என் மலர்tooltip icon

    இந்தியா

    சொந்த மண்ணில் அவமதிப்பு.. இந்திய பெண்களின் கண்ணியத்தை புறக்கணித்த மோடி - ராகுல் காந்தி சீற்றம்
    X

    சொந்த மண்ணில் அவமதிப்பு.. இந்திய பெண்களின் கண்ணியத்தை புறக்கணித்த மோடி - ராகுல் காந்தி சீற்றம்

    • உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது.
    • நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்?

    ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.

    நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.

    இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவினார்.

    இந்த பதிவை பகிர்ந்து மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "திரு. மோடி, பெண் பத்திரிகையாளர்களை பொது மேடையில் இருந்து விலக்கி வைக்க நீங்கள் அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் அவர்களுக்காக நிற்க பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள்.

    நமது நாட்டில், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமாக பங்கேற்க உரிமை உண்டு. இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கிலும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில்,"இந்திய மண்ணில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் கண்ணியம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை இது பிரதிபலிக்கிறது. சமத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக நாடான இந்தியாவை உலகம் பார்க்கும்போது, இதுபோன்ற பாகுபாடுகள் இங்கு நடைபெற அனுமதிப்பதன் மூலம் நாம் என்ன செய்தியை அனுப்புகிறோம்?

    மோடி அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பதில்களைக் கோருகிறோம். நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்? அல்லது மௌனமும், புறக்கணிப்பும், பாகுபாடும் தான் உங்கள் அரசின் பெண்களுக்கான தொலைநோக்கு பார்வையாக இருக்கிறதா?

    திரு. மோடி, திரு. ஜெய்சங்கர் அவர்களே உங்கள் சொந்த நாட்டில் இந்தியப் பெண்களின் அடிப்படை கண்ணியத்தைக் கூட நீங்கள் பாதுகாக்க முடியாத அளவுக்கு நீங்கள் எத்தனை பலவீனமாக இருக்கிறீர்கள்?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×