என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
- அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக ஆடம்பர பொருட்கள் மீது சாமானியர்களுக்கு அலாதி ஆசை உண்டு. ஆனால் அவற்றின் அதிக விலை காரணமாக அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவது இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் தங்களது புத்திசாலித்தனம் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதேசமயம் அவர்களது தனித்துவமான அந்த செயல் மற்றவர்களையும் ஈர்க்கிறது. அந்தவகையில் பாகிஸ்தானின் சாலையில் சென்ற ஒரு சொகுசு கார் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது சிவப்பு நிறமுள்ள அந்த காரின் பின்புறத்தை பார்க்கும் எவரும் அதனை விலையுயர்ந்த கார் என்றே நினைப்பார்கள். ஆனால் அதன் முன்புறமோ மோட்டார் சைக்கிள் மூலம் பொருத்தப்பட்டு அந்த கார் இயங்கியது.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- காந்தார படத்தின் மூலமாக பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
- ஜரந்தய தெய்வா கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காந்தார படத்தின் மூலமாக கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.
- மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
புதுடெல்லி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டும் கடந்த 10-ந்தேதி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அதேநேரம் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதன்படி உள்ளரங்கில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை இந்த ஆண்டு பூங்கா ஒன்றில் பிரதமர் மோடி நடத்தினார்.
இதைப்போல, பிரதமர் மோடி மட்டுமே மாணவர்களுடன் கலந்துரையாடி வந்த நிலையில், இந்த முறை பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன், தனது சிறுவயது போராட்டங்கள் மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
நேற்று ஒளிபரப்பப்பட்ட இந்த கலந்துரையாடலில் தீபிகா படுகோன் மாணவர்களிடம் கூறியதாவது:-
போட்டிகளும், ஒப்பிடுதலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கிறேன். போட்டி ஒன்றும் மோசமானது கிடையாது. மாறாக நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டு பலத்தை அதிகரிக்கவும், பலவீனத்தை மாற்றவும் உதவுகிறது.
எனவே போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அவர்களை விட வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.
மன அழுத்தம் கண்ணுக்கு புலப்படாது. ஒரு காலத்தில் நான் ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருந்தேன். 2014-ம் ஆண்டு ஒரு நாள் மயங்கி விழுந்து விட்டேன். அப்போது பெங்களூருவில் இருந்து என்னை பார்ப்பதற்காக மும்பை வந்த எனது அம்மா, நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்து விட்டார்.
எனக்கு எதாவது நடந்ததா? என அவர் கேட்டார். ஆனால் நான், 'அப்படி எதுவும் இல்லை, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் முற்றிலும் ஆதரவற்றவளாகவும், நம்பிக்கையற்றவளாகவும் உணர்கிறேன். எனக்கு இனி வாழ விருப்பமில்லை' எனக்கூறினேன். அப்போது எனது நிலையை உணர்ந்து கொண்ட என் அம்மா ஒரு மனநல மருத்துவரை அழைக்க முடிவு செய்தார். அப்போது நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன்.
மனநலம் என்பது நம் நாட்டில் ஒரு களங்கமாக இருந்தது. இந்த நோயைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நான் மிகவும் சுதந்திரமாகவும், லேசாகவும் உணர ஆரம்பித்தேன். அங்கிருந்து, மனநல விழிப்புணர்வை நோக்கிய எனது பயணம் தொடங்கியது. மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
எனவே உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் தேர்வுக்கு முன்தினம் இரவு உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் மன அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறியுங்கள். அதை நம்பிக்கையான ஒருவரிடம் தெரிவியுங்கள்.
பிரதமர் மோடிஜி தனது 'தேர்வு வீரர்கள்' புத்தகத்தில் கூறியிருப்பது போல, நீங்கள் தேர்வுக்காக தயாராகும்போது சிறப்பாக உணரத்தொடங்குவீர்கள். ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
தூக்கம் மிகவும் முக்கியமானது. அது இலவசமாகக் கிடைக்கும் ஒரு வலிமை. வெளியே சென்று போதுமான சூரிய ஒளி மற்றும் புதிய காற்றை பெற வேண்டும்.
திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை நான் ஒரு குறிப்பிட்ட முறையில் செய்திருந்தால், அடுத்த முறை நான் அதை எப்படி வித்தியாசமாகச் செய்வது, சிறப்பாக செய்வது என திட்டமிடுவேன். அதைப்போல நீங்களும் உங்களுக்கு சவால் விட்டு செயல்படுங்கள்.
இவ்வாறு நடிகை தீபிகா படுகோன் கூறினார்.
மேலும் தனக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி கூறினார்.
- அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
- விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவு வாயிலை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அலங்கார நினைவு வாயிலை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்றிரவு நினைவு வாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
அப்போது திடீரென அலங்கார நினைவு வாயில் பொக்லைன் இயந்திரம் மீது விழுந்ததில் பொக்லைன் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒப்பந்ததாரரும் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நுழைவு வாயிலை இடித்ததால் விபத்து நேரிட்டதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பொக்லைன் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
- ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
- ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ராம் கோபால் வர்மா கொடுத்த பேட்டியில், "ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
- புதிய வருமான வரி மசோதா 536 பிரிவுகள் உள்ளன.
- மொழியை எளிமைப்படுத்துவதற்காகவே வடிவைமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961, 60 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. இதில் பல ஆண்டுகளாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனால் அதில் சில சிக்கல்களும் ஏற்பட்டன.
எனவே புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரி சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025, பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வருமான வரிச் சட்டம் 1961-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'முந்தைய ஆண்டு' என்ற வார்த்தையை, புதிய வருமானவரி மசோதாவில் 'வரி ஆண்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது, முந்தைய ஆண்டில் (2023-24) ஈட்டிய வருமானத்திற்கு, மதிப்பீட்டு ஆண்டில் (2024-25) வரி செலுத்தப்படுகிறது. இந்த முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்து நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ் வரி ஆண்டு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. மொழியை எளிமைப்படுத்துவதற்காகவே வடிவைமைக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா 536 பிரிவுகள் உள்ளன. (தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் 298 பிரிவுகள் உள்ளன). தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன, அவை புதிய சட்டத்தில் 16-ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதே நேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.
வருமான வரிச் சட்டம், 1961 கொண்டு வரப்பட்டபோது, 880 பக்கங்களைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, குறைக்கப்பட்ட வரி தகராறுகளுக்கு பங்கு விருப்பத்தேர்வுகள் மீதான தெளிவான வரிவிதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது,
''வருமான வரிச் சட்டம் 1961-ல் வருமான வரித்துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்கள் மற்றும் இணக்க கட்டமைப்புகளுக்கு பாராளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. இப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் அத்தகைய திட்டங்களை தாமாகவே அறிமுகப்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது, இது வரி நிர்வாகத்தை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது.
- சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக காலை 8.30 மணிக்கு பிறகே விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.
எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.
இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-1 (வியாழக்கிழமை)
பிறை: மேய்பிறை
திதி: பிரதமை இரவு 9.01 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: மகம் இரவு 9.47 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டி யூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-திடம்
ரிஷபம்-கவனம்
மிதுனம்-நட்பு
கடகம்-புகழ்
சிம்மம்-அமைதி
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- நன்மை
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- மேன்மை
மகரம்-முயற்சி
கும்பம்-ஆதாயம்
மீனம்-வெற்றி
- குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருவான்மியூரில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "தவெக கட்சியில் இருப்பதே குழந்தைகள் தான், அதனால் தான் குழந்தைகள் விங் என உருவாக்கி உள்ளனர். புதிதாக கட்சி ஆரம்பித்த தலைவர் ஒருவர் மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி எதுவும் இல்லை என்கிறார். ஜி.எஸ்.டி. கவுன்சில் வேறு பட்ஜெட் வேறு" என்று தெரிவித்தார்.
- குடும்பஸ்தன் திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் அப்படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பினார்.
- பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.
பாரிஸ்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில், பிரான்சில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
வாஷிங்டனில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






