என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரும் 17-ந்தேதி நேரில் சந்திக்க விஜய் முடிவு
- கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
- காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27-ந் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ந்தேதி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளார்.
மண்டபம் உள்ளிட்ட தகவல்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் த.வெ.க.வினர் மனு வழங்க உள்ளனர்.
காவல்துறை அனுமதி அளித்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.






