிகள் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் எட்டு நீதிபதிகள் இதுவரை விலகி உள்ளனர்.
நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்காமல் விலகுவதற்கான காரணம் கூறப்படாத நிலையில் ஊழலை மூடி மறைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு தனிநபரின் வழக்குகளில் இருந்து இவ்வளவு நீதிபதிகள் விலகுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கில் சதம் விளாசினார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.
இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10 சதம் ஆகும்.
இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கில் (10 சதம்) படைத்துள்ளார். அந்த பட்டியலில் ரோகித் 9 சதங்களுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 7 சதங்களுடன் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தில் உள்ளார்.
மேலும் ஒரு காலண்டர் ஆண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய கேப்டன்கள் வரிசையில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் சுப்மன் கில் 5 சதங்களுடன் 3 - வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 2017-ம் ஆண்டிலும் 2018-ம் ஆண்டிலும் 5 சதங்கள் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளார். இவர் 2016 -ம் ஆண்டில் 4 சதங்கள் விளாசியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் 1997-ம் ஆண்டு இந்திய கேப்டனாக 4 சதங்கள் அடித்திருந்தார். அவர் சாதனையை கில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார்.
- எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியொட்டி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது ரேவதி என்ற பெண்ணிடம் அவர் கலந்துரையாடினார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தில் ஊராட்சியில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள். அதே போல் முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார். அதற்கு அப்பெண் 24 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர் என கூறினார்.
தொடர்ந்து அவர் சுயஉதவி குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். இக்குழுவானது ஊராட்சி அளவில் தொழில் கடனாக ரூ.1.50 லட்சம் வழங்கியது. அதில் நான் 2 தையல் எந்திரம் வாங்கி கடை நடத்தி வருகிறேன். அதில் இருந்து வரும் வருமானத்தில் எனது குடும்ப செலவிற்கும், குழந்தைகள் படிப்பு செலவிற்கும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போல் உள்ள 2 மகளிருக்கு இந்த தொழிலை கற்று கொடுத்து அவர்களையும் வேலைக்கு வைத்துள்ளேன். என்னாலும் 2 பேருக்கு வேலை வழங்கி சம்பளம் வழங்கி வருவதை பெருமையாக தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து 3 கோரிக்கைகளை அவர் தெரிவித்தார். அதில் எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது. அதனை புதுப்பித்து தர வேண்டும். அதேபோல், கொண்டாங்கியில் இருந்து ஈச்சத்திரம் சாலையில் மின்விளக்கு அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொண்டாங்கி முதல் தொகைப்பாடி வரை சாலை பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் எங்கள் மகளிர் குழு கொரோனா காலத்தில் ரூ.7 லட்சம் கூட்டுறவு சங்கத்தில் வங்கி கடன் வாங்கி இருந்தோம். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு அந்த கடனை தள்ளுபடி செய்தீர்கள் அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்ற தெரிவித்தார்.
- பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியுள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார்
பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்ததாக மங்கத் சிங் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது.
மங்கத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்தது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
- காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27-ந் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ந்தேதி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளார்.
மண்டபம் உள்ளிட்ட தகவல்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் த.வெ.க.வினர் மனு வழங்க உள்ளனர்.
காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
- உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது.
- நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்?
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவினார்.
இந்த பதிவை பகிர்ந்து மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "திரு. மோடி, பெண் பத்திரிகையாளர்களை பொது மேடையில் இருந்து விலக்கி வைக்க நீங்கள் அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் அவர்களுக்காக நிற்க பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள்.
நமது நாட்டில், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமாக பங்கேற்க உரிமை உண்டு. இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கிலும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,"இந்திய மண்ணில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் கண்ணியம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை இது பிரதிபலிக்கிறது. சமத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக நாடான இந்தியாவை உலகம் பார்க்கும்போது, இதுபோன்ற பாகுபாடுகள் இங்கு நடைபெற அனுமதிப்பதன் மூலம் நாம் என்ன செய்தியை அனுப்புகிறோம்?
மோடி அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பதில்களைக் கோருகிறோம். நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்? அல்லது மௌனமும், புறக்கணிப்பும், பாகுபாடும் தான் உங்கள் அரசின் பெண்களுக்கான தொலைநோக்கு பார்வையாக இருக்கிறதா?
திரு. மோடி, திரு. ஜெய்சங்கர் அவர்களே உங்கள் சொந்த நாட்டில் இந்தியப் பெண்களின் அடிப்படை கண்ணியத்தைக் கூட நீங்கள் பாதுகாக்க முடியாத அளவுக்கு நீங்கள் எத்தனை பலவீனமாக இருக்கிறீர்கள்?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
- They Call Him OG திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
- பிரியங்கா மோகனின் சில கவர்ச்சிகர புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
பவன் கல்யாண் நடிப்பில் They Call Him OG திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
வழக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் இப்படத்தில் முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இதனிடையே பிரியங்கா மோகனின் சில கவர்ச்சிகர புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், இணையத்தில் பரவிய கவர்ச்சி புகைப்படங்கள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று பிரியங்கா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என்னை தவறாக சித்தரிக்கும் வகையில் சில Al புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொய்யான காட்சிகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். AI-ஐ நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
- பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.
சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
* தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
* தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.
* யாருடனும் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.
* இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது.
* பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார்.
- பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.
பிரான்சில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.
இதற்கிடையே கடந்த அக்டோபர் 5 அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இதனால் பிரதமராக செயல்பட்ட பதவியை ராஜினாமா செய்வதாக அக்டோபர் 6 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரான்சின் பிரதமராக செபாஸ்டியன் லு கார்னௌயில் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜினாமா செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு லு கார்னௌயில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருகிறார் . கடந்த சில நாட்களாக மேக்ரோன் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள லு கார்னோ , அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தனது கடமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
ஜூன் 2024 இல் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்து பிரான்ஸ் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் பிரான்சின் வளர்ந்து வரும் கடனை நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளன.
அதேவேளை, லு கார்னோவில்லின் மறு நியமனம், 2027 வரை நீடிக்கும் தனது அதிபர் பதவியை இழப்பதைத் தவிர்ப்பதற்கான மேக்ரோனின் கடைசி முயற்சியாகக் கருதப்படுகிறது.






